`இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது திமுக; ஆயுள் தண்டனை வரை..’- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போதைய ஆட்சி அமைந்து 3 வாரங்கள் ஆகின்றன. ஆனால் அதற்குள் 40-க்கும் மேற்பட்ட கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கொதிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக எந்த இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி இவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ, அதே பாணியை தற்போதும் கையாண்டு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் பொய் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

r s bharathi dmk

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைத் திசைதிருப்பும் வகையில், சமூக ஊடகங்களில் திமுக-வுக்கு அந்தக் குற்றங்களில் தொடர்பிருக்கிறது எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்தும், தி.மு.க குறித்தும் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், உண்மைத் தன்மையை மறைத்து, வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி இந்த அவதூறுகள் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இப்படிப்பட்ட அநாகரிகங்கள் நடந்தது இல்லை. எனவே, இனிமேலும் இது போன்ற அவதூறுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க தி.மு.க தயாராக இல்லை.

தேர்தலுக்கு முன்னால் இந்த சமூக ஊடகப் பிரசாரங்களால் மக்கள் வாக்களித்தது பட்டவர்த்தமான உண்மை என்றாலும், இனி இது தொடரக் கூடாது என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. இதன் முதற்கட்டமாக, அவதூறு கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இதனைச் சட்டரீதியாகவே எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒருவர் மீது அவதூறு பரப்பினால் அதற்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால், மற்றொருவரின் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டால், அதற்குச் சட்டப்படி ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

கைது

குழந்தைகளும், சிறுவர்களும் தங்கள் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் கட்சிக்கு வாக்குகள் கிடைத்தன என்பதைப் பரவலாக அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் மீதும், மாநிலத்தின் மீதும் உள்ள அக்கறையின் காரணமாகவே தி.மு.க இதனைத் தெளிவுபடுத்துகிறது. தெரியாமல் செய்யும் தவறுகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடக் கூடாது என்பதில் தி.மு.க கவனமாக இருக்கிறது. ஒருமுறை ஆயுள் தண்டனை கிடைத்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை முற்றிலும் நாசமாகிவிடும்.

இத்தகைய சட்டப் பாதிப்புகளைத் தி.மு.க விரும்பாத காரணத்தினாலேயே, இதனை வெளிப்படையாக எச்சரித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம். சமூக ஊடகங்களில் தவறான பிரசாரங்களில் ஈடுபடுவோர் தங்கள் குடும்பத்திலோ அல்லது உறவினர்களிலோ இருந்தால், பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரிக்க வேண்டும். குறிப்பாக, அந்தந்தக் கட்சித் தலைவர்களும் தங்கள் தொண்டர்களுக்கு இதனை அறிவுறுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

An article in the Norwegian newspaper with a cartoon depicting Modi as a snake charmer – what is written?

‘Three-language policy, PM Shri schools’: What is the stance of the Tavega government?