தவெகவுக்கு ஆதரவு இல்லை என IUML திடீர் அறிவிப்பு!
“தவெகவுக்கு ஆதரவு இல்லை.”
திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக IUML அறிவிப்பு.
தற்போது வரை 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே தவெக-வுக்கு உள்ளது.
ஸ்டாலினுடன் திருமா சந்திப்பு; `ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ – வன்னி அரசு
தவெக தலைவர் விஜய் நாளை காலை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், ஐ.யூ.எம்.எல் மற்றும் விசிக கட்சிகள் தங்களின் ஆதரவு கடிதத்தை தவெக தரப்பிடம் இதுவரையிலும் வழங்காமல் இருப்பது, பல்வேறு யூகங்களை எழுப்பியிருக்கிறது.
இத்தகைய சூழலில், திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார். வன்னி அரசு தனது சமூக வலைதளத்தில், `ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு… இது திருமா காலம்!’ என்று பதிவிட்டிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விஜய்!
ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாளையே தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்பார் என்று சொல்லப்படுகிறது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் ஆதரவால் 120-ஐ தொட்டிருக்கிறது தவெக. எனவே, மேற்கொண்டு தாமதிக்காமல் ஆளுநர் அர்லேக்கர் விரைந்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூடியிருந்த பாலன் இல்லத்துக்கு நேரில் சென்று, சிபிஎம் – சிபிஐ ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார், விஜய்.
முதல்வராகிறார் தவெக விஜய்; நாளை பதவியேற்பா?
ஐ.யூ.எம்.எல் கட்சி தவெக-வுக்கு தனது ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து 118 என்ற பெரும்பான்மை நிலையை உறுதி செய்திருக்கிறது விஜய்யின் தவெக. விஜய் ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை உறுதிசெய்து, நாளை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
`2 இடங்கள்… 2 கட்சிகள்’ – விசிக-வா ஐ.யூ.எம்.எல்-ஆ?
ஆளுநர் மாளிகையில் இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆதரவு கடிதங்களை ஆளுநர் அர்லேக்கரிடம் வழங்கி, பெரும்பான்மையை நிரூபிக்கவிருக்கிறார். ஆனால் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு, அவரின் கட்சிக்கு இன்னும் 2 இடங்கள் தேவை. விசிக தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் எனக் கூறப்படும் நிலையில், அதில் தொடர்ந்து தாமதித்துக் கொண்டே இருக்கிறது விசிக. மற்றொருபுறம், ஐ.யூ.எம்.எல் கட்சியும் தவெக-வுக்கு ஆதரவு வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு இடங்களில் ஆதரவு தேவைப்படும் சூழலில், இரண்டு கட்சிகளில் யார் ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே சமயம், 118 என்ற பெரும்பான்மையைக் கடந்து இரண்டு கட்சிகளுமே தவெக-வுக்கு ஆதரவை வழங்கலாம் என்ற பேச்சும் நிலவிக் கொண்டிருக்கிறது.
ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் மாளிகைக்கு விரைந்திருக்கிறார். சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் விஜய் ஆளுநரைச் சந்திக்கவிருக்கிறார். விசிக தனது முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், ஐ.யூ.எம்.எல் கட்சியுடனும் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. விஜய் மூன்று நாள்களில் மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் தவெக தலைவர் விஜய்?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார். அவர் ஆளுநரைச் சந்திக்கச் செல்வதாகச் சொல்கிறார்கள். அதே சமயத்தில், இந்திய முஸ்லீம் யூனியன் லீக் கட்சி அலுவலகத்தில் தவெக-வின் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இரு எம்.எல்.ஏ-க்களைக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் யூனியன் லீக் கட்சி, தவெக-வுக்குத் தனது ஆதரவை வழங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இணைய வழி ஆலோசனையில் திருமாவளவன்; சற்று நேரத்தில் முடிவை அறிவிக்கும் விசிக!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் இணையவழியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்திக்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக விசிக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தவெக-வுக்கு ஆதரவு இல்லை!” – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்

“தவெக-வுக்கு ஆதரவு இல்லை. அதிமுகவுடன் இணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம்” – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்
ஐ.யூ.எம்.எல்-லிடம் ஆதரவு கோரும் தவெக!

