தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலையான சூத்திரங்களுக்கு அப்பாற்பட்டு, வேறொரு வழியில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். கிராமப்புறம் ஒன்றில், பட்டியலின குடும்பத்தில் பிறந்து, சட்டக்கல்வியைப் பயின்று, சமூக உணர்வு கொண்ட இளைஞனாக உருவான அவர், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான அடிமட்டப் போராட்டங்களிலிருந்தே தன் பயணத்தைத் தொடங்கியவர். 

2001 தேர்தலில் அவருக்கு கிடைத்த முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் அவரது கட்சி, தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 1990-களில் தலித் சிறுத்தைகள் இயக்கத்துக்கு தலைமையேற்று, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்ட அவர், தேர்தல் அரசியலுக்கு அடியெடுத்து வைப்பதை விரும்பாதவராக இருந்தவர். அப்படியான ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கியது எப்படி, தேர்தல் அரசியலுக்குள் அவரை இழுத்து வந்தவர் யார், தமிழகத்தின் பிற பட்டியலின அமைப்புத் தலைவர்களிடமிருந்து வேறுபட்டு, பொது சமூகத்துக்கான தலைவராக உயர்ந்தது எப்படி? 1980-களிலிருந்து பயணிக்கலாம்… 

திருமாவளவன்

திருமாவளவனின் பொது வாழ்க்கை அலுவலக அறைகளிலோ, கட்சித் தலைமைகளின் மேசைகளிலோ தொடங்கவில்லை; மாறாக, கிராமங்களின் தெரு முனைகளிலும், சாலையோரப் போராட்டங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரும் கோபமும் கலந்த இடங்களிலும்தான் தொடங்கியது. 

இளம் வயதிலேயே இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கத்தில் (Dalit Panthers of India – DPM) இணைந்தார். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தலித் உரிமைகளுக்காகவும் தீவிரமாகப் போராடிய இந்த இயக்கத்தின் தமிழக அமைப்பாளராக இருந்த அ.மலைச்சாமி 1989-ல் மரணமடையவே, அந்த  பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். அவரது தலைமையில் தமிழ்நாடு முழுவதும் தலித் சிறுத்தைகள் ஒரு பரவலான  சக்தியாக உருவெடுத்தது. கிராமம் கிராமமாகச் சென்று தலித் இளைஞர்களை ஒன்று திரட்டினார். சமத்துவத்துக்கான உரத்த குரலாக ஒலித்தார். நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த சாதி அநீதிகளுக்கு எதிராக முழங்கினார். ஒடுக்கப்பட்ட  மக்களிடையே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்பையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திய அவர், 

போராட்டங்கள், கருத்தாழமிக்க உரைகள், விழிப்புணர்வு பயணங்கள் வழியாக  தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கத் தொடங்கினார். 

தேர்தல் அரசியலை நோக்கி… 

தலித் சிறுத்தைகள் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியபோது, தேர்தல் அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருந்தார் திருமாவளவன். ஆனால், “சமூக நீதி நிலைத்து நிற்க வேண்டுமானால், போராட்டத்தோடு அரசியல் அதிகாரமும் தேவை. மேடைகளில் எழுப்பும் உரிமைக்குரலை சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் எழுப்புங்கள்; அதிகார அரசியல் மூலம்தான் குறைந்தபட்ச உரிமைகளையாவது வென்றெடுக்க முடியும்” என அவர் மீது அக்கறை கொண்டவர்கள் வலியுறுத்திய நிலையில், அதிலுள்ள நியாயத்தை அவர் புரிந்துகொண்டார். அதனாலேயே தலித் சிறுத்தைகள் இயக்கம், படிப்படியாக ஒரு முழு அரசியல் கட்சியாக உருவாகத் தொடங்கியது

அந்த வகையில், 1990-களின் பிற்பகுதியில், போராட்ட மேடைகளிலிருந்து தேர்தல் அரங்குக்கு ஒரு துணிச்சலான பாய்ச்சலை நிகழ்த்தினார் திருமாவளவன். தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் சமூகநீதி உணர்வையும் போராட்ட அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, 1999-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உருவானது.  

