“மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில் பணத்திற்கு சீட்டை விற்றதே காரணம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா சையத். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது பதிவி பறிப்பும், அடுத்த அரை மணிநேரத்தில் அடிப்படை உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் தலைமை பறித்து அதிரடி காட்டியுள்ளது.
இன்று காலை மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசினா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “மகளிருக்கு 33 சதவீத இடஒதிக்கீடு நாடு தோறும் காங்கிரஸ் கட்சி முழங்கி வருகிறது. ஆனால் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கிவில்லை. இரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. அதில் சிங்காநல்லுாரில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கட்சிக்கு எப்போது வந்தார்?

எனக்கு கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் வாய்ப்பு கொடுக்க சொல்லி, ராகுல் காந்தி சொல்லியபிறகும், செல்வபெருந்தகை சீட் ஒதுக்கவில்லை. கார்கேவிடம் பணம் கொடுத்து இங்குள்ள சீட்களை செல்வபெருந்தகை விற்றிருக்கிறார்” என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதோடு, “மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை துறப்பதாகவும்” அறிவித்தார்.
ஹசினாவின் அறிவிப்பு வெளியான அரைமணிநேரத்தில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கை ஒன்று வெளியானது. அதில், “ கட்சியின் அடிப்படை விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதற்காக, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஹசினா சையத் நீக்கப்படுவதாக” அறிவிப்பு வெளியாகியது.
இது குறித்து சத்திய மூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஹசினா சையது மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் சிதம்பத்தின் ஆதரவும் பலமாக இருந்தது. அதே நேரம் மாநில தலைவர் செல்வ பெருந்தகைக்கும், ஹசினா சையத்திற்கு ஒத்து போகவில்லை. இருவர் இடையே அவ்வப்போது பூசல்கள் இருந்து வந்தது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடும் வேட்பளார்களை தேர்வு செய்ய, தமிழக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஹசினா சையது் உட்பட ஐந்து பெண் வேட்பாளர்களின் பெயரை குறித்து கொடுத்தனர்.

அந்த பட்டியல் டெல்லி மேலிடத்தில் வைத்து ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையில் சிலர் ஹசினாவுக்கு சீட் வழங்கலாம் என்றார்கள். ஆனால், அவருக்கான தொகுதியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மயிலாடுதுறையை அவருக்கு கொடுக்கலாம், என ராகுல் உள்ளிட்ட சிலர் சொன்னது உண்மை.
ஆனால், அந்த மாவட்ட காங்கிரஸ் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் அவர் நிற்பதை விரும்பவில்லை. செல்வபெருந்தகை தரப்பு வேறு ஒரு வலுவான வேட்பாளரை அந்த தொகுதியில் நிறுத்தலாம் என்று கருத்து சொல்லிவிட்டார்கள். இதனால் செல்வபெருந்தகை தனக்கு நம்பிக்கையான வேட்பாளரை பரிந்துரை செய்தார். மாநில தலைவர் தனக்கு ஆதரவான ஒருவரை தான் வேட்பாளராக பரிந்துரைக்க முடியும்.

ராகுல் ஹசினாவை வேட்பாளராக்க நினைத்திருக்காலம். மாநில தலைமை சில முடிவகளை சொன்னாலும், அதில் அகில இந்திய தலைமை அந்த முடிவு சரியாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்ளும். ராகுலின் விருப்பத்தை மீறி தி.மு.க-வுடன் கூட்டணி அமைந்ததும் அப்படிதான். இப்போது ஹசினா விசயத்தில் நடந்ததும் அதுவே. செல்வபெருந்தகையின் செல்வாக்கு பலமாக இருக்கிறது” என்கிறார்கள்.
அதே நேரம் ஹசினாவின் இந்த முடிவுக்கு பின்னால் மேலும் சில காரணங்கள் இருக்கிறதாம். “காங்கிரஸ் கட்சிக்குள் நீண்ட காலம் பயணித்தாலும், சமீப காலமாகவே ஹசினாவின் பார்வை த.வெ.க பக்கமும் இருக்கிறது. சமீபத்தில் த.வெ.க முகாமுக்கு தாவிய காங்கிரஸ் கட்சியினர் ஹசினாவுக்கு அழைப்பு கொடுத்துக்கொண்டே உள்ளார்கள்.
த.வெ.க முக்கிய நிர்வாகி ஒருவரும் ஹசினாவை தனது வீட்டிற்கு அழைத்து சமீபத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பு முடிந்த பிறகே, கட்சியின் தலைவர் மீது பரபப்பு குற்றச்சாட்டை ஹசினா முன்வைத்தார். இதற்கு பின்னால் உள்ள ரகசியம் போக..போக வெளியே வரும்” என்கிறார்கள்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.