மதுரையில் எஸ்ஏபி என அழைக்கப்படும் தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் மினி ஹாலில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
இதையடுத்து எம். ஏ.பேபி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, ”தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க கூட்டணி தோல்வியடைந்ததுடன், எதிர்க்கட்சிகளாக இருந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் குறைவாக உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசியல் மரபுகளின்படி, தனிப்பெரும் கட்சியையோ அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியையோ ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கேள்வி எழுப்புவது முறையற்றது.

1990-களில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க பெரும்பான்மை இல்லாதபோதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவரை பிரதமராக அழைத்தது ஒரு முக்கிய முன்னுதாரணம்.
பின்னர் அவர் பதவி விலகிய சம்பவம் ‘13 நாள் அதிசயம்’ என அறியப்பட்டது. எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு கட்சி அல்லது கூட்டணியின் பெரும்பான்மை சட்டமன்றத் தளத்திலேயே நிரூபிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.
இதை தமிழக ஆளுநர் பின்பற்றவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு எதிராக சி.பி.எம் கட்சி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. தமிழக மக்களின் தேர்தல் தீர்ப்பை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், பா.ஜ.க ஆதரவு கொண்ட அரசை அமைக்க முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த தமிழ்நாடு சிபிஎம் கட்சி மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலக் குழுவுடன் ஆலோசித்து, தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுடன் ஆலோசித்தே எடுக்கப்பட்டது.
தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி. ஆனால், அ.தி.மு.க ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. ஆனால், அவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறார்கள் அதனால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
எங்களுக்கும் தி.மு.க -வுக்கும் எந்தச் சிக்கலுமில்லை. கூட்டணி சுமூகமாகத் தொடர்கிறது. குதிரை பேரம் தொடர்பான விவாதங்கள் எழுவதற்குக் காரணமே ஆளுநரின் கால தாமதமே காரணம்” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.