இது வெறும் பெயர் மாற்றமாக அல்லாமல் ஒரு தத்துவத்தை நோக்கிய மாற்றமாக அமைந்தது. “தெருவில் மட்டும் குரல் கொடுத்தால் போதாது, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும்” என்கிற உறுதிபாட்டுடன், தலித் உரிமைகள், சாதி ஒழிப்பு, பரந்துபட்ட சமூக நீதி ஆகியவற்றை ஜனநாயகத்தின் உள்ளே கொண்டு சென்று நிறுவுவதையே விசிகவின் இலக்காக அமைத்துக்கொண்டார் திருமாவளவன். 

கட்சி… கொடி… கூட்டணி | தொல். திருமாவளவன்

திருப்புமுனையாக அமைந்த முதல் தேர்தல் வெற்றி

1999 நாடாளுமன்றத் தேர்தல்தான் விசிக சந்தித்த முதல் தேர்தல். சிதம்பரம் (தனி) தொகுதியில் தமிழ் மாநிலக் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் திருமாவளவன். புதிய கட்சி, புதிய முகம், புதிய சிந்தனை என்றாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அந்தத் தோல்வி அவருக்கு ஒரு பாடமாக அமைந்தது. அடுத்த இரண்டே ஆண்டுகளில், 2001 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தனித் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார் திருமாவளவன். திமுக சின்னத்திலேயே போட்டியிட்ட திருமாவளவன் 64,627 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்த தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளர் சு.புரட்சிமணியை 1,855 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி வித்தியாசம் வெறும் 1.37% மட்டும்தான்.

ஆனால்,புதிதாக உருவான தலித் மக்களை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சி, தனித் தொகுதி, கூட்டணி அரசியல் என்கிற சூழலில் இந்த சிறிய வித்தியாசமே பெரிதாக பார்க்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, போராட்ட இயக்கத்திலிருந்து தேர்தல் களத்துக்கு மாறியதை மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகவே அது அமைந்தது. கூடவே போராட்டக்காரருக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரபூர்வ அங்கீகாரம். அவரது குரல் பொது மேடைகளைத் தாண்டி, சட்டமன்றத்திலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்த ஒரு வெற்றிதான், பின்னர் வந்த அவரது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகளுக்கும் விதை போட்டது. 2009-ல் சிதம்பரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2014-ல் ஒரு  தோல்வி வந்தாலும், 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் அதே தொகுதியில் அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி

அந்த முதல் சிறிய வெற்றியிலிருந்து இன்று விசிக ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தலித் சமூகத்தை அரசியல் கட்சிகள் எப்போதும் “இலக்காக” வைத்தே வந்திருக்கின்றன. திமுகவும் இடதுசாரிக் கட்சிகளும் கூட பல காலமாக தலித் மக்களை மையப்படுத்தி பேசி வந்துள்ளபோதிலும், தலித் சமூகம்  ஒரு ஒற்றைப் பெரும் அரசியல் சக்தியாக உருவாகாமலேயே இருந்துவந்தது. அந்த நிலையை ஓரளவு மாற்றி உள்ளார் திருமாவளவன்.

2024 தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற இடங்களை தனது ‘பானை’ சின்னத்தில் வென்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது விசிக. அதே சமயம், தலித் அரசியலோடு நின்றுவிடாமல், சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, தமிழ் உணர்வு, இலங்கைத் தமிழர் பிரச்னை என பல்வேறு தளங்களில் திருமாவளவன் குரல் ஒலிக்கிறது. 

“சமூகத்தை ஒன்றுபடுத்துவது சாதியால் அல்ல, கொள்கையால்தான் முடியும். சாதி அடிப்படையில் ஒருபோதும் நாங்கள் முயல மாட்டோம். எங்கள் அரசியல் பேச்சை ஏற்றுக்கொள்பவர்கள் எங்களோடு இருப்பார்கள். தோற்றாலும் சரி, இதைத்தான் நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம்” என்கிறார் திருமாவளவன்.

அவரது இந்த நிலைப்பாடு காரணமாகவே, தமிழ்நாட்டின் கூட்டணி அரசியலில் இன்று  அவரது கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில், ஒடுக்கப்பட்டோரின் குரலாக மட்டுமல்லாது, சமத்துவத்தையும் நீதியையும் வலியுறுத்தும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் முகமாகவும் அவர் உயர்ந்திருக்கிறார்.

