பாலியல் குற்றங்கள்: “புதருக்குள்ளேயுமா போலிஸ் லைட் போடமுடியும்?”- எஸ்.வி சேகர் சர்ச்சை பதில்

திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டப் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். அப்போது, “எனக்கு 1979-ல் திருமணம் நடந்தது. இப்போது 45, 46 ஆண்டுகளாக ஒரே குடும்பம், ஒரே மனைவி என வாழ்க்கை சந்தோஷமாகச் சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சில விஷயங்கள் எல்லை மீறிப் போகும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.

குறிப்பாகப் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், தங்கள் படிப்பை விட ஒழுக்கத்தை மிக அதிகமாகப் பேண வேண்டும். அப்போதுதான் அது ஒரு சிறப்பான வாழ்க்கையாக அமையும்.

எஸ்.வி சேகர்
எஸ்.வி சேகர்

குழந்தைகளுக்கு நாம் கல்வியை விடவும் மேலாகக் கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டதால் தான் மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். எத்தனையோ மருந்துக் கடைகளில் விஷம் கூடத்தான் விற்கப்படுகிறது, அதற்காக நாம் அதை வாங்கிப் பருகுகிறோமா?

நாம் செய்யும் தவறுக்கு அரசாங்கத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்? எனக்கு 75 வயது ஆகிறது. இதுவரை என் வாழ்க்கையில் ஒரு துளி மது அருந்தியது கிடையாது, சிகரெட் பிடித்தது கிடையாது. சினிமாவில் 95 படங்கள் நடித்திருந்தாலும், சினிமா துறையில் இருப்பதால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

அதேபோல, சினிமா நடிகர்களைத் திரையில் மட்டும் நடிகர்களாகப் பாருங்கள். அவர்கள் எல்லாம் தெரிந்த புத்திசாலிகள் என்று நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏழாவது முறையாக தி.மு.க ஆட்சி அமைக்கும். எனது நண்பர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். தி.மு.க கூட்டணி 160-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

இப்போது எடப்பாடி பழனிசாமி மாதம் 2000 ரூபாய் தருவதாகக் கூறுகிறார். ‘இதற்கான பணத்தை எப்படித் திரட்டுவீர்கள்’ என்று கேட்டதற்கு, வரியை உயர்த்திப் பெற்றுக் கொள்வேன் என்கிறார். அப்படியென்றால், உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கே கிள்ளிப் போடுகிறேன் என்று தான் அர்த்தம். மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மாறாக, தி.மு.க ஆட்சியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் சுமார் 65 ஏழை மாணவர்கள் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவாகியுள்ளனர். முன்னரெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே இந்த இடத்திற்கு வர முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று அடித்தட்டு மக்களும் வர முடியும் என்று திராவிட மாடல் அரசு நிரூபித்துள்ளது. தி.மு.க-வின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 8000 முதல் 10,000 ரூபாய் வரை பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சென்றடைந்துள்ளது. மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், மாணவிகளுக்கு 1000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை போன்றவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

விஜய் பேசும்போது “இலவசம் வாங்காதீர்கள், ஆயிரம் ரூபாயைத் தொடாதீர்கள்” என்றார். ஆனால், அவரே இப்போது “தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் தங்க மோதிரம் போடுவேன்” என்கிறார். தமிழகத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 2000 குழந்தைகள் பிறக்கின்றன. அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்? குழந்தை பிறப்பதற்குச் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எல்லாம் கிடையாது. இவ்வளவு தங்கத்திற்கு அவர் எங்கே போவார்? அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இடமே அவ்வளவு தங்கம் இருக்காது. விஜய் வெறும் வாய்க்கு வந்ததை உளறுகிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

விஜய் எனது நண்பரின் மகன் தான். ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு என்பதை அவர் இதுவரை புரிந்து கொள்ளவில்லை. “திமுக தீய சக்தி” என்று சொல்லிக் கொண்டே அவர் நடத்திய மாநாட்டில் 41 பேர் இறந்து போனார்கள். சமீபத்தில் ஒரு பையன் இறந்தான். அதற்கு முன் ஆறு பேர் இறந்தார்கள். மக்களைக் கோவிலுக்கு நேர்ந்துவிட்டது போல அவர் பலி கொடுத்துக் கொண்டே போகிறாரே தவிர, இவரால் எப்படி மக்களை வாழ வைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

அவரது கட்சியில் சேர்ந்திருப்பவர்கள் எல்லாம் மற்ற கட்சிகளிலிருந்து விரட்டப்பட்டவர்கள் அல்லது அங்கே வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான். அப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்? அவர்கள் வாங்கும் வாக்குகள் அதிமுகவின் வாக்குகளைத் தான் பிரிக்குமே தவிர, திமுகவிற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பா.ஜ.க என்பது ஒரு மிகப்பெரிய பாராங்கல் போன்றது. அதைக் கட்டிக்கொண்டு யார் தண்ணீரில் குதித்தாலும், அவர்கள் மூழ்கிப் போவார்கள். பாராங்கல்லுக்கு ஒன்றும் ஆகாது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். 2027-க்குப் பிறகு மோடி ஆட்சியில் இருப்பாரா என்பதே சந்தேகம் தான்.

