விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவளித்த அதிமுகவின் சி.வி.சண்முகம் அணியினர் தங்களுக்கு அமைச்சரவையில் குறைந்தபட்சமாக 5 இடங்களை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக பின்னணி விவரம் அறிந்த சில விவரப்புள்ளிகளிடம் பேசினோம், ”அதிமுகவில் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையிலான அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் தவெகவின் மேல்மட்டத்தினருடன் தொடர்புக்கு வந்திருக்கின்றனர்.
ஆட்சிக்கு ஆதரவளித்தால் அமைச்சரவையில் பங்கு கிடைக்கும் என்பதாலயே கட்சியை உடைக்கும் அளவுக்கு இருவரும் வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். பின்னணி பேச்சுவார்த்தைகளின்படியே சி.வி.சண்முகம் அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.
அதற்கு பலனாக அமைச்சரவையில் குறைந்தபட்சமாக 5 இடங்களையாவது சி.வி.சண்முகம் கோஷ்டி எதிர்பார்க்கிறது. தவெக முகாமில் அதிமுகவினரின் அமைச்சரவை எதிர்பார்ப்பு குறித்து இரண்டு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் அமைச்சரவை எதிர்பார்க்கும் அத்தனை பேர் மீதும் கடந்த காலத்தில் எக்கச்சக்க புகார்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. அவர்களை அமைச்சரவைக்குள் கொண்டு வந்துவிட்டு இனி தூய ஆட்சி என எப்படி பேச முடியும்? என்று ஒரு குழு முட்டுக்கட்டை போடுகிறது.
அரசியலில் இதெல்லாம் சாதாரணம். இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதன் மூலம், எஞ்சியிருக்கும் அதிமுகவினரையும் அதிமுக வாக்குகளையும் நம் பக்கம் ஈர்த்துவிட முடியும் என இன்னொரு தரப்பும் விஜய்யின் காதில் கிசுகிசுத்திருக்கிறது.
5 அமைச்சரவை கூட பரவாயில்லை, ஆனால் முக்கியமான துறைகளை அல்லவா மனதில் வைத்து கேட்பார்கள் என ஒரு தயக்கமும் தவெக முகாமில் நிலவுகிறது” என்கின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கை சி.வி.சண்முகம் பிரித்து வந்தால் நம்முடைய வேலை எளிதாகிவிடும் என தவெக முகாம் நினைத்தது. ஆனால், அப்படி நடக்காமல் இப்போது எடப்பாடியும் பஞ்சாயத்தைக் கூட்டும் நிலை உண்டாகியிருக்கிறது. ஒருவேளை தவெகவை ஆதரித்த எம்.எல்.ஏக்கள் டிஸ்மிஸ் ஆகும் சூழல் வரும்பட்சத்தில், அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களையும் விசில் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றிப் பெறச் செய்து க்ளியர் மெஜாரிட்டியோடு ஆட்சியை நடத்தலாம் எனும் ஐடியாவும் விஜய்யிடம் சொல்லப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.