முதல் தேர்தல் தொடங்கி இன்று வரை – கோட்டையைப் பிடித்தவர்கள், கோட்டை விட்டவர்கள் யார், யார்? | Depth

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலானது பதினேழாவது சட்டமன்றத்துக்கானது.

முதல் பொதுத் தேர்தலான 1952 முதல் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தல் வரையிலான வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாமா… வென்ற கட்சிகள், தோல்வியடைந்தவர்கள், கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளின் அரசியல் பயணங்கள் குறித்தெல்லாம் கொஞ்சம் விரிவாகவே அலசலாம்.

அண்ணாதுரை
அண்ணாதுரை

இந்தியாவின் முதல் தேர்தல்… தயங்கிய திமுக!

‘தேர்தல் அரசியல் வேண்டாம்’ என்ற தந்தை பெரியாரின் கருத்தில் முரண்பட்ட அண்ணா 1949ல் திமுகவைத் தொடங்குகிறார்.

அடுத்த மூன்றாண்டுகளில் அதாவது 1952ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல். அப்போது இப்போது போல் அல்லாமல் சென்னை மாகாணமாக இருந்தது தமிழ்நாடு. முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பதவி வகித்து வந்த நிலையில் நடந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.

மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும் கிடைக்காது என்கிற குழப்பமான ஒரு மனநிலையில் தேர்தலில் போட்டியில்லை என்கிற முடிவை அண்ணா எடுத்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றது ராஜாஜி முதல்வரானார். அடுத்த சில வருடங்களில் அவர் ராஜினாமா செய்ய காமராஜர் முதல்வரானார்.

காமராஜர்
காமராஜர்

மீண்டும் காமராஜர்!

1957 தேர்தல். முதல் முறையாகக் களம் கண்ட திமுகவுக்கு 15 இடங்கள் கிடைக்க, கட்சி தொடங்கி எட்டு ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களை அனுப்பி கணக்கைத் தொடங்கியது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெல்ல காமராஜர் மீண்டும் முதல்வரானார்.

தேசியக் கட்சி வென்ற கடைசித் தேர்தல்.!

1962 ம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டசபைக்கான தேர்தலில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர சட்டசபையில் எதிர்க்கட்சி ஆனது.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

திமுகவின் எண்ட்ரி!

1967 தேர்தல் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை உண்டாக்கிய தேர்தல். தேசியக் கட்சியான காங்கிரஸ் வசமிருந்த ஆட்சியை திமுக கைப்பற்றியது. 174 இடங்களில் போட்டியிட்டு 137 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் முதல் முறையாக அரியணையில் அமர்ந்தது. அண்ணா முதல்வரானார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளில் அதாவது 1969 ல் அவர் திடீரென மறைந்ததையடுத்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.கருணாநிதி.

கருணாநிதி -  அண்ணா
கருணாநிதி – அண்ணா

முன்கூட்டி நடத்திய மு.க. ஆட்சியைக் கலைத்த மத்திய அரசு!

ஐந்தாவது சட்டசபைக்கான தேர்தல் 1972 ல் நடக்க வேண்டியது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி அந்தக் கட்சியின் வழியிலேயே தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்பினார்.

வங்கதேசப் போரில் வென்ற இந்திரா அந்த வெற்றியை அறுவடை செய்ய பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அதே வழியில் தமிழகத்திலும் பதவிக்காலம் முடிய ஓராண்டு இருந்த நிலையில், சட்டசபை கலைக்கப்பட்டது. எனவே 71ல்நடந்தது.

இந்தத் தேர்தலில் 184 இடங்களில் வென்றது திமுக. முதலமைச்சர் வேட்பாளர் எனச் சொல்லி கருணாநிதி முதல்வரான முதல் தேர்தல் இது. தொடர்ச்சியாக திமுக வென்ற ஒரே தேர்தலும்  இதுதான். இருந்தாலும் இந்த ஆட்சி பதவிக்காலம் முடிவடைவதற்கு சிலமாதங்களுக்கு முன்பாக மத்திய அரசால் கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இரட்டை இலை
இரட்டை இலை

அரியணையில் அதிமுக!

1972ல் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு அதிமுக உதயமாகி இருந்த பின்ன‌ணியில் 1977ம் ஆண்டு நடந்தது ஆறாவது சட்டசபைக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் 130 இடங்களில் வென்ற அதிமுக ஆட்சி அமைத்தது. முதல் முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

கலைத்த மத்திய அரசு, வென்று பதிலடி தந்த அதிமுக!

1977 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த அதிமுக அரசை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி மூன்றாண்டுகளில் கலைத்ததால் 1980 ல் அடுத்த தேர்தல் நடந்தது. 129 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

எம் ஜி ஆர் - ஜானகி
எம் ஜி ஆர் – ஜானகி

மீண்டும் கலைக்கப்பட்ட அதிமுக அரசு!

