ஒரு இடைத்தேர்தல், இந்திய அரசியலின் ஆடுபுலி ஆட்டத்தையே மாற்றியமைத்தது என்றால், அது திருவண்ணாமலை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் என்று கூறலாம்.
முதலமைச்சர்களாக இருந்த, தமிழ்நாடு – காமராஜர், ஒடிசா – பிஜு பட்நாயக், காஷ்மீர் – பக்சிகுலாம் முகமது, உத்தரபிரதேசம் – சி.பி.குப்தா, பீகார் – பினோதானந்தா, மத்தியப்பிரதேசம் – பி.ஏ.மண்டலாய் ஆகியோர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தார்கள்.
மத்திய அமைச்சர்களாக இருந்த, மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பட்டீல், ஜெகஜீவன்ராம், கோபால் ரெட்டி, கே.எல்.ஸ்ரீமாலி ஆகியோர் கொடுத்த ராஜினாமாவும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான 1963 அக்டோபர் 2 அன்று காமராஜர் பதவி விலகினார். காங்கிரஸ் கட்சியின் புதிய முதலமைச்சர் பக்தவச்சலம் பதவி ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியின் கே – பிளான்
இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட இந்த ராஜினாமா முடிவுகளை, காங்கிரஸ் கட்சியினர் கே – பிளான், அதாவது காமராஜர் பிளான் என்று அறிவித்தனர். இத்திட்டம் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த காமராஜர் மூலமாக முன்மொழியப்பட்ட திட்டம் என்பதால் அப்பெயர் பெற்றது.
காமராஜர் அப்படியொரு முடிவை எடுப்பதற்கு, காங்கிரஸ் கட்சியில் பற்றத்தொடங்கிய உட்கட்சி புகைச்சல், தலைமைப் போட்டி, கொள்கை மோதல் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்டமைப்பையே ஆட்டம் காண வைத்திருந்தது. அதில் இரண்டு தேர்தல் தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தல்கள்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மட்டுப்படுத்த, ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று பிரதமர் நேரு அறிவித்திருந்தார். சீனாவுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடத்தப்பட்ட போரை அண்ணா தலைமையிலான திமுக ஆதரித்தது. ஆனால், தேர்தல் அரசியல் என்று வந்தபோது, காங்கிரஸ், திமுக இருதரப்பும் எதிரெதிர் நிலைப்பாட்டுடன் கடுமையாக மோதிக்கொண்டனர்.
திமுகவின் வளர்ச்சி…
1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 112 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, 15 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது திமுக. திமுகவின் வளர்ச்சி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால், திமுகவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்து வந்த 1962 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 50 இடங்களை வென்று எதிர்க்கட்சியாக நிலைப்பெற்றது திமுக.
பிரதமராக நேருவும், முதலமைச்சராக காமராஜரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திமுகவின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து கொண்டே போனது.
ஆனால், முதல் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்கள் 15 பேரில், கருணாநிதி தவிர, அண்ணா உள்ளிட்ட 14 பேர் அடுத்து வந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். அதில் திருவண்ணாமலை ப.உ.சண்முகமும் ஒருவர்.
அந்த திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பழனி பிள்ளை ஆன்மிக சுற்றுப் பயணமாக ஆந்திர மாநிலம் சென்ற போது, கோதாவரி ஆற்றில் மூழ்கி இறந்து போனார். காலியாக இருந்த திருவண்ணாமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தொகுதியினை தக்க வைத்துக் கொள்ள, வேட்பாளராக பத்ராசலம் பிள்ளை நிறுத்தப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, திமுகவின் சார்பில், திருவண்ணாமலை தொகுதியில் 1957 ஆண்டில் வெற்றி பெற்று, 1962ஆம் ஆண்டில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்த ப.உ.சண்முகம் களத்தில் குதித்தார்.
திமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சாதனைகளுக்கு மக்கள் ஆதரவு இதுதான் என்று காட்ட வேண்டும். மத்தியிலும் ஆளுங்கட்சி, மாநிலத்திலும் ஆளுங்கட்சி. நேரடியாக தானே களமிறங்கினார் முதலமைச்சர் காமராஜர்.

மதுரையை விட சிறிய நகரம் திருவண்ணாமலை. ஆனால், மதுரையில் செயல்படுத்தபட்ட குடிநீர் திட்டத்தைவிட அதிக மதிப்பீட்டில், சுமார் 48 லட்ச ரூபாய் குடிநீர் திட்டம் திருவண்ணாமலை நகரத்திற்கு அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் காமராஜரே கிராமம், கிராமமாகச் சென்று, 15 நாட்களுக்கும் மேலாக மக்களை சந்தித்தார். மத்திய, மாநில அமைச்சர்கள் திருவண்ணாமலை தொகுதியில் முகாமிட்டனர்.
திமுகவைப் பொறுத்தவரை, மக்கள் அங்கீகாரத்தை பெற்றே ஆகவேண்டும். இழந்த வெற்றியை மீட்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் தமிழர் விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை, அடுத்தகட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.
நடப்பதோ, இடைத்தேர்தல். மத்திய அமைச்சர்களும், முதலமைச்சரும், தேர்தல் களத்தில் பம்பரமாய் சுற்றி வருகிறார்கள். இடைத்தேர்தலுக்காக இளைஞர்களை முன்னிறுத்தி தனியே வியூகம் வகுத்த திமுக, தேர்தல் பொறுப்பாளராக தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் மு.கருணாநிதியை நியமித்து, அவரது தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர். திமுகவினரின் மேடைப்பேச்சு மிகப்பெரிய பலம்.

