ஒரத்தநாடு: `என்னை காலி செஞ்சிட்டீங்களா?’ `வைத்தி’யை பதறவைத்த 2016 – அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ

2016 தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கையில் வைத்திலிங்கம் பின் தங்கியதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் அடுத்தடுத்து பல சுற்றுகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து வைத்திலிங்கம் பின்னடைவில் இருக்கிறார் என்ற செய்தி அரசியல் வட்டத்தில் பரபரப்பை கிளப்பியது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து உற்று கவனிக்க கூடிய தொகுதியாக மாறியது ஒரத்தநாடு.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

எல்லோரும் சேர்ந்து என்னை காலி செஞ்சிட்டீங்களா?

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளரான காந்தி இருந்தார். அவர் இப்போது அதிமுக-வில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏழு சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் வைத்திலிங்கம் காந்திக்கு போன் செய்து விவரம் கேட்கிறார். நம்ம ஏரியா பெட்டி திறக்கட்டும் நாம் முன்னணியில் வந்து விடுவோம் என்று ஆசுவாசப்படுத்துகிறார்.

இன்னும் சில சுற்றுகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து வைத்திலிங்கம் பின்னடைவையே சந்திக்கிறார். திரும்பவும் காந்திக்கு போன் செய்கிறார், அப்போதும் வைத்திலிங்கத்தை சமாளித்த காந்தியிடம் எல்லோரும் சேர்ந்து என்னை காலி செஞ்சிட்டீங்களானு கேட்டு காச்மூச்சுனு கத்தி விட்டு போனை துண்டித்தவர் அதன் பின்னர் போன் செய்யவில்லை.

நான் ஜெயிச்சது பெருசா தெரியலை..!

வாக்கு எண்ணிக்கையின் அனைத்து சுற்றுகளும் முடிய சுமார் 3,600 வாக்கு விதியாசத்தில் வைத்திலிங்கம் தோல்வியை தழுவினார். திமுக-வைச் சேர்ந்த எளிமையானவரான புல்லட் ராமச்சந்திரன் என அழைக்கப்படும் எம்.இராமச்சந்திரன், அதிமுக-வில் பவர் சென்டரான வைத்திலிங்கத்தை வீழ்த்தியதை மொத்த தமிழ்நாடும் விவாதித்தது.

யார் இந்த இராமச்சந்திரன் என்ற தேடலில் கவனமும் பெற்றார். வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் இராமச்சந்திரனிடம் தருகிறார். அப்போது, சரியாக அந்த சமயத்தில் போன் செய்கிறார் ஸ்டாலின். `வாழ்த்துகள் அண்ணே’னு ஸ்டாலின் உற்சாக குரலில் சொல்ல சுரத்தில்லாமல் பேசிய இராமச்சந்திரன், `ஒரத்தநாட்ட புடிச்சிட்டோம், தமிழ்நாடு முதலமைச்சராக நீங்க வரலேயே தம்பி, அதனால எனக்கு நான் ஜெயிச்சது பெருசா தெரியலை’னு தழுதழுத்தவரை `விடுங்கண்ணே அடுத்து நாம் தா’னு தேற்றினார். வெற்றிக்கான சான்றிதழ் வாங்குறப்ப கூட திமுக ஆட்சி அமையவில்லை என்கிற கவலையை வெளிப்படுத்துகிறாரேனு அங்கிருந்தவர்கள் பூரித்தனர்.

விருப்பமனு தாக்கல் செய்த வைத்திலிங்கம்

ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர், அவரது அமைச்சரவையில் அதிகாரமிக்கவராக நால்வர் அணியில் ஒருவராக வலம் வந்த வைத்திலிங்கம், `ஒரத்தநாட்டிற்கு ஏகப்பட்ட திட்டங்களை செய்திருக்கிறோம், மக்கள் நம்மை கைவிடமாட்டார்கள்’ என்கிற நம்பிக்கையில் தனக்கு பொறுப்பான தொகுதிகளை கவனித்தார். ஒரத்தநாட்டில் போதுமான கவனம் செலுத்தவில்லை.

அத்துடன் அவரை சுற்றியிருந்த சிலரது நடவடிக்கையே தோல்விக்கு காரணம்னு அப்போது பரவலாக பேசப்பட்டது. கொஞ்சமும் எதிர்பார்க்காத வைத்திலிங்கத்தை தோல்வி கடும் அப்செட்டில் ஆழ்த்தியது. இதை அறிந்த ஜெயலலிதா உடனே வைத்திலிங்கத்தை அழைத்து ராஜ்யசபா எம்.பியாக்கி `நான் இருக்கிறேன் உங்களை கைவிட மாட்டேனு’ சொன்ன வார்த்தைகளில் அவர் மீண்டார்.

ஜெயலலிதாவால் கொண்டாடப்பட்டவர் – ஸ்டாலினால் பாராட்டப்பட்டவர்!

