Vijay : தவெக vs சேகர் பாபு vs தவெக; துறைமுகம் தொகுதியின் முக்கோண மோதல்!

கடந்த வாரத்தில் துறைமுகம் தொகுதியில் திமுகவினருக்கும் தவெகவினற்கும் இடையே நடந்த மோதலின் சூடு இன்னமும் அந்தப் பகுதியில் தணியவில்லை. களமிறங்கி விசாரித்ததில் நமக்கும் தொகுதிக்குள் நிலவும் முக்கோண மோதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

தாக்குதல் நடந்த அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள்
தாக்குதல் நடந்த அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள்

பிப்ரவரி 10 ஆம் தேதி தவெகவை சார்ந்த சிலர் துறைமுகம் தொகுதியின் 60 வது வார்டில் உள்ள அங்கப்பன் நாயக்கர் தெருவில் 2026 தேர்தல் சார்ந்த கருத்துக்கணிப்புகளை எடுக்க சென்றிருக்கின்றனர். அந்த சமயத்தில் அங்கே திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்படவே காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கின்றனர். இதில் திமுகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி தவெகவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உட்பட 6 ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களை பார்க்க வந்த தவெகவின் முக்கிய நிர்வாகிகளான சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா போன்றோர் ‘துறைமுகம் அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதி என்பதால் அவர்தான் ரவுடிகளை ஏவிவிட்டு தவெகவினரை தாக்கியிருக்கிறார்’ எனக் குற்றஞ்சாட்டினர். ‘இது ஒரு அராஜகத் தாக்குதல். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது’ என தவெக தலைவர் விஜய்யும் ட்வீட் செய்திருந்தார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

திமுகவின் 60 வார்டு வட்டச் செயலாளர் கவியரசு மீதுதான் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவரை தொடர்புகொண்டு பேசினோம். ‘தவெகவினர்தான் லோக்கல் காவல்துறையினுடைய அனுமதி கூட வாங்காமல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் எங்கள் பகுதி மக்களை மிரட்டியிருக்கின்றனர். கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் எதற்கு கட்சித்துண்டை போட்டுக் கொண்டு வர வேண்டும்? தவெகவுக்கு ஓட்டு போடுவீர்களா மாட்டீர்களா என அதட்டும் தொனியில் எங்கள் பகுதி மக்களிடம் கேட்டிருக்கின்றனர்.

நிலைமை தீவிரமடைகையில்தான் பகுதி மக்கள் எனக்கு போன் செய்தனர். நானும் அமைச்சர் சேகர் பாபுவும் ஸ்பாட்டிலேயே இல்லை. ஒரு முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தோம். அங்கிருந்து முதலில் காவல்துறைக்குதான் தொடர்புகொண்டோம். அதற்குள் தவெகவினர் வெளியிலிருந்து ஆட்களை திரட்டி வன்முறையில் இறங்கிவிட்டனர். இதில் பாதிக்கப்பட்டது எங்கள் பகுதி மக்கள்தான். சேகர் பாபு அண்ணன் சொல்லி நாங்கள் தவெகவினரை தாக்கினோம் என்பதில் துளி கூட உண்மையில்லை. அவர்கள் தாக்கியதில்தான் எங்கள் பகுதி மக்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்’ என்றார்.

சென்னை - சேகர் பாபு
சென்னை – சேகர் பாபு

திமுகவினர் எங்களை தாக்கியது உண்மைதான். ஆனால், இந்த விவகாரத்தை திமுக Vs தவெக என்று மட்டும் பார்க்க முடியாது. இதற்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் ஒரு முக்கிய காரணம்’ என வேறொரு கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பற்றி விளக்கினர் லோக்கல் தவெகவினர். ‘தொகுதிக்குள் சேகர்பாபுவின் ஆட்களால் எங்களுக்கு பிரச்னை இருப்பது உண்மைதான். தொகுதியில் உள்ள 6 வார்டுகளில் 19 கொடிக்கம்பங்களை நட்டிருந்தோம். அந்த கொடிக்கம்பம் நட இடம் கொடுத்தவர்களையெல்லாம் மிரட்டி திமுகவில் இணைய சொல்கிறார்கள். ஒரு தெருமுனை கூட்டத்தை கூட முறையாக நடத்த முடியவில்லை. காவல்துறையினர் எக்கச்சக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால், இந்த மோதல் கொஞ்சம் வித்தியாசமானது.

கட்சிக்குள் இப்போது வரை 132 மா.செக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், முக்கியமான துறைமுகம் தொகுதிக்கு இன்னமும் மா.செ நியமிக்கப்படவே இல்லை. மூன்று கோஷ்டியினர் மா.செ பதவிக்காக அடித்துக் கொண்டிருக்கிறது. T. ராஜேஷ் மக்கள் இயக்கத்திலிருந்து நீண்ட காலமாக தளபதியோடு பயணிப்பவர். அவரும் மா.செ பதவி வேண்டும் என்கிறார். இன்னொரு ராஜேஷ் இருக்கிறார். அவரும் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். மூன்றாவதாக அட்வகேட் விஜயகுமார். இவர்தான் கடைசியாக தொகுதிக்குள் வந்தார். இவர் மா.செ + எம்.எல்.ஏ டிக்கெட் என இரண்டையும் எதிர்பார்க்கிறார்.

