‘ஆளுநரின் வழி நிகழும் ஜனநாயகப் படுகொலை!’ – குழியில் தள்ளப்படும் மக்களின் அதிகாரம்!

ஆளுநர் தன் பதவியின் அதிகாரத்தையும் வரையரையையும் ஜனநாயகத்துக்கு சவால்விடும் போக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அரங்கேறியிருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்துக்குள் குறுக்குசால் ஓட்ட முயன்ற எத்தனையோ ஆளுநர்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. அந்த வரிசையில் இப்போது அதிகார துஷ்பிரயோகத்தை நிகழ்த்துவதில் புதிய எல்லையை தொட்டு நிற்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர்.

விஜய் - அர்லேக்கர்
விஜய் – அர்லேக்கர்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கிறார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், தனிப்பெரும் கட்சியாக நிற்கும் தவெகவை அழைத்து ஆட்சியமைக்க செய்ய வேண்டியதுதான் ஆளுநரின் வேலை.

ஆட்சியமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, சட்டமன்றத்தில் தவெகவின் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியிருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் அர்லேக்கரோ விஜய்யிடம் பெரும்பான்மைக்கான நம்பர் உங்களிடம் இல்லை என்பதால் ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்கிறார். அத்தோடு பெரும்பான்மைக்கான நம்பரை கொண்டு வந்தால் அடுத்த நொடியை அழைப்பு விடுக்கிறேன் என்கிறார். இதன் வழி மக்களால் தனிப்பெரும் கட்சியாக ஜனநாயகப்பூர்வமாக வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பெரும்பான்மையை காலனி ஆதிக்கத்தின் எச்சமாக எஞ்சியிருக்கும் ஆளுநரின் மாளிகையில் நிரூபிக்க கோருகிறார் அர்லேக்கர்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் – தமிழக பொறுப்பு ஆளுநர்

இது எத்தனை பெரிய ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் சாட்சியாக நிற்கும் சட்டமன்றத்தில்தான் கட்சிகளின் பலம் பலவீனங்கள் நம்பர் கணக்குகளெல்லாம் சோதித்துப் பார்க்கப்பட வேண்டும். அதைவிடுத்து மக்களுக்கு எந்த தொடர்புமே இல்லாத ஜனநாயகத்தின் வழியான எந்த தேர்வுகளுமற்ற ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளின் பலத்தை தனது மாளிகையில் சோதித்துப் பார்க்க நினைப்பது அதிகார அத்துமீறல்.

நிலையான அரசை அமைப்பதற்காக இப்படி’ என ஆளுநர் தரப்பு மனசாட்சியற்ற வாதங்களை முன்வைக்கலாம். கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அளவில் எந்த ஆளுநர் மாநில அரசின் நிலைத்தன்மை குறித்து பரந்துபட்ட மனதுடன் கவலைப்பட்டிருக்கிறார்? நிச்சயமாக கிடையவே கிடையாது. பெரும்பாலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு குடைச்சலை மட்டுமே கொடுத்திருக்கின்றனர். தமிழகமே அதற்கு ஆகச்சிறந்த உதாரணம். சசிகலா முதல்வராக பதவியேற்க கடிதம் கொடுத்த போது சென்னை பக்கமே தலை வைக்காமல் மும்பையில் தஞ்சமடைந்திருந்த வித்யாசகர் ராவையும் தமிழகம் பார்த்திருக்கிறது.

