ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி விமானம் மூலம் கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவரை பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கு திருவனந்தபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், அதை மறைத்துவைத்த உள்ளாடை ஆகியவை ஆதாரங்களாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தன. ஆண்ட்ரூ ஸால்வதோர் தரப்புக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞரின் ஜூனியர் வழக்கறிஞராக இருந்த ஆண்டனி ராஜூ, கோர்ட்டில் உதவியாளராக பணிபுரிந்த ஜோஸ் என்பவரின் உதவியுடன் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெளியே எடுத்துவந்து, அதை வெட்டி சின்ன அளவில் தைத்து மறுபடியும் அதை கோர்ட் கஷ்டடியில் வைத்துவிட்டார். அந்த வழக்கில் உள்ளாடையின் அளவில் வித்தியாசம் இருந்ததாகக்கூறி ஆண்ட்ரூ ஸால்வதோர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ ஸால்வதோர், அவருடன் சிறையில் இருந்த சக கைதியிடம் நட்பாக பழகிய நிலையில், கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெட்டி சின்னதாக்கி தண்டனையில் இருந்து தப்பித்த விவரத்தையும் கூறினார். இந்த தகவல் வெளியே கசிந்ததை அடுத்து ஆதாரங்களை அழித்ததாக விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கோர்ட் ஊழியரான ஜோஸ் மற்றும் ஆண்டனி ராஜூ ஆகியோர் மீது 1994-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நெடுமங்காடு ஜூடீசியல் ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நடந்துவந்த நிலையில் பலகட்டங்களை கடந்து 13 ஆண்டுகளுக்குப்பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஆண்டனி ராஜூ ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராகவும் ஆகிவிட்டார். ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சி சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதையடுத்து கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதுடன் பினராயி 2.0 ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் ஆண்டனி ராஜூ. இதற்கிடையேதான் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நெடுமங்காடு ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட் அளித்த தீர்ப்பில், கோர்ட் கஸ்டடியில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது. எம்.பி, எம்.எல்.ஏ போன்ற மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் குற்ற வழக்கில் கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளுக்காக 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் முடிவடைந்த தேதியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும் அந்த சட்டம் கூறுகிறது. அதன்படி ஆண்டனி ராஜூ-வை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த ஜனவரி 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த ஆண்டனி ராஜூ, இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அங்கு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆண்டனி ராஜூவின் மனுவை ஐகோர்ட் நேற்று நிராகரித்தது. எனவே ஆண்டனி ராஜூ இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டனி ராஜூ போட்டியிடுவதற்காக திருவனந்தபுரம் தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆண்டனி ராஜூ-வுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பரிந்துரைக்கும் வேட்பாளரை நிறுத்தலாம் என எல்.டி.எஃப் கூட்டணி தீர்மானித்துள்ளது. இன்று நடைபெறும் ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கூட்டத்தில் அதுகுறித்த விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் முடிவு எட்டாமல் இருந்தால் சுயேச்சையாக பொது வேட்பாளரை நிறுத்தலாமா எனவும் எல்.டி.எஃப் கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.