என்டிஏ கூட்டணி உறுதி… `லாட்டரி’ சார்லஸ் லஜகவுக்கு இரண்டு சீட்! – பாஜக-வுடன் தொடர்கிறார் ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது.

ஆனால் அந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்த முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு `என்.டி.ஏ கூட்டணி தொடர்கிறது’ என்று தெரிவித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி

அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தது பா.ஜ.க. அதையடுத்து புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி என்று புதிய கட்சியைத் தொடங்கிய `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை கூட்டணிக்குள் கொண்டு வந்த பா.ஜ.க, அவருக்கு இரண்டு தொகுதிகளை வழங்கவும் முடிவெடுத்தது.

ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க வரக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியது என்.ஆர்.காங்கிரஸ். ஆனால் ல.ஜ.க எங்கள் கூட்டணியில்தான் இருக்கும் என்று பிடிவாதமாக நின்றது பா.ஜ.க. அப்படியென்றால் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கூறிய என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க-வுக்கு தூது அனுப்பியது.

அத்துடன் பா.ஜ.க அழைத்த கூட்டணி பேச்சுவார்த்தையையும் புறக்கணித்தார் முதல்வர் ரங்கசாமி. அதனால் என்.ஆர்.காங்கிரஸ் வைத்த கோரிக்கைகளை டெல்லி சென்று அமித் ஷாவிடம் தெரிவித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதல்வர் ரங்கசாமியிடம் பேசுவதற்காக நேற்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார்.

ஆனால் அதுகுறித்த தகவல் முதல்வர் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், நேற்று மதியம் திருச்செந்தூர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார் ரங்கசாமி. அதனால் அவர் வந்ததும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று, தனியார் நட்சத்திர விடுதியில் இன்றுடன் இரண்டாவது நாளாக காத்திருக்கிறார் மன்சுக் மாண்டவியா.

ரங்கசாமி, அமித் ஷா

இந்நிலையில் இன்று மதியம் புதுச்சேரி திரும்பிய முதல்வர் ரங்கசாமி, தன்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கினார். அதையடுத்து அவர் போட்டியிடப் போகும் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வைத்து வணங்கினார்.

அதையடுத்து கோரிமேடு ஆதிதிராவிடர் அலுவலகத்தில் மங்களம் தொகுதிக்கான வேட்பு மனுவையும், சாரம் நில அளவைத் துறை அலுவலகத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். அதன்பிறகு தனியார் நட்சத்திர விடுதியில் காத்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தன் கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் லட்சிய ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அது உங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, கூட்டணியை இறுதி செய்திருக்கிறார்.

அதன்பிறகு பா.ஜ.க நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, “எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த தேர்தலிலும் அதே கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது.

முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

அத்துடன் புதிதாக ஒரு கட்சியும் இணைந்திருக்கிறது. அந்தக் கட்சி நம்முடன் இணைந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்றும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் கூறியதன் அடிப்படையில், அந்தக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்” என்றார்.

அவரையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மான்சுக் மாண்டவியா, “என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கான 14 இடங்களில் பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் ல.ஜ.க தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்” என்றும் தெரிவித்தார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Share Market: ‘Is a good time coming?’ Investors, make sure to note this right now!

Is the government destroying Vadalur Vallalar Peruvelli; what is happening in Peruvelli? | IPS Show On Road #14