ஜனநாயகன்: தணிக்கை வாரியம் vs தயாரிப்பு நிறுவனம் – இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?

நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்சார் போர்டு தரப்பில், “படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு முடிவு செய்தது குறித்து பட நிறுவனத்துக்கு ஜனவரி 5-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. 6-ம் தேதி சான்று கோரி பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.

வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல், மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

#CBFC

மேலும், “14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது இடைக்கால முடிவு. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரமுடியாது. இதற்கிடையில் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது” எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது.

“படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

“ஜனநாயகன் வழக்கைப் பொறுத்தவரை, இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பின் மூன்று நாட்களில் அந்த குழு படம் பார்க்க வேண்டும். மறு ஆய்வு குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்” என சென்சார் போர்டு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

ஜனநாயகன்

தொடர்ந்து பட தயாதிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “படம் 9 ம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது அதுசம்பந்தமான உத்தரவு வழங்கப்படவில்லை” என புகார் தெரிவித்தார்.

“படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்று விட்டு நான்கு நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும்” என, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், “தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை.

ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும்” என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

“விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்து வைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும் போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், “ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும் வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

From now on, my leader is Nitin Nabin, says Prime Minister Modi; BJP leader at the age of 45! – Who is he?

Tirupparankundram: “They have no place in politics!” – Nitin Nabin sworn in as BJP leader