கோவை பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக மகளிரணி மாநாட்டில் 10 ரூபாய் அமைச்சர், ‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதுதான் இலக்கு’ என்று பேசுகிறார்.

டாஸ்மாக்கில் வேண்டுமானால் பாட்டிலுக்கு 10 ரூபாய் திருடி ஜெயிக்கலாம். ஆனால், கோவை மக்கள் மனதை தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதோ வென்றுவிட்டது. கோவையில் 10 க்கு 10 என்கிற உங்கள் கனவு வெறும் கனவாக மட்டும் தான் இருக்கும்.
கோவையின் வளர்ச்சியை தடுத்து நாசம் செய்தவர்களை எந்த காலத்திலும் இங்கு விட்டுவிடக்கூடாது. அதிமுகவையும், பாஜகவையும் அடிமை கூட்டணி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக மகளிரணி மாநாட்டில் விமர்சித்துள்ளார். திமுகவை விட அதிக காலம் ஆட்சியில் இருந்தது அதிமுகதான்.

ஆம் அதிமுக அடிமை கட்சி தான். மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு அடிமையாக உள்ளனர். தமிழ்நாட்டு மக்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அடிமை. திமுக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்காது.
திமுக 2021 தேர்தலில் அளித்த 511 வாக்குறுதிகளில் 51 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உலகத்திலேயே அதிக பொய் சொல்வது கனிமொழி தான். பொய்யிலே பேசி பொய்யில் வாழும் கனிமொழியை 2026 திமுக தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக போட்டுள்ளனர்.

அடுத்த 100 நாள்களில் திமுக 100 பொய்களை சொல்வார்கள். அதை நம்பாமல் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் நம் கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவது எங்களின் பொறுப்பு.” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.