அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06

‘மூன்று படி அரிசி லட்சியம்… ஒரு படி அரிசி நிச்சயம்…’

நீங்கள் 1960-களில் இளைஞராக இருந்திருப்பீர்கள் என்றால், இந்த கோஷத்தை மறந்திருக்க முடியாது. பெரும் பணக்காரர்களாக இல்லாத அனைத்து தரப்பு மக்களுக்கும் அரிசி சோறு ‘லக்சுரி’யாக இருந்த காலக்கட்டம் அது. சோளச் சோறும், சோளத் தோசையும் தான் ஏழைகளுக்கு விதிக்கப்பட்டது. அதுவும் கிடைக்காதவர்கள் கப்பைக்கிழங்கு, கப்பை மாவு என்று தஞ்சமடைய வைத்திருந்தது பஞ்சம். அரிசி அறுவடை செய்யும் விவசாயி கூட அரிசி சோற்றை ருசித்துவிட முடியாத காலம்.

2-ம் உலகப் போரின்போது ஏற்பட்ட உணவுப் பஞ்சம், குறிப்பாக ‘பெங்கால் ஃபேமைன்’ என்று கூறப்படும் வங்காளப் பஞ்சத்துக்கு ஒரு முக்கிய காரணம், வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் படிப்படியாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதில் தமிழ்நாடு ஒன்றும் விதிவிலக்கல்ல.

தமிழகத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, வயிற்றுப் பசியும் மக்கள் மத்தியில் போராட்டங்களாக ஆங்காங்கே வெடித்துச் சிதறியது.

வறட்சி

இதையொட்டி, 1967 தேர்தலுக்கு முன்னால் திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானது தான், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்பது. கூடவே, ‘கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’, ‘பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’ என்ற திமுகவின் அடுக்குமொழி வசனங்கள் மக்களை வெகுவாக ஈர்த்திருந்தது.

இந்த மக்கள் பிரச்னைப் போராட்டம் முழக்கம், இந்தி எதிர்ப்பு முழக்கத்தோடு இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல் காங்கிரஸ் ஆட்சியை துல்லியமாகக் குறி பார்த்து பக்குவமாகப் பதம் பார்த்து வீட்டுக்கு அனுப்பியது.

1967-ல் திமுக ஆட்சி அமைந்தபோது அண்ணாவின் முன்னால் இருந்த மிகப் பெரிய சவால், அரிசிப் பஞ்சத்தைப் போக்குவது. அதற்கான திட்டங்களை வகுப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்த போதே அண்ணாவை பிடித்திருந்த நோய் அவர் உடல் மீது அதிதீவிரம் காட்ட அவர் மறைந்தார். அதன் பின்னர் 1969-ல் கருணாநிதி முதல்வரான போது, திமுக அரசின் மீது, ‘மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி அரிசி நிச்சயம்…’ விமர்சனக் கணைகளாகத் திரும்பியிருந்தன.

அப்போதுதான் கருணாநிதி, மாநில அரசே நேரடியாக அரிசி கொள்முதல் செய்ய வழிவகுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதற்கேற்ப மாநில அரசு நெல் கொள்முதல் திட்டம் மாற்றி அமைக்கபட்டு அரிசி அதிக அளவில் வாங்கப்பட்டது. அந்த கையிருப்பைக் கொண்டு முதல் கட்டமாக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் ரேஷன் கடை எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படுகிறது. 1970-களில் குறைந்த விலையில் அரிசி மக்களுக்கு மாவட்டம்தோறும் கொடுக்கப்பட, தமிழ்நாடு உணவுத் தன்னிறைவு பெற்றது. பின்னாளில் குஜராத் மாநில அரிசிப் பஞ்சத்துக்கு உதவும் வகையில் தமிழகம் முன்னேறியதாக முரசொலியில் தலைப்புச் செய்திகளும், தலையங்களும் வந்ததும் நினைவில் இல்லாவிடில் திமுக வரலாற்றுப் புத்தகங்களை ரெஃபர் செய்யலாம்.

