`ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி டு முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்; புலம்பும் உடன்பிறப்புகள்!’ | கழுகார்

கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு தொகுதியில், கடந்த இரண்டு தேர்தல்களாக நூலிழையில்தான் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது தி.மு.க.

வரும் தேர்தலில் அந்தத் தொகுதியை அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க எதிர்பார்ப்பதால், ‘தொகுதியை தட்டித் தூக்குவதற்கு இதுதான் நேரம். சரியாக பணியாற்றினால் வெற்றிப் பெற்றுவிடலாம்’ என்று கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறாராம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதனால் பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக அது மாறியிருப்பதை உணர்ந்துவிட்டனர் உடன்பிறப்புகள். சிட்டிங் மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் மா.செ மருதமலை சேனாதிபதி, முன்னாள் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன், குறிச்சி பிரபாகரன், ஏர்போர்ட் ராஜேந்திரன் என்று ஏராளமானோர் கிணத்துக்கிடவு சீட்டுக்கு முட்டி மோதுவதால், அதிரி புதிரி ஆகியிருக்கிறது கோவை தி.மு.க.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

‘வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடலாம்’ என்பதால், 50 ஸ்வீட் பாக்ஸ் வரையில் இறக்குவதற்கும் பலருமே தயாராக இருக்கிறார்களாம். இந்த போட்டியாளர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தனக்கு அடக்கமான நிர்வாகி ஒருவருக்கு சீட் வாங்கித் தர செந்தில் பாலாஜி தரப்பு மேலிடத்தில் பேசுவதால், கோவையில் அனல் வீசுகிறது.

மதுரை மாநகராட்சியில் வெடித்த முறைகேடு புகாரால், கடந்த இரண்டு மாதங்களாக மன்றக் கூட்டமே நடக்கவில்லை. அது குறித்தான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோது, ‘கூட்டத்தை நடத்தவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தது நீதிமன்றம்.

இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணைமேயர் நாகராஜனை வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கிடையே, ‘நான்கு கவுன்சிலர்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் நமக்குத் தலைமை ஏற்பதா?’ என்று திமுக கவுன்சிலர்கள் சிலர் பிரச்னையை கிளப்புகிறார்களாம்.

மிரண்டு போன துணை மேயர் தரப்பு, பிரச்னையை சரி செய்ய அமைச்சர் மூர்த்தியின் உதவியை நாடியிருக்கிறார்கள். ‘பெயருக்குத்தான் துணை மேயர் பதவி தந்தார்களே ஒழிய, எந்த அதிகாரமும் அளிக்கவில்லை. இப்போது மன்றத்தை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பையும் பறிக்கப் பார்க்கிறார்கள் தி.மு.க-வினர். தொட்டதற்கு எல்லாம் அமைச்சரிடம் பஞ்சாயத்துக்கு போய் நின்றால் சரிவருமா…’ என்று கொதிக்கிறார்கள் தூங்கா நகர தோழர்கள்.

சமீபத்தில், ‘தமிழ்நாடு தலை குனியாது’ கூட்டம் ஒரத்தநாட்டில் நடந்து முடிந்தது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கத்தைத் தோற்கடித்த இராமச்சந்திரனும், வைத்திலிங்கமும் ஒரே மேடையில் இருந்ததைப் பார்த்து தி.மு.க தொண்டர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

மனமாச்சரியங்களை மறந்து மேடையிலேயே, ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை’ என்று வைத்திலிங்கம் மீது பாசமழையைப் பொழிந்திருக்கிறார் இராமச்சந்திரன். பதிலுக்கு வைத்திலிங்கமும் அதே தொனியில் பேசுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்த வேளையில், இராமச்சந்திரனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம் வைத்திலிங்கம்.

‘அந்தத் தேர்தல் தோல்வியிலிருந்துதான் வைத்திக்கு அ.தி.மு.க-வில் பின்னடைவு ஏற்பட்டது. அந்த வருத்தம் இப்போதும் ஆழமாக மனதில் இருப்பதாலேயே, இராமச்சந்திரனோடு ஒட்டி உறவாட முடியாமல் முறுக்கிக் கொண்டிருக்கிறார் வைத்தி. தேர்தல் சமயத்தில் இப்படி முறுக்கிக் கொண்டிருந்தால் கட்சிக்குத்தானே பின்னடைவு’ என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

சமீபத்தில் வெளியான காக்கி அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில், ஒரே பணியிடத்தில் பணிபுரிந்த இரண்டு பெண் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

அதுகுறித்து விசாரித்தபோது, ‘காக்கி அதிகாரிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவித்ததில் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு என்று இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், துறை மேல்மட்டத்தில் ஏற்பட்ட சிக்கலே காரணம். இதுபோன்ற குளறுபடிகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தவே, அந்த இரண்டு பெண் அதிகாரிகளும் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறார்கள் காக்கிகள்.

ஆனால், ‘இந்த குளறுபடிகளுக்கு துறையின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரே பொறுப்பு. அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எங்களை பலிகடா ஆக்கிவிட்டனர்’ என்று புலம்புகிறார்கள் மாறுதலான அதிகாரிகள் இருவரும்.

சென்னை துறைமுக நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிந்த அதிகாரி, சமீபத்தில் மத்திய அரசின் வேறொரு துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தினம்தோறும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் வந்து செல்லும் முக்கியமான துறைமுகம் என்பதால், துறைமுக உயர் பொறுப்பில் அமர்வதற்கு கோட்டையிலுள்ள சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம்.

‘தமிழக அரசின் கீழ் பணிபுரிய விரும்பாத சில அதிகாரிகள், யார் கண்ணிலும் படாத இந்த பவர்புல் இடத்திற்குச் சென்றுவிட துடிக்கிறார்கள். துறைமுக நிர்வாகப் பதவிக்குத் தீவிரமாகவே காய் நகர்த்தும் ஒரு சீனியர் அதிகாரி, டெல்லியோடு நெருக்கமாக இருக்கும் தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகளின் சிபாரிகளைக் கேட்டிருக்கிறார். அவரை ஓரங்கட்டிவிட்டு பதவியை எட்டிப்பிடிக்க மற்றவர்களும் ‘நீதி’ பிரமுகர் ரூட்டில் முயற்சிக்கிறார்கள். போட்டி கடுமையாகவே இருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

A rare event in Indian politics: ‘No-confidence motion against the Speaker’ – a story told by history!

Israeli Prime Minister met Trump; what was discussed about Iran?