ரூ.25,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டம்… கோவையைக் கலக்கும் செந்தில் பாலாஜி!

கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்ற பிம்பத்தைச் சுக்கு நூறாக உடைத்திருக்கிறது செந்தில்பாலாஜியின் கோவை எண்ட்ரி. கோவை முழுக்க அவருக்குக் கிடைக்கும் மக்கள் வரவேற்பு அதிமுகவைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

எதிரிகள் பரப்பும் வதந்திகளையும் அவதூறுகளையும் அசால்ட்டாக டீல் செய்யும் செந்தில் பாலாஜி, பத்திரிகையாளர்களின் எல்லா கேள்விகளுக்கும் பளிச்செனப் பதில் சொல்கிறார்.

கோவையை திமுக-வின் கோட்டையாக மாற்றுவதற்கு பம்பரமாக சுழன்று வரும் அவர், ஒரு காலை வேளையில் இளைஞர்களுடன் உரையாடினார்.

கரூரை விட்டுவிட்டு கோவைக்கு வர என்ன காரணம்?

“நான் கரூருக்குத்தான் விருப்ப மனு கொடுத்தேன். ஆனால், எங்க தலைமை இங்கே அறிவிச்சாங்க. தலைமை சொல்லும் இடத்தில் நிற்பது என் கடமை”

பலரும் சொகுசு வாகனங்கள்ல பிரசாரம் செய்யும்போது, நீங்க தொகுதி முழுக்க நடந்தே போறீங்களே?

“எல்லோர் வீட்டிலும் ஆரத்தி எடுக்கிறாங்க. ஆரத்தி தட்டோட தாய்மார்கள் கீழே நிக்கும்போது அவங்க அன்புக்கு மதிப்பு கொடுக்கணும். நடந்து போனாதான் அவங்ககூட பேச முடியும். அவங்க கோரிக்கையைக் கேட்க முடியும்.”

கோவையின் வளர்ச்சிக்கு உங்களிடம் இருக்கிற தரமான திட்டம்னா எதைச் சொல்லுவீங்க?

“கோவையில் உள்ள 10 தொகுதியிலும் திமுக எம்.எல்.ஏ-க்கள் இல்லாத போதிலும் செம்மொழி பூங்கா, பெரியார் அறிவுலம், ஜிடி நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம், தங்க நகை வியாபாரிகளுக்கு தங்க நகை பூங்கா, குடிநீர் தேவைக்கு பில்லூர் 3-ம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய தொழில் பூங்காக்கள் ஆகிவற்றை கொடுத்துள்ளோம்.

ஏர்போர்ட் விரிவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கிறது. இதுதவிர, பேருந்து நிலையம், பார்க், சாலை வசதிகள் என ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளைச் செய்துள்ளோம்.

கோவையில் நாங்கள் வென்றால் இன்னும் பலமடங்கு செய்வோம். உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வருடத்துக்கு 5,000 கோடி ரூபாய் வீதம் 5 வருடத்தில் ரூ 25,000 கோடி அளவுக்கான நிதியைக் கொண்டு வந்து கோவையை ஹை-டெக்கான நகரமா மேம்படுத்தணும்ங்கிறது என் கனவு. அது நிறைவேறும்னு நம்புறேன்”

கோவை தெற்கில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

“தெற்கு மட்டுமில்லை கோவையில் உள்ள பத்து தொகுதியிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்!”

கரூர் சம்பவத்தில் சிலர் இப்போதுவரை உங்கள்மீது குற்றம் சொல்கிறார்களே?

“பொதுமக்கள் யாரும் அப்படிச் சொல்லலை. ஏன்னா என்ன நடந்ததுன்னு எல்லாருக்குமே தெரியும். 5 முறை என்னை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வெச்ச மக்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கும்போது, நான் வேடிக்கை பாக்க முடியுமா? தகவல் தெரிஞ்சதும் உடனே போய் அவங்களுக்குத் தேவையான உதவியை செய்ய வேண்டியது என் கடமை. அதைத்தான் செஞ்சேன்.

