Digital Lockdown: ட்ரம்ப் உடன் சீனா சென்ற டெக் தலைவர்களுக்கு என்ன பயம்? சார்ஜர் வழி டேட்டா திருட்டா?

டிஜிட்டல் பனிப்போர்

தற்கால உலக அரசியலில், போர் என்பது ஆயுதங்களைச் சுமந்து கொண்டு எல்லைகளில் நடப்பது மட்டுமல்ல; தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை மையமாகக் கொண்டு இணையவெளியிலும் தீவிரமாக நடந்துவருகிறது. அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார, தொழில்நுட்ப வல்லரசுகள். இவர்களுக்கு இடையேயான போட்டி தற்போது `டிஜிட்டல் பனிப்போர்’ என்ற பரிமாணத்தை அடைந்துள்ளது. இந்தச் சூழலில்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் சீனா சென்றபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான `டிஜிட்டல் லாக்டவுன்’ நடவடிக்கைகள் உலக அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.

Digital Lockdown:ட்ரம்ப்
Digital Lockdown:ட்ரம்ப்

தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் ஜாம்பவான்களே தங்களது சொந்த போன்களை நம்பாமல் பெட்டியில் பூட்டி வைக்கும் அளவுக்கு, உலகளவில் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. எதிர்காலத்தில், உலக நாடுகளின் உறவுகளையும் வர்த்தகத்தையும் இந்த `டிஜிட்டல் நம்பிக்கையின்மை’ முழுமையாகத் தீர்மானிக்கப் போகிறது என்கிறார்கள்.

டிஜிட்டல் பயம்

அமெரிக்கா போன்ற மாபெரும் தொழில்நுட்ப வல்லரசு நாடு இப்படி பயப்படுவது சரியா என்ற கேள்வி எழுவது முற்றிலும் இயல்புதான். ஆனால், இணையப் பாதுகாப்பை பொறுத்தவரை இதனை பயம் என்று கூறுவதை விட `அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை’ என்று சொல்வதே சரியானதாக இருக்கும். அவர்கள் இவ்வாறு தற்காப்புடன் இருப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

ட்ரம்புடன் சென்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; ஆப்பிள், டெஸ்லா, என்விடியா போன்ற பல டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களின் தலைவர்கள். இவர்களின் தனிப்பட்ட செல்போன்களில் அமெரிக்காவின் எதிர்கால தொழில்நுட்பத் திட்டங்கள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கியத் தரவுகள் இருக்கும். இதில் ஒரு சிறிய தகவல் திருடப்பட்டால் கூட, அது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

Digital Lockdown:ட்ரம்ப்
Digital Lockdown:ட்ரம்ப்

ஹேக் செய்ய முடியாது

மென்பொருள் கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா வலுவாக இருந்தாலும், வன்பொருள் உற்பத்தியிலும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளிலும் சீனாவின் ஆதிக்கம் மிக அதிகம். சீன மண்ணில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் இணையும் எந்தவொரு வெளிநாட்டுச் சாதனத்தையும் கண்காணிக்கவோ, ஊடுருவவோ சீன அரசால் முடியும் என அமெரிக்க உளவுத்துறை உறுதியாக நம்புகிறது.

சைபர் உலகில் “நாங்கள் பெரிய தொழில்நுட்ப நாடு, எங்களை யாரும் ஹேக் செய்ய முடியாது” என்ற அதீத நம்பிக்கையுடன் இருப்பதுதான் இணையப் பாதுகாப்பின் முதல் எதிரி. தொழில்நுட்பம் வளர வளர, அதை ஊடுருவும் ஹேக்கிங் திறன்களும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு நாட்டின் தலைவரும், அந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் வணிகத் தலைவர்களும் எதிரி அல்லது போட்டி நாட்டின் மண்ணில் இருக்கும்போது, எந்த ரிஸ்க்கும் எடுக்கக்கூடாது என்பதே சர்வதேசப் பாதுகாப்பு விதி.

பர்னர் போன்கள் (Burner Phones)

சீனாவிற்குள் நுழையும்போது அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவன சிஇஓக்கள் எனப் பலரும் தங்களது சொந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அவற்றிற்குப் பதிலாக, தரவுகள் ஏதுமில்லாத தற்காலிகமான `பர்னர் போன்கள்’ (பயன்படுத்திவிட்டு அழித்துவிடும் ரகம்) மற்றும் பாதுகாப்பான மின்னணு சாதனங்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டன. சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் அதிபர் ட்ரம்பின் சொந்த போன் கூட அவரது `ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலேயே பாதுகாப்பாக வைத்துப் பூட்டப்பட்டுவிட்டது.

