`இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான்.!’ கொந்தளித்த ஜோதிமணி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தவறாக பேசினார். அவர் உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பகிரப்பட்டது.

இது குறித்து எம்.பி.ஜோதிமணி தன் முகநூல் பக்கத்தில், “பா.ஜ.கவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும்.

கரூர் பாஜக போராட்டம்
கரூர் பாஜக போராட்டம்

இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி, பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை, உழைப்பு, அனுபவம், கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.

ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.

நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக, மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால், ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ, பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை, கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இன்னும் எதிர்கொள்கிறேன்.

ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து, சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன்.

கரூர் பாஜக போராட்டம்; செந்தில் நாதன்
கரூர் பாஜக போராட்டம்: செந்தில் நாதன்

பத்தாண்டு காலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அடுத்த பத்தாண்டு காலம் இளைஞர் காங்கிரசின் தேசிய பொது செயலாளர் உடபட பல்வேறு மாநிலங்களில் கட்சிப்பணி, ஐந்து ஆண்டு காலம் அரசியல் வனவாசம், சமூகப் பணி. 20 ஆண்டு கால கடுமையான , நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல், சமூகப்பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேரதலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். பத்தாண்டு காலம் எனது கடும் உழைப்பை, சமரசமற்ற துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளை நேரில் பார்த்தவர்.

எனது மக்கள் பணியை, கொள்கை நிலைப்பாட்டை, சமூக அக்கறையைப் புரிந்துகொண்டவர். அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். எமது மக்கள், தேர்தல் களத்தில், பொதுவாழ்வில் உடன் பயணிக்கும் தோழர்கள் என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தனர். அதனால் ஏழாண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்.

ராகுல் காந்தி

ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரம் பணி புரிய வேண்டும். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும், பிரச்சினைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல்.

ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன். பெண் என்பதால் இந்த தகுதி, திறமை, உழைப்பு, அறிவு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை பெண் என்றாலே வெறும் உடல், பாலியல் பொருள் அவ்வளவே.

எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித, ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது.

பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது.

பெண்களுக்கு பொது வாழ்க்கையில் காலடி வைப்பது எப்போதும் எளிதானது அல்ல. நாம் செய்த செயல்களுக்காக அல்லாமல் நாம் ஒரு பெண் என்பதற்காகவே ஆபாசத் தாக்குதல் அவமதிப்பு, கண்ணியச் சிதைப்பு, பாலியல் அவமானம், மிரட்டல்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கரூர் பாஜக தலைவர் செந்தில் நாதன்
கரூர் பாஜக தலைவர் செந்தில் நாதன்

வாதங்கள் தோல்வியடையும் தருணத்தில், நம் கண்ணியம் தாக்கப்படுகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, நம் ஒழுக்கம் திட்டமிட்டு அவமதிக்கப்படுகிறது. பாலியல் இழிவுபடுத்தும் மொழியும், மிரட்டல்களும், பொது மேடைகளில் செய்யப்படும் அவமானங்களும் தவறுதலாக நிகழ்பவை அல்ல. இவை ஆண்டாண்டுகாலமாக பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்.

பெண்களை மௌனமாக்க, பொது வெளிகளில் இருந்து, அரசியலிலிருந்து, தலைமைத்துவத்திலிருந்து வெளியேற்றவே இந்த ஆபாசத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இப்படித்தான் பொது வெளிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறுகின்றன. இப்படித்தான் பெண்கள் பின்னடைய வைக்கப்படுகிறார்கள்.

இதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இது ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாதிக்காது. பல பெண்களின் குரலை மௌனமாக்கும், அச்சுறுத்தும். இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் பொது வெளிகளைச் சுருக்கும்.

பெண்களை வெறும் உடலாக, பாலியல் பொருளாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்ப்பது, பெண்களை அவமதிப்பது ஆபாசத் தாக்குதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது இதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம். பா.ஜ.க மாநிலத்தலைவர் துவங்கி, மாவட்ட தலைவர் வரை இதைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

அதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை. நம்மை வெட்கித் தலைகுனிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு பெண்ணாக நாம் வெட்கப்படுவதற்கோ, அச்சப்படுவதற்கோ ஒன்றுமில்லை. அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும், அதற்காகவே இதை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக இதுபோன்ற இழிசெயல்களை, அழுகிப்போன மனநிலையை, ஆபாச தாக்குதல்களை, பெண்களுக்கு எதிரான அரசியல் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

அப்பொழுதான் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தாக்குதலை ஒரு ஆயுதமாகக் கையில் எடுப்பதை நாம் தடுத்து நிறுத்தமுடியும். பொதுவெளியில் நமது உரிமையை,கண்ணியத்தை நிலை நாட்ட முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நடிகர் விஜயுடன் பிரபல நடிகையை இணைத்துப் பேசிய விவகார சலசலப்பு அடங்கிய நிலையில், கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவரின் பேச்சு மீண்டும் விவாதகளத்துக்கு வந்திருக்கிறது


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Discussion about the actress: ‘A word was mistakenly said that day’ – Nayanar Nagendran’s regret!

West Bengal: Congress to contest independently; four-way contest emerging – is it beneficial for BJP?