அந்தக் கட்சியினருக்கு மக்கள் மேல அக்கறை இருந்திருந்தா அன்னைக்கு ஓடி ஒளிஞ்சுட்டு, இப்போ இப்படி பேச மாட்டாங்க. அதே கட்சியில மத்த இடங்கள்லயும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கு. அதுக்கு யார் பொறுப்பு? தங்கள் தவறை ஒத்துக்கறதுக்கோ, இனி வரக்கூடிய நாட்கள்ல சரி பண்ணுறோம்னு சொல்றதுக்கோ கூட அவங்களுக்கு மனசு இல்லயேன்னு நினைக்கும்போது உண்மையிலேயே வருத்தமா இருக்கு”

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

பாட்டிலுக்குப் பத்து ரூபான்னு உங்களை நிறைய விமர்சிக்கிறாங்களே அதுக்கு உங்களுடைய பதில் என்ன?

“எல்லோர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் வாங்குறோம். அதுக்கு ரூ.20 லிருந்து ரூ.50 வரை எக்ஸ்ட்ரா வாங்குறாங்க. அந்தப் பணம் நிர்மலா சீதாராமனுக்குப் போகுதா இல்லை மோடிக்குப் போகுதான்னு கேட்டா என்ன சொல்வாங்க? அதுவே டாஸ்மாக்ல நடந்தா என்மீது குற்றம் சொல்றது என்ன நியாயம்? ஒருசிலர் செய்யுற தப்புக்கு தலைமைதான் காரணம்னு சொல்றது அபத்தம்.

என்மீது குற்றம் சொல்ற பிஜேபியினர் தைரியமா கோர்ட்ல கேஸ் போடலாமே… அதுக்கு நான் பதில் சொல்லப் போறேன். அதைவிட்டுட்டு பொதுவெளியில பொய்யைச் சொல்லி என்னை வீழ்த்திரலாம்னு நினைக்கிறாங்க. அது நடக்காது. மக்களுக்கு எல்லாம் தெரியும்.”

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வர்றவங்களை உடனே மக்கள் நம்ப ஆரம்பிச்சிடுறாங்களே?

“அது உண்மை இல்ல. சினிமாவிலிருந்து வர்றதாலயே மக்கள் நம்ப மாட்டாங்க. அவங்க சினிமாவுல இருக்கும்போது என்ன நல்லது பண்ணாங்கன்னு பாப்பாங்க. அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி விஜயகாந்த் சார் செய்த உதவிகளை யாராவது மறக்க முடியுமா? நடிகர் சூர்யா ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கிறாங்க. ஆனா, சினிமாவுல அளவு கடந்த வருமானம் வருது.

நான் உச்சத்துல இருந்து வர்றேன்னு சொல்றவங்க, அதன் மூலம் எங்களுக்கு என்ன செஞ்சாங்கன்னு நிச்சயம் மக்கள் யோசிப்பாங்க. ஒரே பாட்டுல பெரிய பணக்காரனா ஆகிறமாதிரி சிலர், ஈஸியா முதலமைச்சராகிடலாம்னு நினைக்கிறாங்க. சினிமா வேற, அரசியல் வேற. இரண்டரை மணி நேரம் ஒரு படத்தைப் பாத்துட்டு நல்லா இல்லைன்னா கடந்து போயிரலாம். ஆனா, அரசாங்கத்தை அப்படி நடத்த முடியாது.

தொலைநோக்கு பார்வை வேணும். தமிழ்நாடு அரசியல் களத்துல ஆளுமை மிக்க தலைவர்னா அது எங்க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். எந்த இடத்துலயும் சமரசத்துக்கு இடம் கொடுக்காம நம் உரிமைகளுக்காக போராடுறார். அதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். அடுத்த முறையும் அவர்தான் முதல்வர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை!”


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Why is Iran closing the Hormuz Strait again – what is the reason for the sudden decision?

‘Shame on schools, colleges, and banks because of the village name’ – BBC field investigation in a village near Srivilliputhur