ரேஷன் கடை

எம்ஜிஆர் முன்னெடுத்த போராட்டங்கள்

மக்கள் பிரச்னைகள்தான் போராட்டக் களத்தில் முக்கிய ஆயுதம் என்று நாம் தலைப்பிலேயே சுட்டியுள்ளோம். அதை நிறுவும் வகையில் பஞ்சத்தை வெல்ல திமுக முன்னெடுத்த போராட்டங்கள் அமைந்தன. அந்த வகையில், மக்கள் பிரச்னைக்கான எம்ஜிஆரின் சில போராட்டங்களையும் சுட்டிக் காட்டவது அவசியம்.

எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோதே மக்களுக்காகப் போராடியுள்ளார். இந்தி எதிர்ப்புக்காக அப்போதைய பிரதமர் நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட திமுக முயற்சித்தபோது, கருப்புக் கொடி தயாரிப்புக்கு தனது சினிமா பின்னணியை பயன்படுத்தியதற்காக கைதானார்.

பின்னர், இந்தி திணிப்பை எதிர்த்து, குறிப்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தனது பத்மஸ்ரீ விருதைத் திரும்ப அளித்து எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர்
சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர்

அதனைத் தொடர்ந்து 1953-ல் டால்மியாபுரம் என்ற பெயரை மாற்ற வலியுறுத்தி திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரிலான போராட்டம், தமிழக அரசியலின் திருப்புமுனை எனலாம். அந்தப் போராட்டத்தின் வாயிலாக, அதிமுக என்ற கட்சியைத் தோற்றுவிக்க அடித்தளமிட்டார்.

1980-களில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அங்குள்ள சூழலைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1982-ல் எம்ஜிஆர் சட்டப்பேரவையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது, தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்த காலக்கட்டம். அத்திட்டத்துக்காக அரசுக்கு கூடுதல் அரிசி தேவைப்பட்டது. எனவே மத்திய தொகுப்பில் இருந்து இந்திரா காந்தி கூடுதல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காத சூழலில், எம்ஜிஆர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.

சட்டப்பேரவையில் போராட்டத்தை அறிவித்த அவர், அடுத்த நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் போராட்டத்தை நடத்தினார். இந்தத் தகவல், இந்திரா காந்திக்குப் பறந்தது. அவர் எம்ஜிஆர் கோரிக்கையால் ஆவேசமடைந்தார். இருப்பினும், அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிமுகவுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் கோரிக்கைகளை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கவே, இந்திரா காந்தி ஒப்புக்கொள்ள ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்.

எம்ஜிஆரை எதிர்த்து நடந்த போராட்டங்கள்:

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து, கிராமங்களில் ‘கர்ணம்’ (கணக்குப்பிள்ளை) மற்றும் ‘மணியம்’ (கிராமத் தலைவர்) ஆகிய பதவிகள் குறிப்பிட்ட உயர் சமூகத்தினரால் பரம்பரையாக வகிக்கப்பட்டு வந்தன. இந்தப் பரம்பரை பதவிகளை ஒழித்து, அனைத்து சாதியினரும் பங்குபெறும் வகையில் போட்டித் தேர்வுகள் மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்ற புதிய பணியிடங்களை உருவாக்கியது.

ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எம்ஜிஆர் அரசு பிடிவாதமாக இருந்து விஏஓ பணியிடத்தைக் கொண்டுவந்தது. எம்ஜிஆரை எதிர்த்து திமுக முன்னெடுத்த முக்கியப் போராட்டங்களில் ஒன்று இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.

1979-ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை முன்வைத்தார்.

