“வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்தது குறியீடா?” – அண்ணாமலை விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “தமிழகத்தில் காலையிலிருந்து எல்லோரும் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டுள்ளார்கள். அனைவரும் தவறாமல் வாக்களித்து, ஜனநாயக கடமையைச் செய்ய வேண்டும். யாரும் வாக்களிக்காமல் வீட்டில் இருந்து விடாதீர்கள். தமிழ்நாடு அமைதியான மாநிலம்தான். அதனால் அதிக அளவிலான வன்முறை எதுவும் இருக்காது

வெளியூர் செல்லும் பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் இன்னும் இந்த வசதிகளைச் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. கடந்த இரண்டு, மூன்று தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, நகைகள் கொடுப்பது நடந்துள்ளன.

கோவையிலும் அதிக பணப்பட்டுவாடா போன்ற சம்பவங்கள் உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால், தேர்தல் ஆணையத்திடம் மாட்டிக் கொள்கிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம் செய்ததைக் கூட பார்க்க முடிந்தது. அதையெல்லாம் வாக்காளர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

எஸ்.ஐ.ஆர். பணிகள் மிக நேர்மையாக நடந்துள்ளது. தேவையில்லாமல் வாக்காளர்களை நீக்கவில்லை, தமிழகத்தில் நடுநிலையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வழக்கமானதைக் காட்டிலும் அடுத்த கட்டத்திற்குச் சென்று விட்டது பணப்பட்டுவாடா மற்றும் நகைகளைத் தைரியமாகக் கொடுப்பதை எல்லாம் நான் பார்த்ததில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க-வினர் பல்வேறு தவறுகளைச் செய்கிறார்கள், அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகம்தான் ஜெயிக்கும், பணம் எப்பொழுதும் ஜெயிக்காது. மக்கள் சரியாக வாக்களித்தால் நல்லவர்கள் ஜெயிப்பார்கள். தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைச் சரியாகச் செய்ய தவறிவிட்டது என்பதுதான் என்னுடைய கருத்து.

தேர்தல் நடைமுறை வருவதற்கு முன்பே செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் அதனைக் கண்காணித்திருக்க வேண்டும். புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாக்காளர்கள் மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்திருப்பது ஏதேனும் குறியீடா என்ற கேள்விக்கு, “நான் போலீஸில் இருந்ததால் எப்போதும் பிரவுன் பேண்ட், அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளை சட்டை. அதனால் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் பல நேரங்களில் போடுகிறேன்.

பழைய புட்டேஜ் எல்லாம் பாருங்கள். இதே டிரெஸ் கோடை ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் என நிறைய பேர் போடுகிறார்கள். நான் போலீஸில் இருந்து வெளியே வந்தாலும், எப்போதும் என்னுடன் காக்கி இருக்க வேண்டுமென்பதற்காக 9 அவுட் அப் 10 டைம் பிரவுன் பேண்ட்தான் பயன்படுத்துகிறேன். இதற்கும் எந்தக் குறியீட்டிற்கும் சம்பந்தம் இல்லை.

என்னுடைய ஜனநாயகக் கடமையை நான் செய்து வருகிறேன். தயவு செய்து என்னை இந்தப் பக்கம், அந்தப் பக்கமும் எனச் சேர்த்து விடாதீர்கள். நான் எப்போதும் ஒரே பக்கம்தான். சரியான, நியாயமான பக்கம்தான் இருக்கிறேன்” எனப் பதிலளித்தார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“If you do not intervene in politics, politics will intervene in our lives” – SK quoting Lenin