`பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடிமை பழனிசாமி, புதுச்சேரியில் ரங்கசாமி!’ – கடுகடுத்த ஸ்டாலின்

“ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள்…”

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று மாலை புதுச்சேரி வந்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும் ஒன்றாகத்தான் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்த முறை புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துகிறார்கள்.

தேதியை மாற்றினால் நம்முடைய உணர்வுகளை மாற்றி விட முடியுமா ? தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வும் மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும் என்பதுதான். டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு தலையாட்டுகிற அடிமைகள் கூட்டத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை.

அதே உணர்வுதான் புதுச்சேரி மக்களிடமும் இருக்கிறது. புதுச்சேரியை அழிவில் இருந்து பாதுகாக்கவும், புதுச்சேரியை வளர்க்கவும் நமது கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். அழகான புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அலங்கோலமான ஆட்சி நடக்க நீங்கள் அனுமதிக்கலாமா ?

ரங்கசாமி

புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை என்ன ? தனி மாநில அந்தஸ்து. அதற்காக 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியாகிவிட்டது. ஆனால் ஒன்றிய அரசுக்கு மனம் இல்லை. பா.ஜ.க-வை பொறுத்தவரை தமிழ்நாடு போன்ற மாநிலங்களை நகராட்சிகளாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறது.

அதேபோல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் ஊராட்சி அளவுக்கு நடத்துகிறார்கள். இங்குள்ள அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா ? சட்டசபைக்கு மாண்பு இருக்கிறதா ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மரியாதை இருக்கிறதா ?

இங்கு ஆல் இன் ஆலாக ஆளுநர்தான் இருக்கிறார். ஆளுநர் மூலம் ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள். தாய்மொழியை இழந்த இனங்கள் வாழ்ந்தது இல்லை என்பதுதான் வரலாறு. ஆனால் புதுச்சேரியில் இப்பொழுது என்ன நடக்கிறது ?

சந்தன மரக் கடத்தல் முதல் போலி மருந்துகள் முறைகேடு வரை

ஆரம்பக் கல்வி நிலையங்களிலேயே சி.பி.எஸ்.இ கல்வியை கொண்டு வந்து, அதன்மூலம் தாய்மொழிக் கல்வியை அழித்திருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு. இவர்களை மறுபடியும் ஆட்சிக்கு வர அனுமதிக்கலாமா ? கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு வந்த பிரதமர் மோடி, பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என்று சொன்னார்.

ஆனால் உண்மையில் வொர்ஸ்ட் புதுச்சேரியாக இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி வொர்ஸ்ட் ஆக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இங்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, இரட்டை எஞ்சின் ஆட்சியால் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.

ஆனால் புதுச்சேரி எங்கு வளர்ந்து இருக்கிறது ? ஒருவேளை கடலுக்கு அந்த பக்கம் இருக்குமோ ? அப்படி இல்லை இதுதான் வளர்ந்த புதுச்சேரி என்றால், நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் இருக்கிறதா ?

புதுச்சேரியில் ஸ்டாலின்

வில்லியனூரில் ஒரு அமைச்சருக்கு சொந்தமான குடோனில் இருந்து, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கல்காரர்களின் புகலிடமாக புதுச்சேரியை மாற்றியதுதான் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் வளர்ச்சியா?

ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் விஷவாயு தாக்கி மூன்று அப்பாவிகள் உயிரிழந்தது எப்படி ? புதுச்சேரி அரசின் மெகா ஊழல்தான் அதற்கு காரணம். அதுகுறித்து விசாரணை செய்யப்பட்டதா ?

அதையெல்லாம் விட கொடுமையாக, தரமற்ற போலி மருந்துகளை உற்பத்தி செய்து மக்களின் உயிருடன் விளையாடி இருக்கிறார்கள். பலகோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை தயாரித்த அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிக்கினார்கள். ஆனால் அந்த விசாரணை முடக்கப்பட்டது. இதுதான் இரட்டை எஞ்சின் ஆட்சியின் லட்சணம்.

“கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ரோடு ஷோ நடத்துகிறீர்களே…”

மாநில அந்தஸ்து குறித்து அவர்கள் பேசவே இல்லை. அவர்களுக்குத் தேவையென்றால் ஒரு மாநிலத்தை உடைத்து புதிதாக ஒரு மாநிலத்தை உருவாக்குவார்கள். புதுச்சேரிக்கு இப்படி துரோகம் இழைத்த பிறகும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று அதே வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற வருகிறார் என்றால், அவர்கள் புதுச்சேரி மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் ?

எந்த முகத்தை வைத்துக்கொண்டு உங்களிடம் பிரதமர் வாக்கு கேட்க வருகிறார் ? இப்படிப்பட்ட டப்பா எஞ்சினை மறுபடியும் கொண்டு வருவோம் என்று பேசலாமா ? புதுச்சேரி இவ்வளவு அவலங்களை சந்தித்ததற்கு மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் காரணம். முதல்வராக இருந்த ரங்கசாமி இந்த ஐந்தாண்டு காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முயற்சி செய்தாரா ? ஏன் நடத்தவில்லை ?

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுடன் ஸ்டாலின்

ஏற்கனவே ஆளுநர் மூலம் நம்மை ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் போலத்தான் நடத்துகிறார்கள் என்று நினைத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டாரோ என்று தெரியவில்லை. தனக்காக குரல் கொடுக்க முடியாதவர் எப்படி உங்களுக்காக குரல் கொடுப்பார் ?

என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி செய்யும் புதுச்சேரியில் கள்ளச்சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இவ்வளவு நடந்தபிறகும் பிரதமரை அழைத்து வந்து கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ரோடு ஷோ நடத்துகிறீர்களே… வெட்கமாக இல்லையா ?

பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி போலத்தான் புதுச்சேரியில் ரங்கசாமி இருக்கிறார். தன்னுடைய அரசைப் பற்றி சட்டமன்றத்தில் அவரே சொன்ன ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா ? `அதிகாரமே இல்லாத அரசு இது.

“ரங்கசாமி அவர்களே பீகாரில் நிதிஷ்குமாரை நினைத்துப் பாருங்கள்”

தேர்தலில் போட்டியிடுவதில் அர்த்தமே இல்லை’ என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரா இல்லையா ? இந்தியா கூட்டணியை விமர்சித்த ரங்கசாமி இப்போது தன்னுடைய முதுகைப் பார்க்கிறாரா ?

புதிதாக ஒரு கட்சியை சேர்த்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவேன் என்று சொன்ன ரங்கசாமி அவர்கள், 24 மணி நேரத்தில் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார். இதுதான் அடிமை மனோபாவம். ரங்கசாமி அவர்களே பீகாரில் நிதிஷ்குமாரை நினைத்துப் பாருங்கள்.

அவருடைய நிலை உங்களுக்கு வராது என்று என்ன நிச்சயம் ? மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டு கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க நினைத்தவர்கள் அவர்கள். பா.ஜ.க-வுக்கு தெரிந்த இந்த ரூட்டில் ரங்கசாமியை எங்கே எப்போது கவிழ்க்கலாம் என்றுதான் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினுடன் மாநில அமைப்பாளர் சிவா

இது ரங்கசாமி அவர்களுக்கும் தெரியும். சாமானியப்பட்டவரா அவர் ? பதவிக்காக எப்படியெல்லாம் அவர் மாறி மாறிப் போவார். அதனால்தான் தன்னுடைய அரசு அதிகாரமே இல்லாத அரசு என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். முதல்வர் ரங்கசாமி அவர்களே… தலைமைச் செயலாளரை மாற்றுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா ?

ஆளுநர் மாளிகையில் எத்தனை கோப்புகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன ? பா.ஜ.க மீது இருக்கும் பாசத்தால் புதுச்சேரி மக்களுக்கு துரோகம் செய்வது நியாயமா ? கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் கேட்ட பட்ஜெட் தொகையை ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறதா ?

இப்படி எல்லாம் வஞ்சித்துவிட்டு கவர்ச்சி வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் ரங்கசாமி. ஆனால் புதுச்சேரி மக்கள் இந்தமுறை ஏமாற மாட்டார்கள். மாற்றத்திற்கும் புதிய விடியலுக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள்” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Started nomination scrutiny; Adhav Arjuna’s nomination withdrawn in Villivakkam

Tirupattur: Jalakambarai bus stop on the verge of collapsing; passengers are in fear.