`அரசுக்கு எதிராக போராடிய உழைப்போர் உரிமை இயக்கம் திமுக-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?’ – தலைவர் பாரதி

1,400 தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனத்துக்கு மாற்றியதைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் முன்னெடுத்த தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மெரினா கடலில் இறங்கும் போராட்டம், கூவம் ஆற்றில் இறங்கும் போராட்டம், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் என்று, இடைவிடாது களம் கண்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

ஒரு கட்டத்தில் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர் பாபு, “1400 தூய்மைப் பணியாளர்களும் முன்பு போல மாநகராட்சி ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். இதையடுத்துப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தச்சூழலில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாரதி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து வழக்கறிஞர் பாரதியிடம் பேசினோம்.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

“அரசு வாக்குறுதி அளித்தபடி போராடிய தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணி அமர்த்திவிட்டதா?”

“மாநகராட்சியில் சுய உதவிக்குழு தொழிலாளர்களாக, ஐந்து மற்றும் ஆறாம் மண்டலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த 1400 தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனத்துக்கு மாற்றியதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியுமே நாங்கள் போராடினோம். ‘முன்பிருந்ததைப் போல, திரும்பவும் கார்ப்பரேஷனுக்கே எடுத்துக்கொள்கிறோம்’ என்று அரசு உத்தரவாதம் தந்தது.

இப்போது 1400 தொழிலாளர்களையும் பழைய நிலையிலேயே கார்ப்பரேஷனில் பணி அமர்த்தி விட்டார்கள். இப்போது 8-ம் மண்டலத்திலும் 4-ம் மண்டலத்திலுமே காலியிடங்கள் இருந்ததால் அங்கே பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். பணியில் சேர்ந்து தொழிலாளர்கள் சம்பளமும் வாங்கிவிட்டார்கள். ஆனாலும் எங்களது பிரதான கோரிக்கை என்பது, பணி நிரந்தரம் செய்வது. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை வலியுறுத்தி மே 20ம் தேதி பிரமாண்ட மாநாடு நடத்தப்போகிறோம்.”

“தூய்மைப் பணியாளர் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது அரசு… தற்போது முதல்வரைச் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்…”

“2011 முதல் 2026 வரைக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தனியார் மயமாக்கப்பட்ட தொழிலாளர்கள் எவரும் மீண்டும் அதே நிலையில் திருப்பி எடுக்கப்பட்டதில்லை. முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் அது நடந்திருக்கிறது. அதுவும் மாநகராட்சியில் தீர்மானம் போட்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக முதல்வரைச் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினோம். அடுத்து, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது எங்கள் பிரதான கோரிக்கை. ‘முதல்வர் மீண்டும் வெற்றி பெற்று பொறுப்பேற்றதும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக பேச நேரம் ஒதுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தோம். அதை முதல்வர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். கூடவே, மாநில உரிமை, மதச்சார்பின்மை சார்ந்து, உழைப்போர் உரிமை இயக்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரும் என்று தெரிவித்தோம்.

கு.பாரதி
கு.பாரதி

தனியார் மயம் என்பது எல்லா ஆட்சிகளிலும் நடந்திருக்கிறது. ஆனால். தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சி ஊழியர்களாகவே எடுத்துக்கொண்டது இதுவரை நடக்காதது. அதை வரவேற்கும் அதே நேரத்தில் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையையும் வலுப்படுத்த வேண்டும். அதற்காக எங்கள் தொழிலாளர்களே முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினார்கள். அதற்கான வாய்ப்பு அமைந்தது. சந்தித்தோம். அடித்தட்டு மக்கள் மத்தியில் பணியாற்றும் ஒரு இயக்கம், முதல்வரோடு பேசும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். அதையே நாங்கள் செய்தோம்.

கு.பாரதி
கு.பாரதி

2010 முதலே குழு, திட்டம் என்ற பெயர்களில் தான் தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற வழக்கை நாங்கள் தொழில் தீர்ப்பாயத்தில் வழக்கு நடத்தி வருகிறோம். அதேநேரம் பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மே 20 அதற்காகவே ஒரு மாநாடு ஏற்பாடு செய்திருக்கிறோம். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் கோரிக்கை அதுவாகத்தான் இருக்கும். அதில் சமரசமில்லை.

எங்கள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சி, மதவாதத்தை முன்னிறுத்தும் பாஜகவும், அதன் கூட்டாளிகளும் முறியடிக்கப்பட வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ளது. இந்தியா முழுவதுமே அதே நிலைப்பாடு தான். அந்த நிலைக்குப் பாதகமில்லாமல் தமிழகத்தில் 12 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது எங்கள் கட்சி. தொழிலாளர் நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் நாங்கள் போட்டியிடாத பிற தொகுதிகளில் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம்.

இன்றைய சமூகப் பொருளாதார அரசியல் நிலையில் மக்கள் நலனுக்காகப் போராடுபவர்கள், அரசு நிறுவனங்களோடும் அரசியல் கட்சிகளோடும் பிற அமைப்புகளோடும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட வேண்டிய நிலை இருக்கிறது.” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Who were the Indus Valley Civilization people? What happened to them? Unresolved mysteries still remain.

The person who created Stalin in politics is not ‘me’; Indira Gandhi – says Karunanidhi | Vote Vibes