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை உறுதி செய்திருக்கும் தவெக, விசிக முடிவுக்காகக் காத்திருக்கிறது. இந்த மூன்று கட்சிகளின் ஆதரவே பெரும்பான்மைக்குப் போதும் என்ற நிலையில், இந்திய முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் காதர் மொய்தீனை தவெக தரப்பு மீண்டும் சந்தித்து ஆதரவு கோரியிருக்கிறது. ஐ.யூ.எம்.எல் ஏற்கெனவே, `திமுக உடன் தொடர்வோம்’ எனக் கூயிருந்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் கூடுதல் ஆதரவு இருக்க வேண்டும் என்ற முடிவில், ஐ.யூ.எம்.எல்-லிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அமமுக தே ஜ.கூட்டணியில்தான் உள்ளது..!
கூட்டணி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது”. என்றிருக்கிறார்,
`நிபந்தனையற்ற ஆதரவா… நிபந்தனையுடன் கூடிய ஆதரவா? – தீவிர ஆலோசனையில் விசிக!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இன்னும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதும். இந்த நேரத்தில் அனைவரின் கவனமும் திருமாவளவனின் விசிக பக்கம்தான் குவிந்திருக்கிறது.
`திருமாவும் நாங்கள் எடுக்கும் முடிவைத்தான் எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்’ என்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவிப்பதா… அல்லது அமைச்சரவையில் இடம் போன்ற டிமாண்டுகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஆதரவைத் தெரிவிப்பதா என்பது குறித்த தீவிர ஆலோசனையில் விசிக தலைவர் திருமாவளவனுடன் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
“ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே தவெக-வுக்கு ஆதரவு!” – சிபிஎம் சண்முகம்
சென்னை பாலன் இல்லத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சிபிஎம் சண்முகம், “ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவே தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். நாங்க எடுக்கும் முடிவையே திருமாவளவன் எடுப்பதாகக் கூறியிருக்கிறார். அவர் தற்போது வேறொரு கூட்டத்தில் இருக்கிறார். மக்கள் முன்மொழிந்ததை, நாங்கள் வழிமொழிகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும்! – ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சற்று நேரத்தில் முடிவை அறிவிக்கும் திருமா; ஆளுநரைச் சந்திக்கும் விஜய்!
சிபிஎம் கட்சி அலுவலகத்துக்கு சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வருகை தந்திருக்கிறார். அங்கு விசிக தலைவர் திருமாவளவனும் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆளுநரைச் சந்திப்பதற்கு முன்னதாக விஜய்யும் பாலன் இல்லத்துக்கு நேரில் சென்று, அங்கு விசிக-வின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு, மூன்று கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன் சற்று நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் சைகை!

`விசிக-வுக்கு வெயிட்டிங்’ – ஆட்சி அரியணை நோக்கி முன்னகரும் விஜய்!
காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவால் படுதெம்பாகக் காணப்படுகிறது தவெக. அக்கட்சியின் முதல் ஆப்ஷன் படி இன்னும் திருமாவின் விசிக தவெக-வுக்கு ஆதரவு கரத்தை நீட்டினால், பெரும்பான்மையை உறுதி செய்துவிடும் தவெக. அப்படி நடக்காத பட்சத்தில் பாமக, தேமுதிக என்கிற இரண்டாவது ஆப்ஷன் குறித்தும் தவெக யோசித்துக் கொண்டிருக்கிறது.
மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக-வின் ஆதரவு கடிதங்களைப் பெற்று, இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் அர்லேக்கரைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது!
பனையூர்: பெரும்பான்மையை உறுதிசெய்யும் தவெக – கொண்டாட்டத்தில் தவெக-வினர்!






தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி 5 உறுப்பினர்களைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருக்கிறது. மீதம் 6 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் 2 உறுப்பினர்களைக் கொடுத்து தவெக-விற்கு ஆதரவு அளித்திருக்கிறது. சற்றுநேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தவெக விஜய் ஆட்சி அமைக்கும் சூழல் நெருங்கி வரும் நிலையில், பனையூரில் தவெக-வினர் படு உற்சாகத்தில் இருக்கின்றனர்.
`இன்னும் நான்கே உறுப்பினர்கள்…’ – ஆட்சிக் கட்டிலில் எறத் தயாராகும் தவெக!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைத் தொடர்ந்து நம்பர் கேமில் 114-ஐ தொட்டிருக்கிறது தவெக. இன்னும் நான்கே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்போதும், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைப்பதற்கு! 118 என்ற பெரும்பான்மை நிலையை விஜய் உறுதி செய்யும் பட்சத்தில், ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க அழைப்பு உடனடியாக விடுக்கப்படும். திராவிடக் கட்சிகளின் காய்நகர்த்தல்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தற்சமயம் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தை நோக்கிய இந்த ரேஸின் கடைசி லேப்பில், விஜய்யின் கையே ஓங்கியிருக்கிறது!
சிபிஐ-யை தொடர்ந்து சிபிஎம்மும் தவெகவிற்கு ஆதரவு!
சிபிஎம் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தவெகவிற்கு ஆதரவு கொடுக்க சிபிஎம் செயற்குழுவில் தீர்மானம் என தகவல்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அணிமாறும் இடதுசாரிகள்… ஆட்சியமைக்கிறதா தவெக?
திமுக கூட்டணியில் பயணித்துவந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தவெக ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறியிருக்கின்றன. தவெக-வுக்கு ஆதரவு கடிதத்தை சற்றுமுன்பு வழங்கியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதைத் தொடர்ந்து தவெக தரப்பின் பலம் 114 ஆக உயர்ந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக-வும் தவெக-வை ஆதரிக்கும் திட்டத்தில்தான் இருக்கின்றன என்கிற தகவலும் வெளியாகி வருகிறது. கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ-வைக் கொண்டிருக்கும் தேமுதிக-வும் தவெக பக்கம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தவெகவை ஆதரிக்கும் சிபிஐ!
தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் வருகை.
இன்னும் சற்று நேரத்தில் ஆதரவு கடிதத்தினை கொடுக்க உள்ளதாக தகவல்.
மேஜிக் எண் 118 – சவாலில் சாதிக்கும் விஜய்; என்ன செய்வார் ஆளுநர்?
பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை உறுதிசெய்து கொண்டு வருமாறு, ஆளுநர் தரப்பில் நேற்றைய தினம் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
107 இடங்கள் கையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் 112 இடங்களை சாத்தியமாக்கிய தவெக-வுக்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய சூழலில் விஜய் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை உறுதிசெய்துவிட்டார் என்கிறார்கள்.
நேற்று முன்தினத்திலிருந்தே ஆளுநர் தாமதப்படுத்தி வருவதாக, அரசியல் தளத்தில் விவாதங்கள் வெடித்து வரும் நிலையில், தனக்கு வழங்கப்பட்ட சவாலில் மேஜிக் எண் 118-ஐ தவெக இன்று தொடும் பட்சத்தில், ஆளுநர் மேற்கொண்டு தாமதிக்காமல் ஆட்சி அமைக்க வருமாறு விஜய் தலைமையிலான தவெக-வுக்கு அழைப்பு விடுப்பார் என்றே கூறப்படுகிறது.
திராவிடக் கட்சிகளின் சமீபத்திய காய்நகர்த்தல்கள் களத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், விஜய் மேற்கொண்டு தாமதிக்காமல் விரைந்து ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வருகிறார்.
3.30-க்கு நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் கம்யூனிஸ்ட்கள்; 4.30-க்கு ஆளுநரைச் சந்திக்கும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க இன்னும் 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.
இதில் இடதுசாரி கட்சிகளும், விசிக-வும் இசைவு தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேபி, `அதிமுக ஆட்சி அமைக்க முடியாது’ எனத் தெரிவித்திருந்தார்.
இன்று மாலை 3.30-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கடிதத்தை தவெக-விடம் வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்றக் கையோடு, தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் இன்று மாலை ஆளுநரை விஜய் சந்திப்பார் எனச் சொல்லப்படுகிறது.
`மூன்று நாளில் மூன்றாவது முறையாக’ – ஆளுநரைச் சந்திக்கும் விஜய்!
இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை கிண்டியிலுள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேக்கரைச் சந்திக்கவிருக்கிறார்.
பரபரப்பான அரசியல் சூழலில், விஜய்யின் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம், பெரும்பான்மையை உறுதி செய்துகொண்டு வருமாறு ஆளுநர் தரப்பில் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டம் நடத்திய நிலையில் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளார். இன்று மாலை விசிகவும் உயர் நிலை கூட்டம் நடத்துகிறது.
`யார் அரசு அமைத்தாலும் பாஜக விலகி நிற்கும்!’ – நயினார் நாகேந்திரன் சூசகம்

