நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளைத் தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கப்படுமா என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், “புதிதாக ஆட்சி அமைக்கப்போகிறவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகள். நிறைய சவால்கள் இருக்கின்றன. அந்தச் சவால்களை அவர் நிரூபிக்க வேண்டும். அவருக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகள்.
நாங்கள் மதசார்பற்றக் கூட்டணிதான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருந்தாலும் நான் எப்போதும் சொல்வதுபோல விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை அவரது வெற்றிக்கு வாழ்த்துகள்.

விஜய் எங்களுக்குப் புதியவர் கிடையாது, பக்கத்து வீட்டில் இருந்தவர், கேப்டனுடன் ஆரம்பம் முதலே பழகியவர். விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
முதல்முறையாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாகச் செல்லவிருக்கிறேன், அங்கு விருத்தாசலம் மக்களுக்காகப் பேசுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.