“தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள், அவை வெறும் இலவச அறிவிப்புகள்” – சீமான் காட்டம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள சென்றது தொடர்பாக விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக பேசிய அவர், “தம்பி விஜய்க்கு கொளத்தூர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக அவர் தரப்பில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறை அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

விஜய்
விஜய்

களத்தில் நின்றவருக்குத்தான் அங்கு என்ன நடந்தது, என்ன குறைபாடு இருந்தது என்பது தெரியும். நான் காவல்துறையிடம் பாதுகாப்பு கோருவதும் இல்லை, அதை எதிர்பார்ப்பதும் இல்லை. அதனால் எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை. தம்பிக்கு ஏற்பட்ட குறைபாடு குறித்து அவர்தான் விளக்க வேண்டும். நான் வேறு களத்தில் இருப்பதால் அது பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை.

தேர்தல் வரும்போது இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மக்களின் வாக்குகளைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க-வின் பி டீம் என இப்படி ஒரு பிம்பத்தை தி.மு.க உருவாக்குகிறது. பி டீம் இருக்கிறது என்றால் ஏ டீம் யார்? ‘என் கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள் தான்’ என்று சொன்னது யார்? பாஜக 100 விழுக்காடு என்றால், இவர்கள் 90 விழுக்காடு. அப்படியானால் ‘ஏ டீம் தி.மு.க.

இந்த மண்ணில் பா.ஜ.க வேரூன்றக் காரணமாக இருந்ததே தி.மு.க-தான். ஹெச். ராஜாவை சட்டசபைக்குக் கூட்டிச் சென்றது யார்? வாஜ்பாய் ஆட்சி ஐந்து ஆண்டுகள் நிலையாக இருக்க ஆதரவு கொடுத்தது யார்? இதையெல்லாம் மறந்துவிட்டு, புதிதாக வருபவர்களை எல்லாம் ‘பி டீம்’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

ஸ்டாலின்

தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள், அவை வெறும் ‘இலவச அறிவிப்புகள்’. தரமான கல்வி, மருத்துவம், குடிநீர், தடையில்லா மின்சாரம், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு தருவதுதான் உண்மையான வாக்குறுதி. ஆனால், இவர்கள் சிலிண்டர் தருவேன், பணம் தருவேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல்.

கல்வி கற்க எதற்கு 20 லட்சம் கடன் கொடுக்கிறீர்கள்? பிள்ளைகளைப் படிக்க வைப்பது அரசின் கடமை. அதை விடுத்து மாணவர்களைக் கடன் வாங்க வைப்பது என்ன நியாயம்? வேலையில்லாதவர்களுக்கு 4000 ரூபாய் கொடுப்பதற்குப் பதில், அந்தப் பணத்தில் திட்டங்களைத் தீட்டி அவர்களுக்கு வேலை கொடுங்கள்.

இன்று தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியைத் தாண்டப்போகிறது. வாங்கும் கடனுக்கு வட்டி கட்டவே பட்ஜெட்டில் பெரும் பகுதி போய்விடுகிறது. அப்புறம் எப்படி ஆசிரியர்களுக்கும், செவிலியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பீர்கள்? மக்களைக் குடிகாரர்களாக்கி, டாஸ்மாக் பணத்தில் ஆட்சி நடத்துவது கேவலம். ஒரு பக்கம் 6 லட்சம் பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, மறுபக்கம் குடும்பத் தலைவிக்கு 2000 ரூபாய் கொடுப்பது என்ன மாதிரியான நிர்வாகம்?

தம்பி விஜய் பிரச்சாரத்தில் கொள்கை பற்றிப் பேசாமல், ‘எங்களுக்குள் தான் போட்டி’ என்று சொல்வதாகக் கேட்கிறீர்கள். திமுக 2000 ரூபாய் தருகிறேன் என்கிறது, இவர் 2500 ரூபாய் தருகிறேன் என்கிறார். அப்படியானால் இது 2000-க்கும் 2500-க்கும் இடையிலான போட்டிதான்.

சீமான்
சீமான்

திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே, ஏன் ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாமா? டாஸ்மாக் மூலம் இந்தச் சமூகத்தைச் சீரழித்ததற்காகவா? தம்பியாவது ‘நான் வந்தால் மதுக்கடைகளை மூடுவேன்’ என்று சொல்கிறாரா? மதுவைத் திறந்து வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்தோ, பெண்கள் பாதுகாப்பு குறித்தோ பேசுவது அர்த்தமற்றது.

“மக்களின் வளங்களை அடமானம் வைத்து, நாட்டைச் சுடுகடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் இல்லை, சுவாசிக்கக் காற்றில்லை, மணல் இல்லை, மலைகளை வெட்டி அண்டை மாநிலங்களுக்கு விற்கிறார்கள். இதையெல்லாம் ஏன் என கேள்வி கேட்பதில்லை? மார்ட்டின் லூதர் கிங் சொன்னது போல, நம் கண் முன்னே வளங்கள் கொள்ளை போவதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் சாபம் பெற்ற மக்கள் தான். அந்தச் சாபத்தை மாற்றத்தான் நாங்கள் போராடுகிறோம்.” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Puducherry: Out of 291 candidates, 66 have criminal and sexual cases! – Shocking report

How Pakistan Emerged as a Mediator in the America-Iran War?