`கண்டா வரச் சொல்லுங்க ராகுலை கையோட கூட்டி வாருங்க.!’ ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏற மறுக்கிறாரா ராகுல்?

கொளுத்திப் போட்ட விஜய்!

”கண்டா வரச் சொல்லுங்க..

ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..”

திமுக உடன் பிறப்புகள் மற்றும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் இன்றைய சிக்சுவேஷன் சாங் இதுதான்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. தேசிய ஜனநாயக் கூட்டணியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து மேடை ஏறி முதல்கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்தப்பக்கம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் இன்னும் தமிழ்நாட்டை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பக்கத்திலிருக்கும் கேரளாவில் பிரசாரம் செய்தார். புதுச்சேரிக்கு வந்து போனார். புதுச்சேரியில் ராகுல் இருந்த அதே தினத்தில் மு.க.ஸ்டாலினும் அங்கு பிரசாரத்தில் இருந்தார்.

ஆனாலும் இருவரும் சேர்ந்து பிரசாரம் என்பதை விடுங்கள், சாதாரண சந்திப்புகூட இருவரிடையே நிகழவில்லை.

இந்தச் சூழலில்தான் திருநெல்வேலியில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘உண்மையான காங்கிரஸ் என் பக்கம்தான் நிற்கிறது’ என ஒரு குண்டை வீச, கொதித்துப் போய் அறிக்கை விட்டது தமிழக காங்கிரஸ்.

பப்பு இல்ல அவர் பி.எம் வேட்பாளர்!

‘ராகுல்தான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளர்’ என காங்கிரஸ் கூடச் சொல்லத் தயங்கியபோது, மெஜாரிட்டியான மாநிலங்களைத் தன்வசப்படுத்திய பாஜக ராகுலை ‘பப்பு’ எனக் கேலி செய்து கொண்டிருந்த போது நாட்டிலேயே முதல் ஆளாக அப்படி முன் மொழிந்தவர் மு.க.ஸ்டாலின்.

ஆனால் இன்று ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறக் கூட தயாராக இல்லாதவராக இருக்கிறார் ராகுல்.

கடந்த ஐந்தாண்டு காலம் தமிழகத்தில் கூட்டணி கட்சியாய் இருந்தது மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ‘இந்தியா கூட்டணி’ என ஒரே அணியில் இரு கட்சிகளும் இருக்கிற நிலையில், திடீரென ராகுல் காந்தியின் மன நிலையில் ஏன் இந்த மாற்றம்?

TVK Vijay | விஜய்
TVK Vijay | விஜய்

திமுகவினர் சிலரிடம் பேசியபோது,

”தேசியக் கட்சிகளில் ஒரு பிரச்னை இருக்கு. மாநில அளவில் இருக்கிற நிர்வாகிகள் ஒரு கண்ணோட்டத்துடன் இருந்தா டெல்லி தலைமை அதுக்கு நேரெதிரா இருக்கும். காங்கிரஸ் கட்சியும் இதுக்கு விதிவிலக்கல்ல. திமுக ஆட்சி சரியில்லைனு காங்கிரஸ் நினைச்சா இந்தப் பதவிக்காலம் முடியறதுக்கு முன்னாடியே கூட்டணியை விட்டு வெளியேறி போயிருந்திருக்கலாம். அப்படிப் போகல. அதனால திமுக ஆட்சி குறித்து எந்த விமர்சனமும் இல்லைன்னு தெளிவாயிடுச்சு.

கூட்டணியில சீட் விஷயத்துக்கு வருவோம். காங்கிரஸ் கட்சி தனியே போட்டியிட்டா என்ன ஓட்டு வாங்கும்கிறது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். அதனால ஒவ்வொரு தடவை வெற்றிபெறுகிற எம்.எல்.ஏ.க்களுமே எந்தக் கூட்டணியில காங்கிரஸ் நிக்குதோ அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற கட்சி, அணியிலிருக்கிற மத்த கட்சிகளின் ஓட்டுகளாலும்தான் ஜெயிக்குறாங்க.

மாணிக் தாகூர்

மேலிடத்து ஆசி!

சீட்டுகளின் எண்ணிக்கையில் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். அது பெரிய பிரச்னை இல்லை.

ஆனா இந்த தடவை விஜய் வந்து ஆட்சியில் பங்கு, அதிக சீட்னு வீசிய தூண்டில் சில காங்கிரஸ்காரர்களை யோசிக்க வச்சிருக்கு. அந்த சிலர்தான் மாநில சூழலைப் புரிஞ்சுக்காம டெல்லி தலைமைக்கு வேறு மாதிரியான தகவலைத் தந்திருக்காங்க. அதோட விளைவுதான் அங்கயும் சிலர் ஆசிர்வதிக்க, தவெக கூட சில பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கு. மாணிக்கம் தாகூர் வகையறா ஆட்கள் மேலிட இசைவுக்குப் பிறகே இங்க சகட்டுமேனிக்குப் பேசியிருகாங்க

‘திமுக ஒரு தீய சக்தி’ன்னு பேசிய விஜய் கூட பேச்சுவார்த்தையைத் துவக்கியதுமே காங்கிரஸ் உடனான கூட்டணி முறிஞ்சிருக்கணும். அதன் பிறகும் கூட்டணி நீடிச்சதுக்கு முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவர்களுமே காரணம்.

