திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ‘திடீர் என்ட்ரி’ – ஸ்டாலின் ‘டிக்’ செய்த பட்டியலில் மாற்றம்?!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க ஆகியவற்றுடன் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தாலும், அதில் சுமுகமான தீர்வை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், எதிர்பாராத விதமாக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ‘க்ராஸ் டாக்’ கட்சித் தலைவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சில தொகுதிகளில் மாற்றங்களைச் செய்திருப்பதாகவும், குறிப்பாக தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தருவதில் உதயநிதி காட்டிய பிடிவாதம், ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட பட்டியலில் கூட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஸ்டாலின்

வேட்பாளர் தேர்வில் சென்னை மாவட்டத் தொகுதிகளில்தான் உதயநிதியின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது என்கிறார்கள் உடன் பிறப்புகள். தி.நகர் தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்கலாம் எனத் தலைமை ஒரு கட்டத்தில் முடிவு செய்திருந்தது. ஆனால், கடந்த முறை கருணாநிதிக்குக் கொடுத்தது போல, இந்த முறை ராஜா அன்பழகன் தரப்பிற்கு அல்லது அவரது மகனுக்கு வழங்க வேண்டும் என உதயநிதி விடாப்பிடியாக நின்றதாக தெரிகிறது.

அதேபோல், விருகம்பாக்கம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா மீது புகார்கள் இருந்ததால், அந்தத் தொகுதியைத் தே.மு.தி.க-வுக்குத் தரலாம் அல்லது வேறு ஒருவரை நிறுத்தலாம் எனத் தலைமை யோசித்தது. ஆனால், அங்கும் தனது ஆதரவாளருக்கே சீட் வேண்டும் என உதயநிதி விடாப்பிடியாக நின்றதால் அத்தொகுதி விவகாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

அண்ணாநகர் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக அண்ணாநகர் கார்த்திக் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், சென்னை மாவட்டச் செயலாளரான சிற்றரசுவை அங்கே களமிறக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியதால், கார்த்திக்கிற்கு அண்ணாநகர் கைநழுவியுள்ளது.

அதற்கு மாற்றாக அவருக்கு வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால், வில்லிவாக்கத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரங்கநாதனின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மற்றொரு பரபரப்பான நகர்வாக, தனது தீவிர ஆதரவாளரான ஜோயலை, நடிகர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் நிறுத்தலாமா என்பது குறித்து உதயநிதி தீவிரமாக ஆலோசித்துள்ளார். இப்படி தமிழகம் முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனது ஆதரவாளர்களைக் கொண்டு வர உதயநிதி காய்நகர்த்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே ‘டிக்’ செய்து, அச்சுக்குத் தயாராக இருந்த பட்டியலில், உதயநிதி புகுந்து மாற்றங்களைச் செய்திருப்பது தலைமையைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இருப்பினும், உதயநிதியின் கோரிக்கைகளைப் புறக்கணிக்க முடியாத சூழலில், அவர் பரிந்துரைத்த இடங்களைச் சேர்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றனவாம்.

கடைசி நேரப் பரபரப்புகளால் அண்ணா அறிவாலயமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ பட்டியலில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் ‘திடீர் என்ட்ரி’ – ஸ்டாலின் ‘டிக்’ செய்த பட்டியலில் மாற்றம்?!</div>

Palani constituency should belong to BJP – BJP members engaged in coconut-breaking protest!