இரு முறை அமைச்சர்; ஒரு முறை தோல்வி – ஜோலார்பேட்டையில் மீண்டும் ஜொலிப்பாரா கே.சி.வீரமணி?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் வலம் வரும் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் நான்காவது முறையாகக் களமிறங்குகிறார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று அமைச்சராக அதிகாரத்திலேயே தொடர்ந்த வீரமணி, 2021 தேர்தலின்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜிடம் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும், சோர்வடையாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லது, கெட்டது என தொகுதி மக்களிடம் நெருக்கம் காட்டி வந்தார் வீரமணி.

இதனால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அவருக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. தி.மு.க-வில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத பட்சத்தில், தொகுதிக்குள் முதல் சுற்று பிரசாரத்தை முடித்துவிட்டு, இரண்டாம் சுற்று பிரசாரத்துக்கே தயாராகிவிட்டார் வீரமணி. இதனால், ஜோலார்பேட்டையில் வீரமணி மீண்டும் ஜொலிப்பதற்கான சூழலே பிரதிபலிக்கிறது.

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணியின் பின்னணி!

வீரமணியின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணியுடையது. அப்பா, பெரியப்பா இருவரும் பெரியாரின் தீவிரப் பற்றாளர்கள். தமிழகத்துக்கு வந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவருடன் வீரமணியின் தங்கை தன்மானம் என்கிற சுதாவுக்கு காதல் மலர்ந்தது. காதலனைக் கரம்பிடித்து லண்டனுக்குப் பறந்துவிட்டார் தன்மானம். வீரமணியின் பெரியப்பா தங்கவேலின் மகன்வழிப் பேரன்தான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலை ஆன பேரறிவாளன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியதால் அ.தி.மு.க-வின் விசுவாசிகளாக மாறினர் வீரமணி குடும்பத்தார். 1994-ல் அ.தி.மு.க-வில் இணைந்த வீரமணிக்கு ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. அதன்பின் ஏற்றம்தான். 2001-ல் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் ஆனார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது. தோல்விக்குக் காரணமான நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக வீரமணியை நியமித்தார். அன்று முதல் இன்று வரை மாவட்டச் செயலாளராக தொடர்கிறார் வீரமணி.

கே.சி.வீரமணி

மாவட்டச் செயலாளர் போன்ற இன்னுமொரு எதிர்பாராத வாய்ப்புதான் அவரை அமைச்சர் ஆக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வேலூர் எம்.எல்.ஏ விஜய்மீது புகார்கள் குவியவே, அமைச்சர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. மேல்மட்ட சிபாரிசால், வீரமணிக்கு அந்த வாய்ப்பு வந்தது. சில மாதங்களில் சுகாதாரத் துறைக்குப் பதிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2021 தேர்தல் அவருக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், 2026 தேர்தலில் மிகத் தெம்பாக களம் காண்கிறார் கே.சி.வீரமணி.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Breaking news: Vijay has finalized 234 candidates; candidate list to be released tomorrow?

Namakkal: ‘Separate Anganwadi centers for Scheduled and other social children!’ – Annamalai condemns