அமெரிக்கக் குழுவினர் பயன்படுத்திய தற்காலிகப் போன்களில் `கோல்டன் இமேஜ்’ எனப்படும் ஒரு பாதுகாப்பான, முன்-கட்டமைக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. சீனப் பயணம் முடிந்து அமெரிக்கா திரும்பியவுடன், இந்தப் போன்களை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மீண்டும் சோதனை செய்வார்கள். பயணத்தின்போது சீனாவால் ஏதேனும் உளவு பார்க்கும் சாப்ட்வேர் ரகசியமாகப் புகுத்தப்பட்டுள்ளதா என்பதை `கோல்டன் இமேஜ்’ அமைப்போடு ஒப்பிட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

Digital Lockdown:ட்ரம்ப்
Digital Lockdown:ட்ரம்ப்

ரகசியப் பாதுகாப்பு

சீனாவில் உள்ள ஹோட்டல் வைஃபை இணைப்புகளையோ அல்லது பொது இடங்களில் உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்டுகளையோ பயன்படுத்தவும் அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். மொபைல் சார்ஜ் செய்யும் கேபிள்கள் வழியாகக் கூட தகவல்கள் திருடப்படலாம் என்பதால், அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான பவர் பேங்க்குகள் மற்றும் சார்ஜர்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்தினர்.

எந்தவொரு மின்னணு தகவல் தொடர்பும் சீனாவில் கண்காணிக்கப்படலாம் என்பதால், முக்கியமான விவாதங்களை சாதாரண அறைகளில் அவர்கள் நடத்தவில்லை. எலெக்ட்ரானிக் கண்காணிப்புக் கருவிகளால் ஒட்டுக்கேட்க முடியாத வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட SCIF (Sensitive Compartmented Information Facilities) எனப்படும் ரகசியப் பாதுகாப்பு அறைகளிலேயே முக்கியப் பேச்சுகள் நடந்தன. மேலும் பல தகவல்கள் வாட்ஸ்அப் அல்லது மெயிலில் பகிரப்படாமல், நேருக்கு நேராகவே பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சீனாவின் மறுப்பு

சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய ஹேக்கர்கள் (உதாரணமாக, Volt Typhoon மற்றும் Salt Typhoon குழுக்கள்), அமெரிக்காவின் தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்புத் தரவுகளைத் திருடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த சந்தேகத்தின் வெளிப்பாடே இந்த `டிஜிட்டல் லாக்டவுன்’.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. “நாங்கள் யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் சட்டவிரோதமாக உளவு பார்ப்பதில்லை, இணையப் பாதுகாப்பில் எங்களது சட்டங்கள் மிகவும் வலுவானவை” எனச் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே `டிஜிட்டல் நம்பிக்கை’ என்பது துளியும் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

Digital Lockdown:ட்ரம்ப்
Digital Lockdown:ட்ரம்ப்

டிஜிட்டல் உலகில் `முழுமையான பாதுகாப்பு’ (100% Security) என்ற ஒன்று கிடையாது என்பதை தொழில்நுட்பத்தை உருவாக்கிய நாடுகளே நன்கு உணர்ந்துள்ளன. அமெரிக்கத் தலைவர்களின் இந்தச் சீனப் பயணம் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான்: உளவு பார்த்தல் என்பது ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்ற கற்பனையல்ல, அது இன்றைய புவிசார் அரசியலின் (Geopolitics) கசப்பான நிஜம்.

வல்லரசு நாடுகளும் பெரும் டெக் தலைவர்களுமே `டிஜிட்டல் பூதம்’ கண்டு பயப்படும்போது நாமும் டிஜிட்டல் உலகில் கவனமாக இருந்து நம் தகவல்களைப் பாதுகாக்க வேண்டும். டிஜிட்டலில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொன்னால் எல்லோரும் பயன் பெறலாம்.


மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.

More From Author

Digital Lockdown: What are tech leaders who went to China with Trump afraid of? Data theft through chargers?