2021 தேர்தல் மீண்டும் களத்தில் வைத்திலிங்கம், எம்.இராமச்சந்திரன் மோதுகின்றனர். இந்த முறை சுதாரித்து கொண்ட வைத்தி வைட்டமின்களை இறைக்க இராமச்சந்திரன் வீழ்த்தப்படுகிறார். ஜெயலலிதாவால் கொண்டாடப்பட்டவர் வைத்திலிங்கம். ஸ்டாலினால் பாராட்டப்பட்டவர் எம்.இராச்சந்திரன்.

எதிர் எதிரே நின்று நேருக்கு நேர் மோதிய இருவரும் இப்போது திமுக-வில் ஒன்றாக வலம் வருகின்றனர். திமுக கூட்டங்களில் வைத்திலிங்கத்தை மாப்பிள்ளை என்கிறார் இராமச்சந்திரன். மாமானு உறவு முறையை சொல்லி வாஞ்சையோடு இராமச்சந்திரனை அழைக்கிறார் வைத்திலிங்கம். 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரத்தநாடு சீட்டுக்கான ரேஸில் வைத்திலிங்கம், எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமினு பலர் உள்ளனர்.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் போட்டியிடுவது உறுதியாகி விட்டது, அவர் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார் என்கிறார்கள். வைத்திலிங்கம் திமுக-விற்குள் ஐக்கியமானது கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை தந்துள்ளது. இந்த முறை தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்னு வேட்பாளர் கனவுடன் ரேஸில் இருந்தவர்கள் தொகுதி கிடைக்காது என தெரிந்து விரக்தியில் மனப்புழுக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.

இது குறித்து மாவட்ட அரசியலில் உள்விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், “திமுக-வில் இணைந்த பிறகு தொகுதிக்குள் சுறு சுறுப்பாக வலம் வருகிறார் வைத்திலிங்கம். திமுக, அதிமுக எதில் இருந்தாலும் ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் கோட்டை, அவர் தான் சோழமண்டல தளபதி என்கிறார்கள் அவரை எப்போதும் பின் தொடரும் ஆதரவாளர்கள்.

ஊராட்சி வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு மரியாதை செய்கிறார், பேசுகிறார் வைத்திலிங்கம். புதிதாக அரசியலுக்கு வந்தவரை போல் புத்துணர்ச்சியோடு இருக்கிறார். ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்திருக்கிறார்.

இதே போல் எல்.ஜி.அண்ணா, அஞ்சுகம் பூபதி, மகேஸ் கிருஷ்ணசாமி, கலைமணி இளையபாரதி, ஒன்றிய செயலாளர்கள் என சுமார் 50 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். வைத்திலிங்கம் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். ஆனாலும் தலைமை அறிவிக்கட்டும் அதுவரை நமக்கு தான் வாய்ப்பு என்கிற நிலையில் ரேஸில் முதல் நிலையில் இருப்பவர்கள் கருதுகின்றனர்.

நிர்வாகிகளை சந்தித்து பேசும் வைத்திலிங்கம்

மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு உடனே சீட்?

நமக்கு தான் சீட்டு என்ற நம்பிக்கையோடு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பல நிர்வாகிகள் வேலை செய்து வந்தனர். இதில் தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம் என்கிற நிலைப்பாட்டில் பலர் உள்ளனர். விசுவாசத்துடன் திமுகவில் பயணித்து கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை விட, மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு உடனே சீட் கொடுப்பதால் எங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்று ஒரு சிலர் தங்களது மனபுழுக்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். சீட் இவருக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி இதுவரை மரியாதை நிமித்தமாக கூட வைத்திலிங்கத்தை சந்திக்கவில்லையாம்.

மற்ற ஒன்றியச் செயலாளர்கள் சந்தித்து விட்ட நிலையில் இவர் சந்திக்காதது பேசு பொருளாகவும் இருக்கிறது. பலரும் மகேஷிடம் இதை கேட்க, `தலைமை அவருக்கு சீட் அறிவிக்கட்டும் நேரில் பார்த்து துண்டு போடுகிறேன், அதற்குள் என்ன அவரசம்’னு தன் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.

இது போன்ற அதிருப்திகள் தேர்தலில் வைத்திலிங்கத்தை எள்ளவும் பாதிக்காது. அவரும் கவனமாக ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 2016 தேர்தலை தவிர நான்கு முறை வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ள வைத்திலிங்கம், 2026ல் அமோக வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுத்து களத்தில் பம்பரமாக சுழல்கிறார் என்றனர்.

வைத்திக்கு வாய்ப்பை வழங்குவாரா ஸ்டாலின்? உள்ளூர் உள்ளடிகளை தாண்டி அதில் வெல்வாரா என்பது விரைவில் தெரியவரும்.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Iran Issue: ‘The Prime Minister does not want to share his friends’ – Congress criticizes!

A turban befitting a Jat… a servant befitting a Mod! – Udhayanidhi Stalin ‘attacks’ Edappadi Palaniswami