தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று (4.1.2026) அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், “இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.
இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானபோது முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்! உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிடமாடல் அரசு!
பொங்கலோ பொங்கல்!” எனப் பதிவிட்டிருந்தார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.