நான் 2011-லேயே மோடியிடம் சொன்னேன், நீங்கள் மூன்று முறை பிரதமராக இருப்பீர்கள், அது 2027 வரை தான் இருக்கும் என்று. அதில் மூன்று முறை பிரதமர் என்பது பலித்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வைத்து நடத்தப்படும் பா.ஜ.க ஆட்சி, சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுகிறது. இது தவறான விஷயம்.

மோடி - நெதன்யாகு
மோடி – நெதன்யாகு

மத்திய அரசின் நிர்வாகம் சரியில்லை என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தேஜஸ் ரயிலில் வந்தேன், அதில் வழங்கப்பட்ட இட்லி, வடையை வாயில் வைக்க முடியவில்லை. ஆனால், டிக்கெட் விலை 2000 ரூபாய். இது ஏறக்குறைய விமானக் கட்டணத்திற்குச் சமம். சாமானிய மக்கள் பயணம் செய்யும் ரயிலை மோடி அரசு மாற்றியமைத்துவிட்டது.

ஈரான் போர் வரப்போவது நமக்கு லேட்டாகத் தெரியும், ஆனால் பிரதமருக்குத் தெரியாதா? அதற்கு முன்னெச்சரிக்கையாக இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிவாயுவை (Gas) சேமித்து வைத்திருக்க முடியாதா? அவர் தனி விமானத்தில் ரஷ்யாவிற்குப் போய்விட்டார், அவருக்கு எரிவாயு தட்டுப்பாடு பற்றித் தெரியாது. ஆனால் நாம் தான் வரிசையில் நிற்கிறோம்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மே 2-ம் தேதிக்குள் பெட்ரோல் விலையை 10 ரூபாயும், சிலிண்டர் விலையை 50 ரூபாயும் உயர்த்துவார்கள். அவர்களுக்குத் தமிழகத் தேர்தலைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது.

இந்தத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தொகுதிப் பங்கீட்டை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் பங்கு வெற்றியில் மிக முக்கியமானது. கமல்ஹாசன் தனக்குத் தொகுதிகள் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டது அவரது அரசியல் நாகரிகத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

ஆனால், வேல்முருகன் போன்றவர்களைப் பாருங்கள். ஒரு சீட்டைப் பெற்றுக்கொண்டு சட்டசபையில் முதல்வரைப் புகழ்ந்து தள்ளினார். இரண்டாவது சீட் கிடைக்கவில்லை என்றவுடன் முதலமைச்சரையே அசிங்கமாகப் பேசுகிறார். இந்தத் தேர்தலில் பாமகவின் ‘மாம்பழம்’ சின்னம் முடக்கப்படலாம் அல்லது அவர்கள் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய நிலை வரலாம்.

வேல்முருகன்
வேல்முருகன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது. என் வீட்டு பீரோவைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடிவிட்டான் என்றால் அதற்குச் சட்டம் ஒழுங்கு எப்படிப் பொறுப்பாகும்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. வெளியே கழிவறைக்குச் சென்றால் கூடத் துணைக்கு ஆள் செல்ல வேண்டும். சுதந்திரம் வேறு, பாதுகாப்பு வேறு. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பத்து கோடி மக்கள் தொகையில் நான்கைந்து பாலியல் குற்றங்கள் நடக்கலாம். ஆனால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். என்கவுண்டர் செய்யும்போது மனித உரிமை பேசுகிறார்கள்.

உங்கள் வீட்டுப் பெண் பாதிக்கப்பட்டால் அப்போது சுட வேண்டும் என்று தோன்றாதா? லாக்-அப் மரணங்களில் சில போலீஸ்காரர்கள் மிருகத்தனமாக நடக்கிறார்கள், அவர்களைச் சஸ்பெண்ட் செய்யாமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஒரு பெண் புதருக்குப் பின்னால் மறைந்து நின்றபோது குற்றவாளிகள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அதற்காகப் போலீஸ் எல்லா புதருக்குள்ளுமா லைட் போட்டு வைப்பார்கள்? ஒரு நியாயமான குடிமகனாக இதைக் கேட்கிறேன். நம்மை நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்தியாவில் அதிகப்படியான பாலியல் குற்றங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் நடக்கின்றன என்பதைப் பாண்டே போன்றவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

பா.ஜ.க என்பது டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் கட்சி. இது திராவிட மண். இங்கே பிறந்தவன் தமிழன், திராவிடன். அதில் மதம் பார்ப்பது தவறு. விஜய் தொப்பி போட்டுக்கொண்டு கஞ்சி குடிக்கிறார், ஆனால் பாண்டிச்சேரியில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் ஆதரவு அளிக்கவில்லை. அப்புறம் எப்படி அவர் சிறுபான்மையினருக்குச் சாதகமானவர் என்று நம்புவது? எனவே, தமிழகத்தின் நலனுக்காகத் தி.மு.க-விற்கு ஓட்டுப் போடுவதே சிறந்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க-வின் வெற்றிக்காக, ராமருக்கு அணில் உதவியது போல நானும் பிரச்சாரம் செய்வேன்.” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Only these friendly countries can safely cross the Strait of Hormuz” – Is India on Iran’s list?

‘The former Union Minister who tried to take over the party immediately after Ajit Pawar’s death’ – Sharad Pawar’s nephew, Pakeer