சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், நிறுவன மேலாளர் தேவேந்திர படேல் மற்றும் பிற அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சக்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரஃபுல் தாக்கூர், “பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 106 (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்), 289 (இயந்திரங்கள் தொடர்பான அலட்சியச் செயல்) மற்றும் 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ், தப்ரா காவல் நிலையத்தில் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உட்பட எட்டு முதல் பத்து நபர்களின் பெயர்கள் இந்த FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. விசாரணையின் போது வேறு நபர்களும் இதற்குப் பொறுப்பானவர்கள் என்று கண்டறியப்பட்டால், அவர்களின் பெயர்களும் சேர்க்கப்படும்,” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஏப்ரல் 14 அன்று சிங்கிதரை கிராமத்தில் அமைந்துள்ள மின் நிலையத்தில் வெடிவிபத்து நிகழ்ந்தது. கொதிகலனிலிருந்து உயர் அழுத்த நீராவி எடுத்துச் செல்லும் இரும்பு குழாய் ஒன்று வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம். இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினர். இந்தச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்தனர்.
கொதிகலன் உலைக்குள் அளவுக்கு அதிகமான எரிபொருள் குவிந்ததன் காரணமாக அழுத்தம் அதிகரித்து, அதுவே வெடிவிபத்தைத் தூண்டியதாக முதற்கட்டத் தொழில்நுட்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சக்தி மாவட்டத்தில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது, வேதாந்தா நிறுவனமும் அதன் ஒப்பந்ததாரரான NGSL (NTPC GE Power Services Limited), இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பராமரிப்பது மற்றும் இயக்குவது தொடர்பான தரநிலைகளை முறையாகக் கடைப்பிடிக்கத் தவறியது தெரியவந்தது. பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளும், அலட்சியமான செயல்பாடுகளுமே கொதிகலன் அழுத்தத்தில் திடீர் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி, இறுதியில் இந்த விபத்திற்கு வழிவகுத்தன. தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், முதற்கட்டமாக அலட்சியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.