பரபரப்பான அரசியல் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக-வின் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கிறார் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
“பாஜக-வுக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை. புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் வாக்களிக்க மாட்டோம். யார் அரசு அமைத்தாலும் பாஜக விலகி நிற்கும்” எனத் தெரிவித்திருக்கிறார். நயினாரின் பேச்சு, அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழப் போகிறதா என்ற யூகங்களை எழுப்பியிருக்கிறது.
`10-ம் தேதி வரை… விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால்..!’ – டி.கே.எஸ்.இளங்கோவன்
“விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக பக்கம் செல்வார்களா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. அதிமுக-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பது தொடர்பாகவெல்லாம் எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை. விஜய் ஆட்சி அமைக்க 10-ம் தேதி வரை ஆளுநர் அவகாசம் அளித்திருக்கிறார். விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.” எனத் தெரிவித்திருக்கிறார் திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்
`வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ – விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!” என பதிவிட்டிருக்கிறார்.
எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்?

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. #திமுகஅதிமுககூட்டணி.” என பதிவிட்டிருக்கிறார்.
பனையூரில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பனையூரில் நடந்து வரும் தவெகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சார்பில் வென்ற 106 எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். ஒருவர் கூட ஆப்சென்ட் இல்லை என கட்சி வட்டாரத்தில் தகவல்.
தவெக தலைவர் விஜய் மட்டும் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தனியாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் சிலர், தவெக எம்.எல்.ஏக்களில் சில மாயம் என செய்திகள் பரப்பும் நிலையில், தவெக தரப்பில் இந்த தகவலை மறுக்கிறார்கள்.
மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!








நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.
ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். இதனிடையே விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசியலில் நீடிக்கும் குழப்பம் – பரபரக்கும் கட்சிகளின் ஆலோசனைகள்
பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆ.ராசா, என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து விஜய் அடுத்த கட்ட முடிவை எடுப்பார் எனத் தெரிகிறது.
மற்றொரு புறம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழு கூட்டங்கள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆலோசனையில் முடிவில் தான் தவெக ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
செங்கோட்டையன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!
செங்கோட்டையன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பலரும் கடந்த 2 நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்க கூடிய நிலையில், அடுத்து எப்படி செயல்பட வேண்டும் கையாள வேண்டும் என்பது குறித்து செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது

`இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்’
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு.
அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; ஆளுநர் மாளிகை அல்ல.
இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு: 1994 (3) SCC 1
இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தங்களை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், விஜய்யின் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
“ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லை” என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

திமுக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு “அவசரகால முடிவுகளை” எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவும், ‘சமூக விரோத சக்திகள்’ உள்ளே வருவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், அவருக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் ஒரு திட்டம் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் இணைவதை மக்கள் ஏற்கும் விதமாக இருக்குமா? என்ற அச்சம் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உள்ளது.
அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், “தவெக-வுடன் கூட்டணி கிடையாது; கட்சித் தாவல் பேச்சுக்கே இடமில்லை” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாள்களுக்கு அமைதி காக்குமாறு தனது எம்.எல்.ஏ-க்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து ஆட்சியமைக்க முயன்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் என அக்கட்சித் தலைமை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, இரு கட்சிகளும் ரகசியக் கூட்டணியில் ஈடுபடுவதாக தவெக சந்தேகிப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? அல்லது மீண்டும் ஒரு தேர்தல் வருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.