பன்வாரிலால் புரோஹித்

ஆளுங்கட்சியின் அமைச்சர் போல மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வு செய்து அரசுக்கு குடைச்சல் கொடுத்த பன்வாரிலால் புரோஹித்தையும் தமிழகம் பார்த்திருக்கிறது. பாஜக அரசின் கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்து திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி, சட்டமன்றத்தில் மாநில அரசு தயாரித்து கொடுக்கும் ஆளுநர் உரையை படிக்க மாட்டேன் வருடா வருடம் அவைக்குள்ளேயே வாக்கிங் போன ஆர்.என்.ரவியையும் தமிழகம் பார்த்திருக்கிறது. இந்த அத்தனை பேருக்கு எதிராகவும் தமிழக மக்கள் தார்மீக கோபமும் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரும் தன் பெயரை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான ஆளுநர்கள் மாநில அரசின் ஸ்திரத்தன்மைக்காக வடிப்பதெல்லாம் முதலை கண்ணீரே. சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிராவில் நடந்ததை மறக்க முடியுமா? மக்களின் முடிவுக்கு மாறாக கட்சிகள் கபடி ஆட அதிகாலையிலேயே தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து ஆளுநர் பதவியேற்க வைத்தாரே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிம்மதியாக ஆட்சியமைக்க விடாமல் குழப்பங்களை விளைவிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் புகுந்து குட்டையை குழப்ப நினைத்தது, மத்திய அரசின் ஏவல் ஏஜெண்டுகளை போல செயல்படுவது.

தேவேந்திர பட்னாவிஸ்

இவற்றை தவிர சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் ஆளுநர்கள் செய்த உருப்படியான பணிகள் என்று எதையாவது பட்டியலிட முடியுமா?. அப்படி எந்தப் பணிகளையும் செய்ய வேண்டிய தேவையும் அதிகாரமும் கூட ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு பாலமாக மட்டுமே இருக்க முடியும். இங்கிருந்து அனுப்பப்படும் கோப்புகளை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநில அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடாமல், சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு இரண்டாம் யோசனையோ தடையோ சொல்லாமல் கையெழுத்திட வேண்டும். ஆனால், இதைத் தவிர ஆளுநர்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் ஆதரவோடு தனிப்பெரும் கட்சியாக வந்திருக்கும் தவெகவை அவர்களின் விருப்பப்படி ஆட்சியமைக்க அழைக்க வேண்டியது மட்டும்தான் ஆளுநரின் வேலை. தவெக தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்கும். பெரும்பான்மை இல்லையேல், அதற்கடுத்தப்படியாக இருக்கும் கட்சி தங்களுக்கான வாய்ப்புகளை பார்த்து ஆட்சியமைக்கக் கோரலாம். இல்லையேல் 6 மாதத்தில் அடுத்த தேர்தலுக்கு செல்லலாம். எஸ்.ஆர்.பொம்மை தொடங்கி எடியூரப்பா வரைக்கும் பல முதல்வர்களின் விவகாரங்களில் நீதிமன்றமே இதை உறுதி செய்திருக்கிறது. அப்படியிருக்க இதையெல்லாம் விடுத்து தன் விருப்பத்துக்கு ஏற்ப எதை எதையோ சொல்லி கவர்னர் மாளிகையை சட்டமன்றமாக மாற்ற நினைப்பது மாநிலங்களின் அதிகாரத்தின் மீது நிகழ்த்தப்படும் அராஜகம். லோக் பவன் என பெயர் வைத்துவிட்டதாலேயே கவர்னர் மாளிகைகள் மக்கள் மன்றங்களாக மாறிவிடுமா?

ஆளுநரை வைத்து `அரசியல்' ஆட்டம்? - Vikatan Cartoon
ஆளுநரை வைத்து `அரசியல்’ ஆட்டம்? – Vikatan Cartoon

அர்லேக்கரின் அதிகாரத்தை மீறிய செயலுக்கு விசிக, கம்யூனிஸ்ட்டுகள் போன்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால், மற்ற கட்சிகள் இந்த விவகாரத்தை சந்தர்ப்பவாதத்தோடும் கயமைத்தனத்தோடும் அணுகுகின்றனர். குறிப்பாக, இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஆளுநரின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவிடம் எந்த ரியாக்சனும் இல்லை. திமுக ‘ஆளுநர் கூறுவதை ஏற்கிறோம்’ என்கிறோம். ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய கட்சி இப்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க குயுக்தியோடு காத்திருக்கிறது.

ஆளுநரும் சரி ஆளுநரின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்ப்பவர்களும் சரி, நீங்கள் செய்து கொண்டிருப்பது ஜனநாயகப் படுகொலை. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Rama is playing… playing! – Is the political game using the governor making a comeback? – Vikatan Cartoon

Impact on UPSC students?: ‘For those who sabotage government schemes…’ – TRB Raja