திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை – பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று ‘அன்புச் சகோதரி’ என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக ‘கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?’ என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

பிரேமலதா - ஸ்டாலின்
பிரேமலதா – ஸ்டாலின்

’10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு’ என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். ‘எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார்.

2019 இல் எடப்பாடியோடு கூட்டணி போனோம். 2021 இல் எங்களை கூட்டணியில் வைத்திருந்தால் இன்றைக்கு எடப்பாடி சி.எம். ஆனால், அவருக்கு எங்களை விட பாமக-தான் பெரிதாகத் தெரிந்தது. பாமக-வுக்கு அதிக தொகுதிகளைக் கொடுத்துவிட்டு எங்களைக் கழட்டிவிட்டார். 2024 இல் யாருமே எடப்பாடியோடு கூட்டணியில் இல்லை. நாங்கள் மட்டும்தான் அவரை நம்பிச் சென்றோம். அவர்கள் நினைத்திருந்தால் விஜய பிரபாகரனை வெல்ல வைத்திருக்க முடியும்.

திமுக - தேமுதிக
திமுக – தேமுதிக

அதேமாதிரி, வாக்கு கொடுத்த மாதிரியே ராஜ்ய சபா சீட்டையும் கொடுத்திருக்க முடியும். எதையுமே எடப்பாடி செய்யவில்லை. தேமுதிக ஆரம்பித்த காலத்திலிருந்து எங்களுக்கும் பாமக-வுக்கும் ஆகாது. கடினமான நேரத்தில் யாருமே இல்லாதபோது நம்பி உடன் நின்ற எங்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? பாமக-வுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? எடப்பாடி முதலில் அன்புமணியை அழைத்துதானே பேசுகிறார். கூட்டணியில் சேர்க்கிறார்? அப்படியெனில் அவரை துரோகியாகத்தானே பார்க்க முடியும்? பாஜக இன்னொரு துரோகி.

2014 இல் மோடியை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே கேப்டன்தான். ஒவ்வொரு தொகுதியிலும் 6-7 பாய்ன்ட்டுகளில் நின்று ‘மோடி… மோடி’ எனப் பேசி கேப்டன் அவரை தமிழக மக்களிடையே பிரபலப்படுத்தினார். பிரசாரத்துக்கு நாங்கள் 30-40 வண்டிகளை இறக்கினால் பாஜக-வினர் இரண்டே வண்டிகளில் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் உழைத்தோம். அந்த நன்றியெல்லாம் இருந்திருந்தால் எங்களுக்கு எவ்வளவோ செய்திருப்பார்கள். இப்போது வரை எதையும் செய்யவில்லையே?’ என்கிறார் அந்த நிர்வாகி.

திமுக - தேமுதிக
திமுக – தேமுதிக

‘தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். வன்னியர் பெல்ட்டை சேர்ந்த சில நிர்வாகிகள் மட்டுமே என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். விஜய்யுடன் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பெரிதாக யாருக்குமே இல்லை. அது ஒரு மக்கள் நலக்கூட்டணி 2.0 ஆக அமைந்துவிடும் என்றே கூறினோம். எங்களின் கருத்தையெல்லாம் சரியாகப் பரீசிலித்துதான் அண்ணியார் முடிவெடுத்திருக்கிறார்’ என்கிறார் டெல்டா மாவட்ட நிர்வாகி ஒருவர்.

‘தேமுதிக-வின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் கால்வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த முறையும் சட்டமன்றத்துக்குள் செல்லவில்லையெனில் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதனால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய திமுக-விடம் செல்ல வேண்டும் என எங்களின் கருத்தை முன்வைத்தோம். திமுக-வில் 12 சீட் + 1 மாநிலங்களை எம்.பி என கௌரவமான இடத்தை அண்ணியார் எதிர்பார்க்கிறார். அண்ணியார் முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்தால் எதிர்பார்ப்பிற்கு மோசமில்லாமல்தான் திமுக-வின் ஆஃபர் இருக்குமென என நம்புகிறோம்’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மா.செ ஒருவர்.

திமுக - தேமுதிக
திமுக – தேமுதிக

விஜயகாந்தை முந்தைய காலங்களில் திமுக கடுமையாக விமர்சித்திருக்கிறதே என்றால், ‘அதே திமுக-வின் முதல்வர் ஸ்டாலின் தான் கேப்டனின் மறைவின்போது அரசு மரியாதை கொடுத்தார். கேப்டனின் குரு பூஜைக்கு துணை முதல்வர் நேரில் வந்து மரியாதை செய்தார். அதனால் கூட்டணியின் பிணைப்பில் ஒன்றும் பிரச்னை இருக்காது’ என்கின்றனர் உறுதியாக.

கேப்டன் தொண்டர்கள் குஷிதான் போல!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Ongoing protests amid election tension: ‘Is it conspiracy or right?’ – Tamil Nadu’s battlefield heats up!

Permanent jobs for nurses who worked during the Covid period – consultation tomorrow!