தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக சூரியசக்தி மின் உற்பத்தியும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க இது பெரும் உதவியாக அமைந்துள்ளதுடன், தேர்தல் காலத்தில் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் வழிவகுத்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் 24 அன்று 54.8 மில்லியன் யூனிட்களும், மார்ச் 27 அன்று 55.6 மில்லியன் யூனிட்களும் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மின் தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி பதிவான 53.9 மில்லியன் யூனிட் என்ற சாதனையை முறியடித்து, ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. கோடையின் உச்சக்கட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த மைல்கல் எட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அந்த நாள்களில் மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் சுமார் 13% ஆகும்.

இது குறித்து மின் பகிர்மானக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஓர் ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், “அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்டக்ஷன் அடுப்புகளின் பயன்பாடும் கூடியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மின் நுகர்வு சீராக உயர்ந்து வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவாக, திங்கள்கிழமை மாநிலத்தின் மின் நுகர்வு 423.887 மில்லியன் யூனிட்டுகளாகப் பதிவானது. கடந்த 2024, ஏப்ரல் 30 அன்று பதிவான 454.32 மில்லியன் யூனிட் என்ற உச்சபட்ச தேவையையும் விரைவில் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி சராசரியாக 50 மில்லியன் யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை மின் தொகுப்பில் சேர்ப்பது, வர்த்தக மற்றும் வீட்டு நுகர்வோருக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் மின் தேவையின் சுமையைக் குறைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.
மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் தமிழகம் 1,745.24 மில்லியன் யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

மேம்பட்ட சூரியசக்தி கட்டமைப்பு மற்றும் சாதகமான வானிலை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மார்ச் 31, 2022 நிலவரப்படி, தமிழகத்தின் நிறுவப்பட்ட சூரியசக்தித் திறன் 5,303 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இது 133% அதிகரித்து, தற்போது 12,352 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சி, எதிர்கால மின் தேவையை சமாளிக்க மாநிலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.