T. ராஜேஷ்
T. ராஜேஷ்

இவர் வெளியாள் என்பதால் தொகுதிக்குள் பெரியளவில் ஆதரவு இல்லை. தனக்கு ஆதரவு இருப்பதைப் போல காட்டிக் கொள்ள ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு சர்வே என்ற பெயரில் வீடியோ போட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார்.

தொகுதிக்குள் பல வருடமாக வேலை பார்த்து வைத்திருக்கும் நிர்வாகிகள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தாமாக இப்படியான சுய விளம்பர வேலைகளில் இறங்கியதுதான் பிரச்னையே. இதற்கு முன்னரும் அவர் பல தடவை சர்வே எடுக்கிறேன் என போய் பிரச்னை ஆகியிருக்கிறது. இந்த முறைதான் வெளியில் தெரிகிறது.

எங்களுக்கு அவர் மேல் உடன்பாடு இல்லையென்றாலும் தவெக பெயரை சொல்லி சென்றவருக்கு அடி விழுந்ததால் நாங்களும் மருத்துவமனைக்கு சென்று அவர்களுடன் நின்றோம். தலைமை திமுகவினரின் தாக்குதலுக்கு உடனடியாக ரியாக்ட் செய்ததிலும் மகிழ்ச்சிதான். ஆனால், தொகுதிக்குள் உண்மையான பிரச்னை என்னவென்பதை தலைமை உணர வேண்டும்.

தேர்தல் அறிவிப்பு 2-3 வாரங்கள்தான் இருக்கிறது. இன்னமும் தொகுதிக்கு மா.செவை நியமிக்கவில்லை. சேகர் பாபு தொகுதியில் கட்சி கட்டமைப்பே இல்லாமல் எப்படி வேலை செய்ய முடியும்? இப்போதே ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு பக்கம் வேலை செய்து நெகட்டிவாகிறது.

M.Rajesh
M.Rajesh

தேர்தலின் போதும் இப்படி கோஷ்டியாகவே பிரிந்து நின்றால் எப்படி வேலை செய்ய முடியும்? பிரச்னை வீதிக்கு வந்த பிறகும் தலைமை நிர்வாகிகளை நியமிக்காமல் தாமதப்படுத்துவதில் வருத்தமே’ என்கின்றனர் துறைமுக தவெக தொண்டர்கள் சிலர்.

சர்வே எடுக்க ஆட்களை கூட்டி சென்ற தவெக நிர்வாகி அட்வகேட் விஜயகுமாரிடம் பேசினேன். ’20 நாட்களாக சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொகுதிக்குள் தவெகவுக்கு இருக்கு பெரும் செல்வாக்கை திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திட்டமிட்டு 100 ரவுடிகளை இறக்கி எங்களை தாக்கினார்கள். கட்சி விவகாரத்தைப் பொறுத்தவரை தலைமை சொல்லாமல் நான் எப்படி தேர்தல் வேலைகளை செய்ய முடியும்? தலைமைதான் மா.செ பதவியும் தொகுதியும் எனக்குதான் என்பதை உறுதியளித்து வேலை பார்க்க சொல்லியிருக்கிறது.

அட்வகேட் விஜயகுமார்
அட்வகேட் விஜயகுமார்

நீங்கள் சொல்லும் அந்த இரண்டு ராஜேஷ் மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கட்சிக்குள் கமிட்டி அமைத்து விசாரிக்கப்பட்டு அந்த கமிட்டியே அவர்களை எனக்கு ஒத்துழைப்பு வழங்க சொல்லியிருக்கிறது’ என்கிறார்.

‘திமுகவினர் தவெகவினரை தாக்கியதுதான் இங்கே பிரச்னை. ரவுடிகளை இறக்கி கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எல்லா கட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன மனமாச்சரியங்கள் இங்கேயும் இருக்கலாம். அதெல்லாம் சரியாகிவிடும்’ என்கிறார் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்.

திமுகவினருக்கும் தவெகவினருக்கும் சண்டை என நினைத்து துறைமுகம் தொகுதிக்குள் காதை கொடுத்தால், ‘தவெக vs தவெக’ என புதிய கதை ஓப்பன் ஆகிறது. ‘கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டவில்லையெனில் துறைமுகம் தொகுதியை மறந்துவிட வேண்டியதுதான்’ என்கிற லோக்கல் தவெகவினரின் குரல் தலைமைக்கு கேட்குமா?.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Trump ordered the deployment of the world’s largest warship to the Middle East.

“What we hear are only the places where you have failed” – Manickam Thakur’s retort to Rajagannappan