ராகுலா, பிரியங்காவா? – கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சியில் தங்களுக்கான பணிகளை பிரித்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே ராகுல் காந்தி அணி, பிரியங்கா வதேரா அணி என இரு அணிகள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இதில் பிரியங்கா காந்தி அஸ்ஸாம் மாநில தேர்தல் பொறுப்பை தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளார்.

தன்னுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு கட்சியில் டி.கே.சிவகுமார், புபேஷ் பாகல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் புன்வார் ஜிதேந்திர சிங் ஆகி்யோருடன் செயல்பட்டு வருகிறார். இந்த அணிதான் அஸ்ஸாம் மாநிலத்தில் போட்டியிடப்போகும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 126 பேரை தேர்வு செய்ய இருக்கிறது.

அதற்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் புபன் போரா பா.ஜ.க-வில் சேரப்போவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தங்களது பக்கம் இழுத்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் கட்சி, கூட்டணி குறித்து பேசவோ அல்லது கட்சியில் இருக்கும் உள்கட்சி பிரச்னைகளை சரி செய்யவோ பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று மாநில தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

ராகுல் காந்திக்கு கேரளா

மற்றொருபுறம் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரளாவில் கட்சி ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்று போட்டி இப்போதே கட்சிக்குள் உருவாக ஆரம்பித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா எப்படியும் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கே.சி.வேணுகோபால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்க ராகுல் காந்தி உதவுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசி வந்த எம்.பி.சசி தரூர் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் ராகுல் காந்தி அணியில் கேரளா தேர்தல் பணிகளை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இது தவிர கர்நாடக அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், ராஜ்யசபா எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி மற்றும் கட்சித் தலைவர் கன்ஹையா குமார் ஆகியோர் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பிற பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியோடு சேர்ந்து சசி தரூர் முழு மனதோடு வேலை செய்வாரா என்ற கேள்வி இருந்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த பொறுப்பும் வேணுகோபால் வசம் வந்திருக்கிறது.

கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருப்பதால் வேணுகோபால் முதல்வர் பதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். கட்சியில் ராகுல் காந்திக்கு வேண்டப்பட்டவர்கள் அவருடனும், பிரியங்கா காந்திக்கு வேண்டப்பட்டவர்கள் பிரியங்காவுடனும் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுகின்றனர். இதில் யார் தங்களது செல்வாக்கை நிரூபிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் ராகுல் காந்திக்கு இத்தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பிரியங்கா காந்தி வெற்றி பெறச்செய்துவிட்டால் கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரிக்கலாம். இது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்திடம் பேசியபோது, ‘இரு தலைவர்களும் பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டு செய்கின்றனர். இதில் கோஷ்டி பிரச்னை எதுவும் கிடையாது” என்றார். பாண்டிச்சேரியையும் இத்தேர்தலில் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Three Indians swept away by the flood to Pakistan – What did they do there for 30 months?

“There is nothing wrong in asking for a share in power!” says Thol. Thirumavalavan.