ரூ.5 கோடி ஜீவனாம்சம்; 80 வழக்குகள்; மனைவியின் 10 ஆண்டு போராட்டம் – பிரிவு 142-ஐ பயன்படுத்திய கோர்ட்!

பத்து ஆண்டுகளாக நீடித்த ஒரு திருமணப் பிரச்னைக்கு, ‘மகாபாரதப் போர்’ என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பிரிந்து வாழ்ந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, கணவர் தன்னுடைய மனைவிக்கு ஒரே தவணையாக ரூ.5 கோடியை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இருவர் மீதும் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது.

ஒரு தசாப்த காலமாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, கண்ணீருடன் நீதி கேட்டுப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையில், இந்தத் தீர்ப்பு ஒரு புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளது. நடைமுறையில் இந்தத் திருமணம் முற்றிலுமாக இறந்துவிட்டது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தப் பத்தாண்டு காலப் போராட்டத்திற்கு ஓர் அமைதியான முடிவை வழங்குவதே முழுமையான நீதியாக இருக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

இந்தத் தம்பதிக்கு 2010-ல் திருமணமாகி, அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. காலப்போக்கில் இவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட, 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை, நீதிமன்றமே கதியென சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

AI

கணவர், தனக்கும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் எந்தவிதமான நிதி உதவியும் செய்யாமல் தட்டிக் கழிப்பதாக மனைவி குற்றம்சாட்டினார். மனைவி, தன்னுடைய மாமனாருக்குச் சொந்தமான மும்பை லோகந்த்வாலாவில் உள்ள 3 படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், அதைக் காலி செய்யுமாறு கணவர் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், கணவர் தன் மனைவி மற்றும் உறவினர்கள்மீது மட்டுமல்லாமல், அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி தரப்பு வாதம்

மனைவியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், “கணவர் வழக்கறிஞர் என்பதால், தனது சட்ட அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனைவி, அவர் குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

குடும்ப நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் விதித்த ஜீவனாம்ச உத்தரவுகளை அவர் பலமுறை மீறியுள்ளார்” என்று வாதிட்டார்.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, “கணவர் பல நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், தனது நிதிப் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் ஒரே நோக்கத்துடன், அந்தப் பதவிகளை வசதியாக ராஜினாமா செய்துள்ளார்” என்பதைத் தங்கள் உத்தரவில் சுட்டிக் காட்டினர்.

AI

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மனைவி கொல்கத்தாவில் வேலை செய்து வந்த நிலையில், தற்போது தன்னுடைய மூத்த மகன் பத்தாம் வகுப்பிற்குச் செல்லவிருப்பதால், அவனது படிப்பில் முழு கவனம் செலுத்த மும்பைக்கே திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

இதற்குத் தந்தையிடமிருந்து போதுமான நிதி ஆதரவு தேவைப்படுகிறது என்றும் மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கணவரின் தரப்பு வாதம்

இந்த வழக்கில் தானே நேரில் ஆஜரான கணவர், தன்னுடைய மனைவி தன் மீது குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ததாகவும், அதன் காரணமாகத் தான் சில நாள்கள் காவலில் இருக்க நேரிட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த அனுபவம் தனக்குக் கடுமையான மன உளைச்சலையும், தொழில்முறை நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

மேலும், “என் மனைவி திட்டமிட்டு என் குழந்தைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார். அவர் நல்ல தகுதியும், கணிசமான வருமானமும் கொண்ட ஒரு தொழில்முறை நிபுணர். ஆனாலும், அதிகப்படியான ஜீவனாம்சத்தைக் கோருவதற்காகத் தன்னை ஆதரவற்றவராகக் காட்டிக் கொள்கிறார்.

நான் ஏற்கெனவே என் மனைவிக்கு ரூ.45 லட்சத்திற்கும் மேல் கொடுத்துள்ளேன். அவர் தொடர்ந்த பொய் வழக்குகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால்தான் அதிக ஜீவனாம்சம் கொடுக்க முடியவில்லை” என்றும் அவர் வாதிட்டார்.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

கணவரின் வாதங்களைக் கடுமையாகச் சாடிய நீதிமன்றம், “கணவர் எண்ணற்ற மனுக்கள் மற்றும் புகார்களைத் தாக்கல் செய்து, இந்த வழக்கை வேண்டுமென்றே பெருக்கவும், சிக்கலாக்கவும் முயன்றுள்ளார். இவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கம் கொண்டவையாகவும், தேவையற்ற தொந்தரவு கொடுப்பவையாகவும் உள்ளன.

இது கணவரின் விரோதமான மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. இவருடன் மனைவி தனது திருமண உறவைத் தொடர்வது ஏன் மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது” என்று கூறியது.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

மனைவி உயர் கல்வி கற்றவராகவும், தொழில் தகுதி பெற்றவராகவும் இருப்பது மட்டுமே, கணவரை அவரது திருமண, தந்தைவழி, தார்மீக மற்றும் சட்டப் பொறுப்புகளில் இருந்து விடுவித்துவிடாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. கணவரின் நிதி நெருக்கடி குறித்த வாதங்கள், தனது சட்ட மற்றும் தார்மீகக் கடமைகளில் இருந்து தப்பிக்க ஒரு சாக்குப்போக்கு என்பதை மனைவி தரப்பு வாதம் நிரூபிப்பதாகவும் நீதிமன்றம் கருதியது.

இறுதியாக, இந்தத் திருமணம் கலைக்கப்படுகிறது என்றும், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அல்லது உறவினர்கள் மீது தாக்கல் செய்துள்ள அனைத்து சிவில், கிரிமினல் மற்றும் இதர வழக்குகள், முதல் தகவல் அறிக்கைகள், புகார்கள் என அனைத்தும் முடித்து வைக்கப்படுகின்றன என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் முக்கிய அம்சம்

ரூ.5 கோடி ஜீவனாம்சம்: கணவர், ஒரு வருடத்திற்குள் மனைவிக்கு ஒரே தவணையாக ரூ.5 கோடியை வழங்க வேண்டும்.

வீட்டைக் காலி செய்தல்: ரூ.5 கோடியைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குள், மாமனாருக்குச் சொந்தமான பிளாட்டை அமைதியான முறையில் காலி செய்து ஒப்படைப்பதாக மனைவி உறுதியளிக்க வேண்டும்.

குழந்தைகள் யாரிடம்?: இரண்டு மகன்களின் காவலும் தாயிடம் இருக்கும். ஆனால், குழந்தைகளைப் பார்க்கத் தந்தைக்கு உரிமை உண்டு.

வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி: இனிமேல் மனைவி, அவரது உறவினர்கள் அல்லது வழக்கறிஞர்கள் மீது எந்தவொரு சிவில் அல்லது கிரிமினல் வழக்கையும் தொடர மாட்டேன் என்று கணவரும் உறுதியளிக்க வேண்டும்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Puducherry: Rangasamy arrives on a two-wheeler to vote; Robo welcomes him – people enthusiastically cast their votes!

‘I refused the Rajya Sabha MP seat given by the Chief Minister…’ – Shocking Thirumavalavan