இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன?

‘இந்தியா – நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று முடிவாகி உள்ளது’ – இது தான் இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும், அதிகம் பேசப்படும் ஒன்று.

இந்தியா – நியூசிலாந்து பேச்சுவார்த்தை

இந்தியா, நியூசிலாந்து இடையே கிட்டத்தட்ட 9 மாதங்களாக வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த 9 மாதப் பேச்சுவார்த்தை நேற்று சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக முடிவாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் நியூசிலாந்து அரசு வரி வசூலிக்காது.

மேலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நியூசிலாந்து 20 பில்லியன் டாலர்களை முதலீடு (Foreign Direct Investment) செய்ய உள்ளது.

Foreign Direct Investment
Foreign Direct Investment

இந்தியா என்ன செய்யும்?

நியூசிலாந்து இவ்வளவு செய்கிறது என்றால், இந்தியாவும் பதிலுக்கு எதாவது செய்ய வேண்டும் தானே.

அதனால், இந்தியா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதியாகும் 70 சதவிகித பொருள்களுக்கு வரிகளைக் குறைக்க உள்ளது.

செம்மறி ஆடு கறி, கம்பளி, மரக் கட்டைகள், உலோகத் துகள்கள் போன்ற 30 சதவிகித பொருள்களுக்கு வரியை ரத்து செய்ய உள்ளது.

எப்போது முதல் அமலுக்கு வரும்?

தற்போது இந்தியா, நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தான் முடிவாகி உள்ளது. இன்னும் கையெழுத்தாக இல்லை.

அடுத்த 2 – 3 மாதங்களில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதன் பிறகு, இந்த ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தேவை.

இது எல்லாம் முடிந்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர 6 – 7 மாதங்கள் ஆகிவிடும்.

வின்ஸ்டன் பீட்டர்ஸ் | Winston Peters
வின்ஸ்டன் பீட்டர்ஸ் | Winston Peters

சிக்கல்…

இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற ஒரு சிக்கல் உள்ளது.

நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் பிரதமர் தேசியக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லக்சன். இவர் கூட்டணி வைத்திருக்கும் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சியின் தலைவர் தான் வின்ஸ்டன் பீட்டர்ஸ்.

வின்ஸ்டன் பீட்டர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு நிறைய கிடைக்க உள்ளது. ஆனால், நியூசிலாந்திற்கு இந்த ஒப்பந்தத்தினால் பெரிய லாபம் இல்லை.

இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு வரும்போது, அதற்கு எதிராக வாக்களிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் ஒரு அமைச்சரே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகப் பேசுகிறார். அப்போது எதிர்க்கட்சிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இதனால், இந்த விஷயத்தை இந்திய வர்த்தகத் துறையும், வெளியுறவுத் துறையும் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு என்னென்ன லாபம்?

இந்திய ஏற்றுமதிகளுக்கு ஜீரோ வரி என்கிற போது, நியூசிலாந்திற்கு அதிக ஏற்றுமதிகள் செய்யப்படும்.

இதனால், பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளி, தோல், காலணி, இன்ஜினீயரிங், உற்பத்தி, வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், பிளாஸ்டிக், மருந்து, ரசாயனம் ஆகிய துறைகள் பலனடையும்.

விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் நடத்தும் தொழில்துறைகள், இளைஞர்கள் பயனடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

விசா

மூன்று ஆண்டுகள் வரையிலான 5,000 விசாக்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் யோகா பயிற்றுநர்கள், சமையல் கலைஞர்கள், பாடல் ஆசிரியர்கள், ஐ.டி, இன்ஜினீயரிங், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் பயனடைவார்கள்.

இது குறித்து நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே, “ஒவ்வொரு ஆண்டும் 1,667 திறனுள்ள பணியாளர்களுக்கு 3 ஆண்டு விசா வழங்கப்படும்.

இந்த விசாக்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், இன்ஜினீயர்கள், தகவல் தொடர்புத்துறையை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும். காரணம், இந்தத் துறைகளில் தான் நியூசிலாந்தில் திறன் பற்றாக்குறை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அரசு இந்திய மாணவர்கள் அங்கே சென்று படிக்க மற்றும் வேலை செய்வதற்கான விசாக்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதற்கு எந்த எண்ணிக்கையும் கிடையாது.

இல்லை…

நியூசிலாந்து விவசாயம், பால் மற்றும் பால் பொருள்களுக்கு பெயர் போன நாடு. ஆனால், அந்தத் துறைகளுக்கு இந்தியா எந்தச் சலுகையும் கொடுக்கவில்லை.

இது குறித்து, “இந்தியா தனது பால் துறையை எந்த நாட்டிற்கும் திறக்காது” என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தான் நியூசிலாந்தில் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் முக்கிய புள்ளியாக இருக்கிறது.

இதை இந்திய அரசும், நியூசிலாந்து அரசும் எப்படி சமாளிக்கப்போகிறதோ?


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

TVK: ‘The woman manager who ignored the car; Vijay left without stopping’ – What happened?

People united to protect the Aravalli mountain range – What does the central government say?