“கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும்” – பினராயி விஜயன்

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்

மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில், “உத்தரப் பிரதேச அரசு கிறிஸ்துமஸ் திருநாளின் விடுமுறையை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளைக் கொண்டாட கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய, நடவடிக்கைகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் ஆகும்.

கேரளம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. மாநிலத்தின் தபால் நிலையங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், பா.ஜ.க-வுடன் தொடர்புடைய பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதங்களை பாடவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி

இதற்கு, எதிர்ப்புகள் அதிகரித்ததால் பணியாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை திருவனந்தபுரம் தபால் நிலையத்தின் தலைமை அதிகாரி, ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட குழுவினர் மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதல்களை பா.ஜ.க தலைவர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சில தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலர் அழுத்தம் கொடுத்து மிரட்டுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அது குறித்து அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் அமைதி மற்றும் மனிதநேயச் செய்தியை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டவை.

அரசியலமைப்புச் சுதந்திரங்களையும், கேரளாவின் பன்மைத்துவ நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது. கொண்டாட்டங்களைத் தடுப்பவர்கள் மீதும், மதப் பாகுபாட்டில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி

மதச்சார்பின்மை மற்றும் சகமனித வாழ்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கேரளா உறுதியாக எதிர்க்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

‘Father-in-law attacked with a pestle; husband assisted him’ – ongoing family violence tragedy continues

How did the terrible accident that took 9 lives in Cuddalore happen? Video.