அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் பிரிவில் முதுகலைப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர்.

தொடர்ந்து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதாகச் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாகேத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சாகேத், சென்னை ஐஐடி-யில் இளங்கலை முடித்தவர். Microchannel cooling system for hyperloop தொடர்பான காப்புரிமை பெற்ற ஆறு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. அவர்களின் பாதுகாப்புக்காக அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.


மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.

More From Author

How can large breasts affect women’s health?

Ukraine – Russia: “America must provide security for 20 years” – Ukrainian President Zelensky