1984 ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி பிரதமராகப் பதவி ஏற்றார். அவர் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினைத்து உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த தீர்மானித்தார்.

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருந்த எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி கொலையின் தாக்கத்தால் அனுதாப அலை வீசலாமெனக் கணித்து தமிழக சட்டசபையையும் பதவிக் காலம்  முடியும் முன்பே கலைத்ததால் 1985க்குப் பதில் 84ல் தேர்தல் நடந்தது. 135 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது அதிமுக.

ஆனால் 1987ல் எம்.ஜி.ஆர் மரணமடைய அதிமுக பிளவுபட்டது. ஒருமாத காலம் முதல்வராகப் பதவி வகித்த ஜானகி ராமச்சந்திரன் சட்டசபையில் நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். இருப்பினும் இந்த அரசும் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்கப்பட்டு சிலமாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

நீண்ட இடைவெளிக்குப் பின் திமுக! மீண்டும் கலைத்த மத்திய அரசு!

1989 தேர்தல். அதிமுக ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாகப் போட்டியிட்டதால் ஆட்சி மீண்டும் அறிவாலயம் வசம் போனது. 1971க்குப் பிறகு அதாவது மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்தாண்டுதான் ஆட்சிக்கு வந்தது திமுக.

இருந்த போதும் 1991ல் அப்போதைய பிரதமர் சந்திரசேகரால் இந்த ஆட்சியும் பதவிக் காலம் முடியும் முன்பே கலைக்கப் பட்டது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

ஜெ தலைமையில் அதிமுக அரசு!

அதிமுக காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட, அது தேர்தலில் எதிரொலித்தது.

இரண்டே இரண்டு இடங்களில் வென்றது திமுக. அதிமுகவை ஏற்கனவே ஒன்று சேர்த்திருந்த ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானார்.

மூப்பனார் நினைவிடம்
மூப்பனார் நினைவிடம்

உடைந்த காங்கிரஸ், ரஜினி வாய்ஸ், ஆட்சி அமைத்த திமுக!

ஜெ. எதிர்ப்பு அலை தீவிரமாக வீசியது. அதைக் கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஜி. கே. மூப்பனார் வெளியேறி தமாகாவைத் தொடங்கி திமுகவுடன் சேர்ந்தார்.

ரஜினியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் தர, அதிமுக படுதோல்வியடைய மீண்டும் ஆட்சி அமைத்தது திமுக.

ஜெயலலிதா
ஜெயலலிதா

மீண்டும் ஜெ!

2001 தேர்தல். 1996ம் ஆண்டு அதிமுகவைப் படுதோல்வியடையச் செய்த தமிழக மக்கள் ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள்.

நாயகன் படத்தில் கமல் தன் பேரனிடம் சொல்வாரே ‘தெரியலையேப்பா’ என அது போல கருணாநிதியுமே அன்று காரணம் கேட்ட போது அப்படிதான் அங்கலாய்த்தார்.

 ஜெயலலிதாவைச் சந்தித்த விஜயகாந்த்
ஜெயலலிதாவைச் சந்தித்த விஜயகாந்த்

மைனாரிட்டி திமுக அரசு!

இந்தத் தேர்தலில் புதிய வரவாக தேமுதிக வந்திருந்தது. தனித்து களம் கண்டது அந்தக் கட்சி.

ஆட்சியை அதிமுக இழக்க திமுகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காதபடி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவிலேயே ஆட்சியை நகர்த்தியது.

ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பத்தாண்டுகள்!

2011 தேர்தலில் தேமுதிகவை தன் பக்கம் இழுத்த ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தார். திமுக மூன்றாவது இடத்துக்குப் போனது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் தேமுதிக –அதிமுக இடையே பிரச்னை உருவாகியது.

அடுத்து வந்த 2016 தேர்தலில் விஜயகாந்த் தனி அணியாக களம் காண இந்தக் களமும் அதிமுவுக்கே சாதகமானது. தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்தது அதிமுக.

இந்நிலையில் 2016 ல் ஜெ மறைய தொடர்ந்து கட்சி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. மீதமிருந்த ஆட்சிக் காலத்தை அவர் முதல்வராக இருந்து வழி நடத்தினார்.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்!

2021 தேர்தலில் கலைஞர் இல்லாத திமுகவும் ஜெ. இல்லாத அதிமுகவும் எதிர்கொண்டன. பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக. அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குச் சென்றது.

2026 தேர்தலில் யார் முதல்வர் யார் எதிர்க்கட்சித் தலைவர்… நாளை விடிந்தால் தெரிந்து விடும்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Savarkar wrote a petition of mercy to the British government; but…” – Savarkar’s grandson