தொல்.திருமாவளவன்

திமுகவுக்கு பக்கபலம்

இந்த நிலையில், தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின்  வருகை, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தேவையையும் மதிப்பையும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அதிமுக தொடர்ந்து பிளவுண்டு கிடக்கிறது. பாஜகவுக்கு கூட்டணி இல்லாமல், தமிழ்நாட்டில் காலூன்றுவதே சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட விசிக, திமுக கூட்டணிக்கான சித்தாந்த வலிமையையும் சமூகப் பன்முகத்தன்மையையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சியைப் பிடித்ததற்கும், 2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்கும் விசிக-வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாக அரசியல் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 78 சட்டமன்ற தொகுதிகள் ஆட்சியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. 

2021-லும் இதே பகுதிதான் திமுகவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. இந்தத் தேர்தலில், திமுக கூட்டணி 64 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைத்தது.இந்த நிலையில், 2026 தேர்தலிலும் இந்தப் பகுதியே  வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆட்சியில் பங்கு என்கிற முழக்கத்தை, கடந்த ஆண்டு திருமாவளவன் எழுப்பியபோது தமிழக அரசியல் வட்டாரம் அதிர்ந்துதான் போனது. திமுகவுக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், தொடர்ந்து அவர் அந்த கோரிக்கையை வலியுறுத்தவில்லை. மேலும், 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே விசிக நீடிக்கும் என்றும் திருமாவளவன் அறிவித்துவிட்டார். 

தலித் ‘முத்திரை’யை உடைத்த தலைமைத்துவம்  

திருமாவளவன் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அதை ஒருநாளும் அவர் அரசியல் பொது மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியதில்லை. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, அவர் மீது ‘தலித் தலைவர்’ என்கிற முத்திரை குத்தப்படுவதாகக் கூறும் அரசியல் திறனாய்வாளர்கள், “தமிழகத்தில் இன்றைய தேதிக்கு,  திருமாவளவன் அளவுக்கு அரசியல் வாசிப்புத் திறன், சமூக நீதி குறித்த நுண்ணுணர்வு, உறுதியான மொழி ஆளுமை, மக்களுடன் நெருக்கமாக இணையும் பணிவு, சிக்கலான கருத்துகளையும் எளிய சொற்களில் விளக்கும் அறிவாற்றல், போராட்ட நிலைகளில் பின்னடைவு இல்லாமல் நிற்கும் மனத்துணிச்சல், தொடர்ந்து படிக்கும் பழக்கத்தால் உருவான ஆழமான அறிவு போன்ற பண்புகளை ஒருங்கே கொண்டவராக வேறு எந்த ஒரு கட்சித் தலைவரும் இல்லை” என்கின்றனர். 

தொல்.திருமாவளவன்

திருமாவளவன் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவு ஒன்றில், “ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என நான் நினைப்பவை தமிழகமெங்கும் கிராமம் கிராமமாக பல ஆண்டுகள் அலைந்து உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருத்தல், பலதரப்பட்டவர்களை இணைத்துக்கொண்டு ஓர் அமைப்பை கட்டியெழுப்பும் இயல்பு கொண்டிருத்தல், அடிப்படையான வாசிப்பும் அதிலிருந்து வரும் அறிவுத்தகுதியும், அதன் விளைவான தொலைநோக்கும் கொண்டவராக இருத்தல் ஆகியவைதான்.திருமாவளவன், அவருடைய சாதியின் தலைவராக தொடங்கியவர். தமிழகத்தைத் தலைமைதாங்கும் தகுதிகொண்டவராக வளர்ந்தவர். இன்று, தமிழகத்தின் முதன்மையான அரசியல் தலைவர் அவரே” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அந்த வகையில்,தெருவில் தொடங்கிய திருமாவளவனின் போராட்டக் குரல், 2001 சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த முதல் தேர்தல் வெற்றி மூலம் சட்டமன்றத்திலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் ஒலிப்பதோடு, இன்று தமிழகத்தின் முதன்மையான அரசியல் தலைவராகவும் அவரை உயர்த்தி உள்ளது. 

(தொடரும்.!)


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Tirunelveli District Constituencies | DMK, ADMK, NTK, TVK Who Gets Which Seat? | TN Elections 360 Updates

Wayanad: “People will misunderstand; stand firm” – Mammootty, CPM Ma. Se. What happened between them?