“திமுக அரசியல் கட்சியல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி” – திருச்சியில் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் பரபரக்கிறது. தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் மாநாடு நடத்திய அடுத்த சில தினங்களில், பிரதமர் மோடி பங்கேற்ற மாநாடும் நடந்திருக்கிறது. திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திருச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் எங்களது கூட்டணியை விமர்சித்துள்ளார். ஸ்டாலின் அவர்களே, தமிழகத்தில் அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்து ஒரு வலுவான, வெற்றிகரமான கூட்டணியை அமைத்துள்ளது.

திருச்சியில் பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடி

ஆனால், உங்கள் கூட்டணி அப்படியல்ல. பல்வேறு வார்த்தைப் போர்களுக்குப் பிறகும், காங்கிரஸின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் நீங்கள் கூட்டணி அமைத்துள்ளீர்கள். அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை, நாங்கள் பரஸ்பர உணர்வோடு இணைந்துள்ளோம். வரும் தேர்தலில் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக உழைத்து மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைப்போம்.

2021 தேர்தலின் போது தி.மு.க 525 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், அதில் கால் பங்கு திட்டங்களைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிந்தவுடன் வாக்குறுதிகளை மறந்துவிடுவதுதான் தி.மு.க-வின் கொள்கை. ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வந்த அ.தி.மு.க, கொடுத்த வாக்குறுதிகளைக் காக்கும் கட்சியாகும். இன்று தி.மு.க அரசு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

நயினார் நாகேந்திரன் - டிடிவி தினகரன்
நயினார் நாகேந்திரன் – டிடிவி தினகரன்

தமிழகத்தில் என்.டி.ஏ-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி என்று ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இது சட்டமன்றத் தேர்தல். தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். 2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க-வின் 10 ஆண்டு கால பொற்கால ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பலன் பெற்றனர்.

அவர் கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கொள்கை உடையவர்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். அப்படியானால் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஏன் தனித்தனியாக இருக்க வேண்டும்? மக்களை ஏமாற்றுவதற்காகவே இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். இன்று தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகளும், திருட்டுகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த கைலாகாத தி.மு.க அரசை அகற்றுவதே எங்களது கூட்டணியின் நோக்கம். தி.மு.க என்பது ஒரு அரசியல் கட்சியல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்ற நிலையை இந்தத் தேர்தலோடு மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள்.

என்.டி.ஏ கூட்டணி
என்.டி.ஏ கூட்டணி

டெல்டா மாவட்ட விவசாய நிலங்களை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காகக் காவு கொடுத்தவர் ஸ்டாலின். ஆனால், ஜெயலலிதாவின் அரசுதான் டெல்டா பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்து விவசாயிகளைக் காத்தது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களைத் தூர்வாரினோம். முக்கொம்பு மற்றும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகளைக் கட்டினோம்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, காவிரி நதியைத் தூய்மைப்படுத்த ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற உன்னதத் திட்டத்தைப் பிரதமரிடம் கோரினேன். அவரும் அதை ஏற்று 2024 கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்த்து, ரூ. 11,250 கோடி ஒதுக்கீடு செய்தார். ஆனால், இது அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் விடியா தி.மு.க அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என ஆவேசமாக பேசினார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

4 constituencies; Udhayasuriyan symbol in 3 – DMK aligns with MDMK!

“Why did you get married in Kerala?” What did Kumbamela Monalisa say?