காங்கிரஸின் பாரம்பரியம், திமுக – அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக ‘ஆப்பு’ வைத்திருக்கிறது தவெக.
ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது ‘வெற்றிக் கோட்டையாக’ மாற்றியிருக்கிறார் விஜய்.
திருப்பத்தூர் தொகுதியில் ‘அமைச்சர் பெரியகருப்பன் கோட்டை’ என்கிற பிம்பத்தை உடைத்துச் சரித்திரம் படைத்திருக்கிறார் தவெக-வின் சீனிவாச சேதுபதி .
39 வயதான பி.இ., எம்.பி.ஏ பட்டதாரியான இவர், தனது அண்ணனின் மருத்துவமனையை கவனித்து வருகிறார்.
தவெக மாவட்ட இணைச் செயலாளரான இவருக்கு எதிரே நின்றதோ, நான்கு முறை தொடர்ச்சியாக வென்று இரண்டு முறை அமைச்சராக வலம் வந்த திமுக-வின் பெரும்புள்ளி பெரியகருப்பன்!

இவரை எதிர்த்து நிற்க உள்ளூர் தவெகவினர் எவரும் முன்வரவில்லையாம். இதற்குப்பின்னர்தான் திருவாடனை அருகே உள்ள கற்காத்தாக்குடியில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது காரைக்குடியில் வசித்துவரும் சீனிவாச சேதுபதியை தேடிக் கொண்டுவந்துள்ளனர்.
பெரிய கருப்பனின் பிரமாண்ட அரசியலுக்குமுன் யாரும் எடுபட முடியாது என்று பிரசாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி இருந்தவரை விஜய் அலை திருப்பத்தூர் தொகுதி எம் எல் ஏ வாக உயர்த்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடந்தது. அங்கு வாக்கு எண்ணிக்கையின்போது திருப்பத்தூர் தொகுதிதான் பெரிய `திக் திக்’ மாற்றத்தை உருவாக்கியது.
உதய சூரியனும், விசிலும் மாறி மாறி முன்னிலை வகிக்க பரபரப்புக் கூடியது. நள்ளிரவுவரை நீடித்த இந்த வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர தரப்பு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வெற்றியை தக்க வைக்க தகராறு செய்தது.

இதனால் பல தடவை திரும்ப திரும்ப எண்ணிக்கை நடத்தி கடைசியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் விசில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
த்ரில்லர் சினிமா பாணியில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சரை வீழ்த்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திருப்பத்தூர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் இந்த இளம் வேட்பாளர்.!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.