‘இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த 2 மாதம்… அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு, மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாதம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையான ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்று இன்று காலை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அவர் அறிவிக்கும் முன்பே அந்த தொகை பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட, இந்த அறிவிப்பு தி.மு.க-வுக்கு தேர்தல் கால திருப்புமுனையாக அமையும் என அக்கட்சி தரப்பு முழுமையாக நம்புகிறது.

பிப்ரவரி 17-ம் தேதி அன்று தமிழக அரசின் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படுவதால் இடைக்கால பட்ஜெட்டாகவே கருதப்படும். இந்த பட்ஜெட்டில் தேர்தலை மனதில் கொண்டு, பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக மாதாந்திர மகளிர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து உயர்த்தும் அறிவிப்பு வரும் என்றே தலைமை செயலகத்தில் பேச்சு இருந்தது.
இந்நிலையில் தான் 13-ம் தேதி காலை மகளிர் உதவித்தொகை பெறும் வங்கி கணக்குகளுக்கு 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதோடு இது குறித்து முதல்வர் பேசிய வீடியோவும் வெளியானது.
ரகசிய திட்டம் ஏன்?
மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளும் அப்செட்டாகி உள்ளார்கள். தேர்தலை மனதில் வைத்து தி.மு.க அரசு இப்படி திட்டத்தை கையில் எடுப்பது தெரிந்தால், நீதிமன்றத்தின் மூலம் இதற்கு தடையாணை பெற்றுவிடுவார்கள் என்று பணம் வங்கி கணக்கிற்கு வரும் வரை இந்த விசயம் லீக் ஆகாமல் அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.
இதுகுறித்து தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “அரசு புதிதாக எந்த திட்டத்தை அறிவிக்க இருந்தாலும், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் தரப்பில் அது குறித்த ஆலோசனைகள் நடந்தேறும். அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடக்கும் போதே அந்த விவகாரம் எதிர்கட்சிகளின் காதுக்கும் சென்றுவிடும்.

சமீபத்தில் இந்த மகளிர் உதவித்தொகையை அதிகரிக்கும் அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவிக்க இருந்தார் முதல்வர். அந்த அறிவிப்பை வெளியிடும் முன்பே, அதுகுறித்த தகவல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி காதுக்கு சென்றுவிட்டது. அதனால் அவர் அவசரமாக அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மாதம் இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது முதல்வர் தரப்பை கடும் அப்செட்டாக்கிவிட்டது. நாம் தீட்டும் திட்டம் எதிர்கட்சியினர் அறிந்து அறிவிப்பாக அவர்கள் வெளியிடுகிறார்களே? என்று அதிகாரிகளிடம் கடித்துக்கொண்டார
அதன்பிறகே இந்த ஐயாயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியே போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளது அதிகாரிகள் தரப்பு. இதற்கு மாஸ்டர் மைன்ட்டாக இருந்தவர் முதல்வரின் நம்பிக்கைகுரிய அதிகாரியான நிதித்துறையை சேர்ந்தவர் தான் என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், மகளிரை கவரும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என்று சொன்னதும், அதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனையில் இறங்கினார்கள். மற்றொருபுறம், தமிழகத்தின் நிதி நிலை ஏற்கனவே கடனில் இருக்கிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. கடனுக்காக திட்டங்களை எதுவும் நிறுத்த வேண்டாம் என்பதில் அதிகாரி உறுதியாக இருந்துள்ளாராம்.
தற்போது ஆயிரம் ரூபாய் என்று மாதத்திற்கு 1கோடியே முப்பது லட்சம் பேருக்கு வழங்குவதற்கு ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய்கும் அதிகமாக செலவாகிறது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரம் இதை 2000 ரூபாயாக அதிகரித்தால் அந்த நிதி சுமையை சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். இதையெல்லாம் நிதித்துறை தீவிரமாக ஆலோசித்து வந்தது.

பென் நிறுவனம் கொடுத்த அழுத்தம்
மற்றொருபுறம், தி.மு.க வுக்கு ஆதரவாக வியூகம் வகுத்து வரும் பென் நிறுவனம் இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தும் அறிவிப்பு ஒருபுறம் இருக்கட்டும், பெண்களுக்கு கணிசமான ஒரு தொகையை தேர்தலுக்கு முன்பாக கொடுத்துவிட வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்தது. பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றிக்கு அந்த மாநில பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பத்தாயிரம் ரூபாய் பெரும் பங்கு வகித்தது. அதே பாணியை தி.மு.கவும் கையில் எடுக்க வேண்டும் என பென் நிறுவனம் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது.
இந்நிலையில் தான் முதல்வரிடம் ஆளுநர் உரைக்கு மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முடிந்தவுடன் நிதித்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, `5000 ரூபாய் ஒரே கட்டமாக வழங்கிவிடலாம். 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளுக்கு ஒரே நாளில் இத் தொகையை செலுத்த அரசுக்கு 6,500 கோடி ரூபாய் வேண்டும்’ என்கிற விவரங்களை கூறியிருக்கிறார். இந்த பணத்தை எந்த துறையிலிருந்து சரிக்கட்ட முடியும் என்கிற ஆலோசனையும் அதன்பிறகு நடந்துள்ளது. இதற்கு முதல்வர் ஒப்புதல் கிடைத்தவுடன், உடனடியாக களத்தில் இறங்கினார் அதிகாரி.

தனக்கு நம்பகமாக நிதித்துறையின் டீமை மட்டும் வைத்து இது குறித்த திட்ட அறிக்கை தயார் செய்து, கடந்த வாரம் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று விட்டனர். வெள்ளிக்கிழமை அன்று வங்கி கணக்கில் போட்டால், உடனடியாக யாரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என முதல்வரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.
மற்றொருபுறம் இத்திட்டம் அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இந்த திட்டம் குறித்த வீடியோ சூட்டை பென் நிறுவனம் நடத்தி முடித்துவிட்டது. ஆனால் எந்த பக்கமும் தகவல் கசியாமல் இதனை செய்து முடித்து எதிர்க்கட்சி தரப்புகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துது திமுக தரப்பு.
இது தேர்தலில் கை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.