இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக சில இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனிடையே, பா.ஜ.க கட்சிக்கு முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம் (Allana Group) ரூ.30 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது என Scroll.in அறிக்கை வெளியிட்டுள்ளது.
இர்ஃபான் அல்லானா தலைமையிலான அல்லானா குழுமம் குழுமம், 2024-25 நிதியாண்டில் மட்டும் பா.ஜ.க-வுக்கு ரூ.30 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. சுவாரஸ்யமாக, இதே காலகட்டத்தில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது 2018-ம் ஆண்டிற்குப் பிறகு எட்டப்பட்ட மிகப்பெரிய சாதனை அளவாகும்.

2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு “இளஞ்சிவப்பு புரட்சியை” (இறைச்சி ஏற்றுமதி) ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கடுமையாகச் சாடியிருந்தார். அதே நேரம், மோடி பிரதமராகுவதற்கு முன்பே அல்லானா குழுமம் பா.ஜ.க-வுக்கு நிதியளித்து வந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் ரூ.2 கோடியை வழங்கியது.
2019-ம் ஆண்டில் அல்லானா குழுமம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அந்தக் குழுமத்துடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த இக்கட்டான சூழலில்தான் அல்லானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கத் தொடங்கியது. அதன் அடிப்படையில், 2019-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-வுக்கு ரூ.2 கோடியையும், சிவசேனாவுக்கு ரூ.5 கோடியையும் வழங்கியிருக்கிறது. அதன் உச்சமாக 2024-25 நிதி ஆண்டில் நன்கொடைத் தொகை 15 மடங்கு அதிகரித்து ரூ.30 கோடியை வழங்கியிருக்கிறது.
சீனாவின் கட்டுப்பாடுகளால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி பாதிக்கப்பட்டபோது, எகிப்து மற்றும் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் புதிய சந்தைகளாக மாறின. எகிப்து தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாட்டிறைச்சி சந்தையாக உள்ளது. 2024 அக்டோபர் முதல் அமலுக்கு வந்த ‘ஹலால் சான்றிதழ்’ தொடர்பான வழிகாட்டுதல்கள், மேற்கு ஆசியா மற்றும் துருக்கி சந்தைகளைக் கைப்பற்ற வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அல்லானா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரஃபவுசான் அலவி, “பா.ஜ.க அரசின் கீழ் நிலையான வளர்ச்சிக்கான நேர்மறையான மாற்றங்கள் நடக்கிறது. விக்ஸித் பாரதம்’ வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கிற்குத் தங்களது பங்களிப்பை வழங்கு வேண்டும் என விரும்புகிறோம். மேலும், வரி அமைப்பை எளிமைப்படுத்தியிருக்கிறது இந்த அரசு எனக் கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.