தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் வருகிற 28 ஆம் தேதி வெளியிடப்போகிறார் என பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவலால் மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியிருந்தது. விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 பேர் விருப்ப மனு வாங்கியதாகவும், மொத்தமாக 50,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாவும் கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.
நிரப்பிய விருப்ப மனுக்களை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்ப மனுக்களை சமர்பித்திருந்தனர்.
இடையில் ஒரு நாள் வீடியோ கால் மூலம் மா.செக்கள் கூட்டத்தை நடத்திய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ‘இத்தனை பேருக்கும் நேர்காணல் நடத்தி வேட்பாளரை அறிவிப்பது பெரும் சவாலாக இருக்கும். அதனால் தொகுதிக்கு 2-3 பேரின் பெயரை நீங்களே டிக் அடித்து கொடுங்கள். அவர்களை மட்டும் பரிசீலிக்கலாம்’ என்றார்.

அதன்படி மா.செக்களும் ஒரு விருப்பப்பட்டியலை தலைமைக்கு கொடுத்திருந்தனர். வேட்பாளர் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்கிற தகவலும் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால், திடீரென கடந்த இரண்டு நாட்களாக கட்சிக்குள் புதிய தகவல் ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ‘முதற்கட்டமாக 80 வேட்பாளர்களை விஜய் டிக் அடித்து முடிக்க, பட்டியலும் ரெடியாகிவிட்டது. பிப்ரவரி 28 ஆம் தேதி தலைவரே முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பை வெளியிடப்போகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் இரண்டாம் வாரத்துக்குள் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்’ கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றனர்.
விருப்ப மனு தாக்கல் செய்த நிர்வாகிகள் காதிலும் இந்த தகவல் விழ அவர்கள் ஒருவித அதிருப்தியில் ஆழ்ந்திருக்கின்றனர். ‘விருப்ப மனு விநியோகத்தை அவ்வளவு படோபடமாக நடத்திவிட்டு, யாருக்குமே நேர்காணல் நடத்தாமல் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்தால் என்ன நியாயம்? எல்லா கட்சிகளிலும் நேர்காணல் என்பது கண்துடைப்பாகத்தான் நடக்கிறது. இங்கே அப்படி இருக்காது என நினைத்தோம். ஆனால், இப்போது வெளிவரும் தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதும் இந்த தகவல் உண்மையாக இருக்காது என நம்புகிறோம். தலைமையிலிருந்து வேட்பாளர் தேர்வு பற்றி முறையாக தகவல்களை பரிமாற வேண்டும்’ என்கிறார் டெல்டாவை சேர்ந்த மா.செ ஒருவர்.
குழம்பி நிற்கும் நிர்வாகிகளுக்கு தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.