எப்படியோ இப்ப கூட்டணி அமைஞ்சு தேர்தலும் நெருங்கிடுச்சு. இனியும் குறைகளை மட்டுமே பெருசா நினைச்சுகிட்டிருந்தா அது கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை ஓரளவுக்கும் காங்கிரஸ் கட்சியின் நலனை பெரிய அளவிலும் பாதிக்கலாம். இதைப் புரிஞ்சு ராகுலை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரவேண்டிய பொறுப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குதான் இருக்கு.

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்களை ராகுல் கண்டுக்காம விட்டா போதும், ஸ்டாலின் அங்கு போட்டியிடுகிற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் சேர்த்தே வாக்கு கேட்டதை இந்த இடத்துல சுட்டிக்காட்ட விரும்பறோம்’ என்றார்கள் அவர்கள்.

கருணாநிதி, சோனியா

கலைஞரையே பார்க்காமப் போனவர்!

உண்மையில் விஜய்யின் அரசியல் என்ட்ரியை ராகுலுமே பாசிட்டிவாகத்தான் பார்க்கிறார் என்கிற அரசியல் விமர்சகர்கள், மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்தனர்…

”ஆட்சியில் பங்கு, அதிக சீட் என்பனவற்றைத் தாண்டி விஜய்க்கு கேரளாவிலும் இருக்கும் ஆதரவு அங்கு உதவும் என நினைத்தார் ராகுல். தவிர, ராகுலுக்கு பொதுவாகவே அவருடைய பாட்டி, அப்பா, அம்மா அளவுக்கு திமுகவுடன் இணக்கம் இருந்ததில்லை. முன்பு ஒரு முறை அதாவது 2009ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்த ராகுல் கருணாநிதியைச் சந்திப்பதையே தவிர்த்தார். அப்போது திமுகவினரிடையே ராகுலின் இந்தச் செயல் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

அப்பப்ப இந்த மாதிரி பிரச்னைகள் போயிட்டே இருந்தாலும் இரு தரப்புக்குமே வேறு வழியின்றிக் கூட்டணி தொடர்ந்தது. இப்போதும் அதே நிலைதான். தமிழக காங்கிரஸின் பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணியை விரும்பினர். ஆனால் ராகுலுக்கு பரிபூரண சம்மதம் இல்லை. இதுதான் இப்போது பிரச்னை. இதைக் களைந்து ராகுலும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது இரு தரப்புக்குமே அவசியம். கூட்டணி அமைந்த விதத்தில் இரு கட்சித் தொண்டர்களிடையேயும் மனக் கசப்பு உண்டாகிவிட்டதால் அவர்கள் அவற்றை மறந்து களத்தில் வேலை செய்ய அதுதான் வழி. கலைஞர் காலத்தில் கூட்டணி அமைஞ்சா முதல் வேலையா எல்லா கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் ஏத்தி ஒரு பிரசாரத்தை முடிச்சுட்டுதான் அவரே பிரச்சாரத்துக்கு கிளம்புவார்!

ரெய்டும் பேச்சுவார்த்தையும்!

காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றிய திமுக இன்று அதே காங்கிரஸ் உடன் கூட்டணியில். தமிழக அரசியல் பயணத்தில் இரு தரப்புக்குமே மறக்க முடியாத வடுக்களாக ஏகப்பட்ட சம்பவங்கள் உள்ளன. சமயங்களில் பரஸ்பரம் தர்மசங்கடம் உருவாகும் என்பது தெரியாமலேயே இரு தரப்பும் அவற்றில் சிலவற்றை எடுத்து விட்டு விடுகிறார்கள்.

‘நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்’ என ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். மிசா கொண்டு வந்த காங்கிரஸாரை அருகில் வைத்துக் கொண்டே! முன்பு, இந்திரா காந்தி குறித்து கருணாநிதி செய்த ஒரு விமர்சனம் காங்கிரஸ் தொண்டர்களை கொதிக்க வைத்த வரலாறும் உண்டு. ‘கூடா நட்பு’ என காங்கிரஸைத் தன் கடைசிக் காலத்தில் குறிப்பிட்டார் கருணாநிதி.

இந்தப் பக்கம் காங்கிரசும் சளைத்ததில்லை. திமுக தயவிலேயே ஆட்சி நடத்திக் கொண்டு ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரையும் திகார் ஜெயிலில் அடைத்தது. அறிவாலயத்தில் ஒரு பக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் சிபிஐயை அனுப்பி விசாரித்தது.

Cong
Cong dmk allaince press meet

நல்லதே நடக்கும்!

சரி, தமிழக காங்கிரஸார் என்னதான் சொல்கிறார்கள். ராகுலும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதா?

விசாரித்த போது, ‘இன்னும் கால அவகாசம் இருக்கு. கூட்டணித் தலைவர்கள் எல்லாருமே சேர்ந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வாங்க. கூட்டணி விஷயத்தில் எப்படி சிக்கல்கள் களையப்பட்டதோ அதேபோல இந்த விஷயத்துலயும் நல்லதே நடக்கும்னு நம்புறோம்’ என்கிறார்கள்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Will Udhayanidhi Stalin win? | Who will win? | Ground Report | I#57 | Thuraimugam, Chepauk, Mylapore

How did Iran use its stronger ‘weapon’ in the war instead of its nuclear power?