`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்’ – தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!

ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது.

இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது.

சரத்பவார்

இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா?

ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ்

எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது.

காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், “ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார்” என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது” என்று கூறினார்.

ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Anna attracted female voters, Karunanidhi’s ‘mature’ formula | ‘Wow’ strategy 08

“Individually, everyone may have their own opinion, but.!” – Manickam Thakur Soosagam