தொடர்ந்து இதற்கான அரசாணையும் ஆதே ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.9000 மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பை முன்வைத்தது. அதற்கு சற்றும் அசையாத எம்ஜிஆர், “இது திமுக ஆட்சிக் காலத்தில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளின் படியே செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இடஒதுக்கீடு

“ஒவ்வொரு சாதியிலும் உள்ள முன்னேறிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினருடன் போட்டியிடாதவகையில் செய்யப்படாவிட்டால், சமூக நீதி என்பதை அடைய முடியாது” என சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டதாக அதிமுக அரசு கூறியது. கூடவே, கேரள அரசின் ஆணை ஒன்றையும் சுட்டிக்காட்டியது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற கேரள அரசு 10,000 ரூபாயை வருவாய் வரம்பாக நிர்ணயித்திருந்ததை எம்ஜிஆர் சுட்டிக்காட்டினார் .

ஆனால், இதற்கு எதிரான திமுக போராட்டம், மக்கள் போராட்டமானது. கடும் மக்கள் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஆணையை ரத்து செய்தார் எம்ஜிஆர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி தனது அரசியலுக்கு ஸ்கோர் சேர்த்தார். தற்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் போராட்ட வியூகம்

எம்ஜிஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவருக்கு மிகப்பெரிய போராட்டமாகத்தான் இருந்தது. அதன் பின்னர் தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர் அவமதிக்கப்பட்ட விதம் இன்றளவும் பேசுபொருள். அப்போது ‘இனி ஒரு முதல்வராகவே அவைக்குள் நுழைவேன்’ என்று சூளுரைத்து, கடும் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் 1991-ல் முதல்வராக நுழைந்தார்.

முதலாவது ஆட்சிக் காலத்தில், எம்ஜிஆர் பாணியிலேயே ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு டெல்லி வரை அதிர்வலைகளைக் கடத்தினார் ஜெயலலிதா. 1993-ம் ஆண்டு ஜூலை 18 எம்ஜிஆர் சமாதிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, திடீரென உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். உச்சி வெயிலில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியவர் மார்ச் 23-ம் தேதிதான் அதை முடித்தார்.

ஜெயலலிதா உண்ணாவிரதம்

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மத்திய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உண்ணாவிரதம் இருந்தார். அந்த 4 நாட்கள் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டங்களில் இறங்கினர். அப்போது மத்தியில் இருந்த பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நீர்வளத் துறை அமைச்சர் விசி சுக்லாவை அனுப்பியது. அவர் ஆரஞ்சு ஜூஸ் கொடுக்க ஜெயலலிதா போராட்டத்தை முடித்தார். சில, பல மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா கோரிய மத்திய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக…

திமுக ஆட்சியில் 1999 ஜூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறை தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இப்படுகொலைக்குக் காரணமான அரசுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தார்.

காவிரி நீர், ஈழத் தமிழர்கள் என ஜெயலலிதாவின் போராட்டங்கள் நீண்டன. குறிப்பாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் பிரதமர்களுக்கு கடிதம் எழுதுவதையும், தூதரக ரீதியான நடவடிக்கை கோருவதையும் அவர் செய்துவந்தார்.

அதன் நீட்சியாக, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தான் ஆட்சி செய்த காலங்களில் அக்டோபர் 3, 1991, மே 3, 2013 ஆகிய தேதிகளில் தமிழக சட்டப்பேரவையில், தீர்மானங்களை நிறைவேற்றினார். மேலும், 2008-ல் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கையும் அவர் தொடுத்திருந்தார்.

ஜெயலலிதா

ஆட்சியில் இல்லாத காலத்தில் திமுகவை எதிர்த்து அன்றாடம் போராட்டங்களை நடத்துவதை அவர் வழக்கமாக்கினார். இதில் விலைவாசி உயர்வு முக்கிய இடத்தைப் பிடித்தது. அதுபோல் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்ப்பதிலும் ஜெயலலிதா கடுமைகாட்டியது நினைவுகூரத்தக்கது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நீட் தேர்வு, உதய் மின் திட்டம் என பல திட்டங்களுக்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்டுவந்தார்.

2012-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்ததை மறக்க முடியாது.