சீனப்போரில் தேசியப் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக, திருவண்ணாமலையில் பேசினார்கள். இந்தி திணிப்பு அபாயம், தமிழ் மொழிக்கு ஆபத்து என்று மேடைதோறும் முழங்கினார்கள். நாட்டில் நிலவும் வறுமைக்கும், பசி, பட்டினிக்கும் காங்கிரஸ் ஆட்சியின் சீர்கேடுகள் என்று கிராமங்களில் பரப்புரை செய்தனர்.
திருவண்ணாமலை தொகுதியில் கடுமையான போட்டி நிலவியது. முதலமைச்சர் காமராஜருக்கு பெரும் சவாலாக இருந்தது.
ஏனென்றால், திருவண்ணாமலை தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு நடந்த திருச்செங்கோடு நாடாளுமன்ற மக்களவைக்கான இடைத்தேர்தலில், புதுக் கட்சியான திமுகவிடம், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் தோற்று இருந்தது.
ஈரோடு, மொடக்குறிச்சி, கபிலர்மலை, திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்செங்கோடு மக்களவை தொகுதியில், 1957, 1962 என்று இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சுப்பராயன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் செங்கோட கவுண்டர், திமுக சார்பில் கந்தப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு, கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், ஜனசங்கம், தமிழ் தேசிய கட்சி, சோசலிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருந்தது. திமுகவை ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆதரித்தது. தேர்தல் முடிவில், ஆளுங்கட்சியை தோற்கடித்து, திமுக வேட்பாளர் கந்தப்பன் அபாரமாக வென்றார்.
அண்ணாவின் வெற்றி, காமராஜரின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது திருச்செங்கோடு இடைத்தேர்தல் முடிவுகள்.
அதனால், திருவண்ணாமலை இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியது காங்கிரஸ் கட்சி.
ஆனால், திருச்செங்கோடு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்தோடு களம் கண்டனர் திமுக தொண்டர்கள்.
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது,
காகிதப் பூ மணக்காது;
காங்கிரசின் சமதர்மம் இனிக்காது,
இந்தியை மத்திய அரசு திணிக்கிறது;
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
என்று முழங்கினார் அண்ணா.
அனைவருக்கும் தொடக்க கல்வி, மாணவர்களுக்கு சீருடை, தேவைக்கேற்ப குடிநீர் என்று அரசுத் திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் காமராஜர். காங்கிரஸ் வேட்பாளர் பெயர் பத்ராசலம், அதாவது அண்ணாமலை என்று பொருள். தேர்தல் நடப்பதோ திருவண்ணாமலை என்று காங்கிரஸ் கட்சியினர் பரப்புரை செய்தார்கள்.
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி தந்தது.
இந்திய அரசியல் வரலாற்றில், சட்டமன்ற இடைத்தேர்தலில், முதன் முதலாக ஆளுங்கட்சியை தோற்கடித்து, எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.
காட்பாடி முதல் கன்னியாகுமரி வரை கொண்டாட்டங்களுக்கு நாள் குறித்தார் அண்ணா. ஊர் ஊராக மேடை அமைத்து, வெற்றி நாயகர் ப.உ.சண்முகம் கெளரவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் திமுக நடத்திய வெற்றிக் கொண்டாட்டங்கள், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க அடித்தளமிட்டது.

பொதுத்தேர்தலில் 35,148 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி, இடைத்தேர்தலில் 37,191 வாக்குகள் பெற்றது. ஆனால், பொதுத்தேர்தலில் 33,399 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம், இடைத்தேர்தலில் 38,666 வாக்குகள் பெற்று வெற்றியைத் தட்டிச் சென்றார்.
காங்கிரஸ் தோல்வி – அமைச்சர்கள் பதவி துறப்பு
காங்கிரசின் தோல்வி, காமராஜருக்கு பின்னடைவாக அமைந்தது. அரசுப் பணிகளை மட்டுமே பார்ப்பதால், கட்சிப் பணிகளில் கோட்டை விட்டதாக காங்கிரஸ் கருதியது. முதலமைச்சர், அமைச்சர்கள் தங்களது பதவிகளைத் துறந்து, கட்சிப் பணி செய்ய வேண்டுமென புதிய திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, நேரு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார். ஆனால், மற்றவர்களின் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.!
தொடரும்…!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.