மேஜிக் எண் 118 – சவாலில் சாதிக்கும் விஜய்; என்ன செய்வார் ஆளுநர்?
பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை உறுதிசெய்து கொண்டு வருமாறு, ஆளுநர் தரப்பில் நேற்றைய தினம் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
107 இடங்கள் கையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் 112 இடங்களை சாத்தியமாக்கிய தவெக-வுக்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய சூழலில் விஜய் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை உறுதிசெய்துவிட்டார் என்கிறார்கள்.
நேற்று முன்தினத்திலிருந்தே ஆளுநர் தாமதப்படுத்தி வருவதாக, அரசியல் தளத்தில் விவாதங்கள் வெடித்து வரும் நிலையில், தனக்கு வழங்கப்பட்ட சவாலில் மேஜிக் எண் 118-ஐ தவெக இன்று தொடும் பட்சத்தில், ஆளுநர் மேற்கொண்டு தாமதிக்காமல் ஆட்சி அமைக்க வருமாறு விஜய் தலைமையிலான தவெக-வுக்கு அழைப்பு விடுப்பார் என்றே கூறப்படுகிறது.
திராவிடக் கட்சிகளின் சமீபத்திய காய்நகர்த்தல்கள் களத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், விஜய் மேற்கொண்டு தாமதிக்காமல் விரைந்து ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வருகிறார்.
3.30-க்கு நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் கம்யூனிஸ்ட்கள்; 4.30-க்கு ஆளுநரைச் சந்திக்கும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.
இதில் இடதுசாரி கட்சிகளும், விசிக-வும் இசைவு தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேபி, `அதிமுக ஆட்சி அமைக்க முடியாது’ எனத் தெரிவித்திருந்தார்.
இன்று மாலை 3.30-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கடிதத்தை தவெக-விடம் வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்றக் கையோடு, தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் இன்று மாலை ஆளுநரை விஜய் சந்திப்பார் எனச் சொல்லப்படுகிறது.
`மூன்று நாளில் மூன்றாவது முறையாக’ – ஆளுநரைச் சந்திக்கும் விஜய்!
இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை கிண்டியிலுள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேக்கரைச் சந்திக்கவிருக்கிறார்.
பரபரப்பான அரசியல் சூழலில், விஜய்யின் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம், பெரும்பான்மையை உறுதி செய்துகொண்டு வருமாறு ஆளுநர் தரப்பில் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டம் நடத்திய நிலையில் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளார். இன்று மாலை விசிகவும் உயர் நிலை கூட்டம் நடத்துகிறது.
`யார் அரசு அமைத்தாலும் பாஜக விலகி நிற்கும்!’ – நயினார் நாகேந்திரன் சூசகம்

பரபரப்பான அரசியல் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக-வின் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கிறார் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
“பாஜக-வுக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை. புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் வாக்களிக்க மாட்டோம். யார் அரசு அமைத்தாலும் பாஜக விலகி நிற்கும்” எனத் தெரிவித்திருக்கிறார். நயினாரின் பேச்சு, அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழப் போகிறதா என்ற யூகங்களை எழுப்பியிருக்கிறது.
`10-ம் தேதி வரை… விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால்..!’ – டி.கே.எஸ்.இளங்கோவன்
“விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக பக்கம் செல்வார்களா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. அதிமுக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பது தொடர்பாகவெல்லாம் எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை. விஜய் ஆட்சி அமைக்க 10-ம் தேதி வரை ஆளுநர் அவகாசம் அளித்திருக்கிறார். விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.” எனத் தெரிவித்திருக்கிறார் திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்
`வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ – விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!” என பதிவிட்டிருக்கிறார்.
எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்?

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. #திமுகஅதிமுககூட்டணி.” என பதிவிட்டிருக்கிறார்.
பனையூரில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பனையூரில் நடந்து வரும் தவெகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சார்பில் வென்ற 106 எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். ஒருவர் கூட ஆப்சென்ட் இல்லை என கட்சி வட்டாரத்தில் தகவல்.
தவெக தலைவர் விஜய் மட்டும் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தனியாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் சிலர், தவெக எம்.எல்.ஏக்களில் சில மாயம் என செய்திகள் பரப்பும் நிலையில், தவெக தரப்பில் இந்த தகவலை மறுக்கிறார்கள்.
மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!








நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.
ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். இதனிடையே விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசியலில் நீடிக்கும் குழப்பம் – பரபரக்கும் கட்சிகளின் ஆலோசனைகள்
பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆ.ராசா, என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து விஜய் அடுத்த கட்ட முடிவை எடுப்பார் எனத் தெரிகிறது.
மற்றொரு புறம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழு கூட்டங்கள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆலோசனையில் முடிவில் தான் தவெக ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
செங்கோட்டையன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!
செங்கோட்டையன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பலரும் கடந்த 2 நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்க கூடிய நிலையில், அடுத்து எப்படி செயல்பட வேண்டும் கையாள வேண்டும் என்பது குறித்து செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது

`இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்’
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு.
அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; ஆளுநர் மாளிகை அல்ல.
இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு: 1994 (3) SCC 1
இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தங்களை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், விஜய்யின் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
“ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லை” என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

திமுக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு “அவசரகால முடிவுகளை” எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவும், ‘சமூக விரோத சக்திகள்’ உள்ளே வருவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், அவருக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் ஒரு திட்டம் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் இணைவதை மக்கள் ஏற்கும் விதமாக இருக்குமா? என்ற அச்சம் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உள்ளது.
அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், “தவெக-வுடன் கூட்டணி கிடையாது; கட்சித் தாவல் பேச்சுக்கே இடமில்லை” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாள்களுக்கு அமைதி காக்குமாறு தனது எம்.எல்.ஏ-க்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து ஆட்சியமைக்க முயன்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் என அக்கட்சித் தலைமை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, இரு கட்சிகளும் ரகசியக் கூட்டணியில் ஈடுபடுவதாக தவெக சந்தேகிப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? அல்லது மீண்டும் ஒரு தேர்தல் வருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.