மாநில அரசியலில் திமுகவை தீய சக்தி என்று சொல்லிச் சொல்லியே தனது பிரச்சாரங்களை முன்னெடுத்து திமுக vs அதிமுக, என்பதைவிட திமுக vs அம்மா என்ற பிம்பத்தை உருவாக்கினார். அம்மா உணவகம் தொடங்கி அனைத்து நலத்திட்டங்களுக்கும் அம்மா என்ற அடைமொழியைக் கொடுத்து தன்னை நிறுவினார். 2011-ல் தேமுதிகவை வளர்த்துவிட்டு விஜயகாந்தின் பிரபல்யத்தை ஆட்சியைப் பிடிப்பதற்காக அறுவடை செய்து கொண்ட வியூகம் கவனிக்கத்தக்கது.

ஸ்டாலினின் களப் போராட்டங்கள்

ஸ்டாலின் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மிகப் பெரிய மைலேஜ் கொடுத்தது 2016-ல் அவர் முன்னெடுத்த ‘நமக்கு நாமே’நடைபயணம், அவருக்கு பெரிய பலமாக இருந்தது. திமுகவை அப்போதைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவருக்கு பக்கபலமாக இருந்தது.

2017-ல் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டபோது மீண்டும் அதே பெயரிலான நடைபயணத்தை மேற்கொண்டார். இதெல்லாம் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு அசெட்டானது.

2021-ல் திமுக ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டிய நிலையில், சட்டப்பேரவைக்குள்ளும், வெளியேயும் ஸ்டாலின் சுழன்றடித்தார் என்றே சொல்ல வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, கள்ளச்சாராய மரணங்கள் போன்றவற்றிற்கு எதிராக ஸ்டாலின் வலுவான போராட்டங்களை முன்னெடுத்தார்.

நீட் தேர்வை கொண்டுவந்ததாக அதிமுகவை கண்டித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார். அரியலூர் அனிதா மரணம், திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டக் களமானது. மின் திட்டங்களில் அதிமுக மத்திய அரசுடன் சமரசம் செய்து கொண்டதாகவும் போராட்டம் நடத்தினார். அரசு ஊழியர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக இறக்கினார்.

ஜெயலலிதாவின் மறைவு, அதிமுகவின் உட்கட்சிப் பூசல், பாஜகவுடனான கூட்டணி ஆகியவை அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த ஸ்டாலினுக்கு துணைக்கு வந்தது.

அதிமுக ஆட்சியும் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று நீட் மரணங்கள் நிகழும்போது தொடங்கி ஒவ்வொன்றுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தது அதிமுக. கூடவே தமிழக பாஜகவும் போராட்டக் களத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டது. போகப் போக திமுக அரசைக் கண்டித்துப் போராடும் கட்சிகளின் எண்ணிக்கை இப்போது தவெக வரை அதிகரித்து நிற்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேள்வி கேட்பது, வெளிநடப்பு செய்வது, கறுப்பு பேட்ஜ் அணிவது தொடங்கி தர்ணா, முற்றுகை எனப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் – ஒழுங்கு சரியில்லை, கடனில் தவிக்கிறது தமிழகம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கி போராட்டங்களை நடத்தி வருகிறார்.

முன்கூட்டியே தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி, தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, அதிமுக ஆட்சியையும் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்ய ‘விடியா ஆட்சி – உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ என்ற தலைப்பிலான பிரச்சாரம் வரை முடுக்கிவிட்டிருக்கிறார்.

எல்லாமே அரசியல் தான் என்றாலும், இங்கே அரசியல் செய்ய மக்கள் பிரச்னைகளே வேர். சில பிரச்சினைகள் தீர்வு காணப்படும், சில பிரச்னைகள் அரசியல் செய்வதற்காகவே பிரச்னைகளாகவே வைக்கப்படும்.

(தொடரும்)


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Arresting and torturing differently-abled people?” – Anbumani condemns the DMK government

Even if the heads are smashed; we are all friends – DMK-Congress councilors in a group chat!