“திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றால் புரட்சி வெடிக்கும்”- கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றபின் முதன் முதலாக குமரி மாவட்டம் வந்த ராஜேஷ்குமாருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் விளவங்கோடு எம்.எல்.ஏ டி.டி.பிரவீன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தபின் அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “இது மிகவும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும். ஏனென்றால், கடந்த 1967-ம் ஆண்டிற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு 59 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கக்கூடிய ஒரு அரசு இங்கு அமைந்ததே இல்லை. அதன் காரணமாகவே, பெருந்தலைவர் காமராஜருடைய கனவு இன்றைக்கு நனவாகி, நிறைவேறியிருக்கிறது. அதுமட்டுமன்றி, எங்கள் கட்சியில் இருக்கின்ற கடைநிலைத் தொண்டர்களுடைய கனவும், அவர்களுடைய நீண்ட நாள் ஆசையும் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்பதை நான் மனதார உணருகிறேன். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலே, எந்தவொரு காலகட்டத்திலும் நாங்கள் யாருடைய முதுகிலும் குத்தியது கிடையாது. ஏனெனில், நீங்கள் வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த 1967-ம் ஆண்டிற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில், ஏதாவது ஒரு திராவிடக் கட்சி கூட்டணி இல்லாமல் தனியாக அரசு அமைத்திருக்கிறதா என்று நீங்கள் பாருங்கள். ​கடந்த 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. ஆனால், அன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியோடுதான் போட்டியிட்டது. உண்மையில் யார் யாருடைய முதுகில் குத்தினார்கள் என்ற உண்மையை அவர்கள் நன்றாக உணர வேண்டும். எல்லா காலகட்டத்திலும் இவர்களுக்குத் தேர்தலில் மட்டும்தான் கூட்டணி தேவைப்படுகிறது, தேர்தல் முடிந்தவுடனே அவர்கள் மட்டுமே ஆட்சி பண்ணுவார்கள்; இதுதான் இங்குத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் யாருடைய முதுகிலும் குத்தவில்லை. கடந்த தேர்தலிலும், அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு பத்து, இருபது வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்ந்து கூட்டணி அமைத்து, அவர்களுக்கு நாங்கள் தேர்தல் காலத்திலே களத்தில் மிகக் கடுமையாக வேலை செய்திருக்கிறோம். எங்களுடைய தொண்டர்களுடைய அந்தத் தீவிரமான உழைப்பினால் மட்டும்தான் அவர்கள் முதலமைச்சராக ஆகியிருக்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ராஜேஷ்குமார்

சென்னையில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணிக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி  பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தி.மு.க-வின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி என்பது பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். தி.மு.க போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின்  வாக்குகளும், காங்கிரஸ் போட்டியிட்ட 28 இடங்களில் தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளும்  வழங்கப்பட்டிருக்கின்றன. ‘தி.மு.க-வின் வாக்குகளால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றார்கள்’ என்று தேர்தல் தீர்ப்பு வெளிவந்த பிறகு பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தி.மு.க-வின் மேலாதிக்க மனோபாவத்தைதான் வெளிப்படுத்துகிறது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகும்கூட தி.மு.க.வினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக, வி.சி.க ஒழிக என்று முழக்கங்களை எழுப்பியதோடு, தலைவர் ராகுல் காந்தியையும் விமரிசனம் செய்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் நாகரிகமற்ற கோஷங்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் எழுப்பப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு வரவேற்பு அளித்த எம்.எல்.ஏ டி.டி.பிரவீன்

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே தி.மு.க வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் மு.க.ஸ்டாலின் எடுத்துகொண்ட முயற்சியை யாரும் மறக்க முடியாது. தற்போதைய சூழலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகப் பரவலாகப் பேசப்படுவது குறித்து கேட்கிறீர்கள். அதுபோன்ற ஒரு முயற்சி நடந்தது என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலை ஒருவேளை வந்தால், தமிழக மக்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருப்பார்கள் என்பது அந்தந்த காலகட்டத்திலேதான் தெரியவரும். ஜனநாயக முறையிலே மக்கள் தங்களின் மிகப்பெரியதொரு தீர்ப்பைக் கொடுத்த பிறகு, இன்றைக்கு அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய  கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து, தங்களின் சுயநல உள்நோக்கத்தைக் கொண்டு, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆட்சி அமைத்து, அதிலே யாராவது ஒருவர் முதலமைச்சர் ஆகலாம் என்று முயற்சியை எடுத்தால், அது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை வெடிக்கச் செய்யும்” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Kerala: State Home Minister announces ‘Operation Toofan’ to curb drug trafficking!

How was Rs. 34 crore worth of blood money raised to save a Kerala driver sentenced to death in Saudi Arabia?