வங்க தேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, ஆவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்டில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர்.
ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர் போராட்டக் குழுவினர் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இடைக்கால அரசு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் ‘ஜூலை சாசனம்’ (July Charter) என்ற பெயரில் `பிரதமரின் அதிகாரத்தைக் குறைத்தல், பதவிக் கால நிர்ணயம்’ போன்ற புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது.
இந்த நிலையில்தான் வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 300 நாடாளுமன்றத் தொகுதியில், வங்க தேசத்தில் ஆட்சி அமைக்க 151 இடங்களில் வெற்றிப்பெற வேண்டியது அவசியம்.
இந்தத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான கூட்டணியும், ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) தலைமையில், 2024 மாணவர் எழுச்சியில் உருவான தேசிய குடிமக்கள் கட்சி (NCP) உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணி என இரு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதின.
நேற்று (12-ம் தேதி) காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவின் போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை என சுமார் 10 லட்சம் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி, இரவு முழுவதும் நடைபெற்றது. பிப்ரவரி 13 (இன்று) காலைக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போதுவரை அறிவிக்கப்பட்ட முடிவில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கத் தயாராகியுள்ளது.
வங்க தேச ஊடகங்கள் வழங்கிவரும் தகவலின்படி வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 151 இடங்கள் என்ற பெரும்பான்மை அளவைத் தாண்டி, 185 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி தலைமை வகித்தக் கூட்டணி 56 இடங்களை வென்றுள்ளது. இன்னும் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 14 தனித்தனி வன்முறைச் சம்பவங்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டு வங்க தேச அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஆவாமி லீக் கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலுடன் சேர்த்து ‘ஜூலை சாசனம்’ குறித்த மக்கள்தீர்ப்பு வாக்கெடுப்பும் (Referendum) நடைபெற்றது. அதில் பெரும்பாலான மக்கள் (சுமார் 70% மேல்) ‘ஆம்’ (Yes) என்று வாக்களித்துள்ளனர். இது அரசியலமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.