ஓங்கியது எடப்பாடியின் கரம்! தஞ்சமடைந்த இரண்டாம் அணி!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணி – எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டு அணியாக மோதிக்கொண்ட நிலையில், இரு அணிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டன. இதற்கிடையில், சி.வி.சண்முகம் -எடப்பாடி இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதிமுக ஐடி விங் ‘இனி பிரிவில்லை’ என எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி தன் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஒப்புக்கொள்வதாகவும், இதை கடிதமாக சபாநாயகரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
எடப்பாடியை சந்திக்க வந்த எஸ்.பி வேலுமணி!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி சண்முகம் தலைமையில் ஒரு அணி தனியாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பலரும் அணி மாறி வருகிறார்கள்.
அந்த வகையில் நான்கு பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அதிருப்தி அணியை சேர்ந்த பலர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி கே பழனிசாமியின் இல்லத்திற்கு வந்து தங்களை மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்துசண்முகம் தலைமையிலான அதற்கு அணி தொடர்ந்து பலவீனமாகி வந்தது.
தற்போது எடப்பாடி பழனி்சாமியை சந்திக்க எஸ்.பி வேலுமணி அவரது இல்லத்திற்கு வந்துள்ளார்.
இதனால் இரு அணிகளும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“காங்கிரஸ் த.வெ.க உடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அறிவித்துவிட்டது. இடதுசாரிகள் ஆட்சிக் கவிழ இடம்தர மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டனர். விசிக வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது பாதுகாப்பற்றது என எண்ணிய த.வெ.க, அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தது. அழைப்பின் நுட்பத்தைப் புரிந்துகொண்டு அமைச்சரவையில் சேரும் முடிவை எடுத்தோம். இந்தக் கட்சிகளின் ஆதரவு 5 ஆண்டுகளுக்கு இருக்கும். இந்த சந்தேகம் வருவதால்தான் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வரக்கூடியவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்ற விமர்சனங்கள் வருகின்றன. இது த.வெ.கவின் எதிர்கால அரசியலுக்கு உகந்தது அல்ல; ஒரு நல்ல அறிகுறியும் அல்ல என்பதைத் தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” – திருமாவளவன்

சமரசம் செய்துகொண்டதா அதிமுக அணிகள்?
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி – சி.வி சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் பரபரப்புகள் அரங்கேறின. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக ஐடி விங்க் தன் சமூக வலைதளப் பக்கத்தில், “எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ – அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. நம் இலக்கு ஒன்றுதான்… அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” எனப் பதிவிட்டிருக்கிறது.
மேகதாது விவகாரம்!

மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? பிரதமர் மோடியிடம் ஏன் நேரடியாக கேள்வி எழுப்பவில்லை என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் விமர்சித்திருக்கிறார்.
பசுவதை: அவசரமாக விசாரிக்க முடியாது

பசுவதைக்கு எதிரான சட்டங்களை நாடு முழுவதும் உறுதியாக அமல்படுத்தக் கோரி, அகில பாரத இந்து மகாசபாவின் முன்னாள் துணைத்தலைவர் சதீஷ்குமார் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
வரும் 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்த மனுவை மே 27-ம் தேதியே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வருண்குமார் சின்ஹா, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்விடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இதில் ‘எந்த அவசரமும் இல்லை’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
பிரதமரைச் சந்திக்கும் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். விஜய்யின் டெல்லி பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கவனித்து வருகின்றனர்.
மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மோடியுடன் நடைபெற இருக்கும் இந்த முதல் சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகள் குறித்த விரிவான மனுவை முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.