தமிழ் திரைத்துறைக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. திரைத்துறையில் இருந்து வந்த பலர், அரசியலிலும் ஜொலித்துள்ளனர். அந்த வரிசையில் சமீபத்திய வரவான நடிகர் விஜயின் வருகை, முன்னணி அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என அரசியல் செய்யும் விஜய், எதிர்வரும் தேர்தலில் கணிசமான திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கரூர் விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கூட்டணியில் இணைக்க அதிமுகவினர் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. இதனால் விஜய் பிரிக்கும் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறி, திமுகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இதனால் முள்ளை முள்ளால் எடுப்பது போல, நடிகர் விஜய்யால் ஏற்படும் பாதிப்பை நடிகர்களை கொண்டே சரி செய்ய திட்டமிட்டுள்ள அதிமுக, அவருக்கு எதிராக உள்ள நடிகர்கள் அஜித்குமார், ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவை திரட்ட முயன்று வருகிறது. இதன்படி நடிகர் ரஜினிகாந்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, அஜித்குமார் உடன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் போட்டோக்களை பரப்புரையில் காட்டுவது போன்றவற்றை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுகவினர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ரசிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர். அதிலும் எஸ்.பி.வேலுமணி அஜித்குமார் ரசிகர்களைப் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம், ‘’அஜித்குமார் ஜெயலலிதா மீது பெரும் மரியாதை கொண்டவர். அடிக்கடி அவரைச் சந்திப்பார். ஜெயலலிதா மறைந்தபோதுகூட வெளிநாட்டில் இருந்து வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். அஜித் மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நீங்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும்” எனப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரை செய்த போது, அஜித் ரசிகர்கள் நற்பணி இயக்கக் கொடியுடன் வந்த அஜித்குமார் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அஜித்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தருவது போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருக்கும் போட்டோவையை பரிசாக அளித்தனர். இதனால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.