கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்சுணன் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘’கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது போல தெரியவில்லை. கோவையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.-வினர் பட்டி அமைத்து மக்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்துள்ளார்கள். கோவை தெற்கு தொகுதியில் ஒரு வார்டுக்கு மூன்று இடங்கள் என பட்டி அமைத்துள்ளனர். நாங்கள் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எண்ணவில்லை. மக்களை சுதந்திரமாக விட வேண்டும்.
இல்லத்தரசி கூப்பன் என 8 ஆயிரம் ரூபாய் டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். திமுகவினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இவ்வாறு செய்து கொண்டிருந்தால் டெபாசிட் இழப்பார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். பத்து ரூபாய் பாலாஜி என்று மற்றவர்கள் சொல்லலாம். ஆனால் அவர் டோக்கன் பாலாஜி. பல்வேறு பகுதிகளில் பொய் வாக்குறுதிகளையும், டோக்கன்களையும் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றியவர்.

கோவையில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் என்ன?, கரூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தாலும் எனக்கு பயம் இல்லை. கோவை மாவட்ட திமுக சகோதரர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. சுயேட்சை வேட்பாளராக நிற்க வைப்பதற்கு கூட, அவர் உங்களை நம்பவில்லை. அதற்கு கூட கரூரில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலும் மக்கள் அவரை வெற்றி பெற விட மாட்டார்கள். பணநாயகம் என்றும் வென்றதாக சரித்திரம் இல்லை. நான் மதுரையில் இருந்து 17 வயதில் கோவைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி பிறக்க கூட இல்லை. கோவை மக்களை ஏமாற்ற வேண்டும் என செந்தில் பாலாஜி இங்கு வந்துள்ளார். ஆனால், கோவை மக்கள் அதிக அறிவு படைத்தவர்கள், அமைதியானவர்கள். இங்கு அமைதி, வளம், வளர்ச்சியை தான் எதிர்பார்ப்பார்கள். எனவே செந்தில் பாலாஜி தான் ஏமாறுவார். அவரின் டோக்கன் இங்கு விலை போகாது. சட்டவிரோதமாக பட்டி அமைத்தும், டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்றும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.